Kathir News
Begin typing your search above and press return to search.

கொடூர சம்பவம் - புதுச்சேரியில் தத்வபோதானந்தா சுவாமிகள் மர்ம நபர்களால் அடித்து படுகொலை!

கொடூர சம்பவம் - புதுச்சேரியில் தத்வபோதானந்தா சுவாமிகள் மர்ம நபர்களால் அடித்து படுகொலை!

கொடூர சம்பவம் - புதுச்சேரியில் தத்வபோதானந்தா சுவாமிகள் மர்ம நபர்களால் அடித்து படுகொலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Aug 2019 7:02 AM GMT


புதுச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த, தத்வபோதானந்தா சுவாமி, மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.


தத்வபோதானந்தா சுவாமிகள், மதுரையை பூர்வீகமாக கொண்டவர், பொறியியல் பட்டதாரி. ஆன்மீகத்தில் கொண்ட நாட்டம் காரணமாக, துறவறம் பூண்டு தனிமையில் வாழ்ந்து வந்தார். 1990-லிருந்து 1994 வரை கோயம்புத்தூர் ஆனைக்கட்டில் உள்ள அர்ஷா வித்யா குருகுலத்தில் முதல் வேத படிப்பை முடித்தார். 1995 ஆம் ஆண்டு முதல் நெய்வேலியிலும், புதுச்சேரியிலும் வேதங்கள் கற்பிக்க ஆரம்பித்தார். 1999 ஆம் ஆண்டு பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதியால் சன்யாசம் பெற்றார். பிறகு கோவில்களில் உபன்யாசம், இந்து முன்னணி கூட்டங்களில் சொற்பொழிவாற்றி வந்துள்ளார். தன்னை நாடி வந்தவர்களுக்கு ஜோதிடம், பரிகாரம் சொல்வார். இவருக்கு சொந்தமாக வீடும் சில சொத்துக்களும் உள்ளது. தற்போது வசித்து வந்த அப்பார்ட்மென்டை விற்பதற்காக பலரிடம் பேசி வந்துள்ளார். மேலும், குடியிருப்பின் அருகே நள்ளிரவில் கஞ்சா, மது போதையில் சிலர் சுற்றி வந்ததை, இவர் கண்டித்து வந்துள்ளார். புதுவை பழைய சாரம் மொட்டைத்தோப்பு அண்ணாமலை நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தரை தளத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகியுமாக செயல்பட்டு வந்தார்.


கொடூர சம்பவம்:


இந்த நிலையில் நேற்று காலையில் சுவாமி தத்வபோதானந்தாவின் வீட்டின் முன்பு கிடந்த பால் பாக்கெட் எடுக்கப்படாமல் இருந்தது. வீட்டின் கதவும் மூடி இருந்தது. இது குறித்து அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த காவலாளி ஆறுமுகத்திடம் விசாரித்தனர். அப்போது அவர் ‘நேற்று முன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வந்து தன்னை தாக்கி கொன்று விடுவேன் என்று மிரட்டியதால் உயிருக்கு பயந்து நான் அங்கிருந்து ஓடி விட்டேன். பின்னர் காலை 5 மணியளவில் தான் பணிக்கு வந்தேன்’ என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்து சுவாமி தத்வபோதானந்தாவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியபோது கதவு திறந்து கிடந்தது. அவர்கள் உள்ளே சென்று பார்த்ததில் அங்கு அவர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


என்ன காரணம்..?


முதல் கட்ட விசாரணையில் அந்த குடியிருப்பில் 13 வீடுகள் உள்ளன. அதன் வரவு-செலவு கணக்கு முழுவதையும் அவரே கவனித்து வந்தார். சமீபத்தில் அங்கு வந்து சிலர் வாடகைக்கு வீடு கேட்டு பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமரா பழுதாகி இருப்பது தெரியவந்தது. எனவே அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தன்று காவலாளியாக பணியாற்றிய ஆறுமுகம் (63) திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார். அவருக்கு முன் அங்கு பணியில் இருந்த காவலாளிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News