Top
undefined
Begin typing your search above and press return to search.

மதுரை இரயில் நிலைய வளாகத்தில் கட்டு கட்டாக கள்ளநோட்டுகள் சிக்கின!

மதுரை இரயில் நிலைய வளாகத்தில் கட்டு கட்டாக கள்ளநோட்டுகள் சிக்கின!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Nov 2019 6:39 AM GMT


மதுரை ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் கட்டு கட்டாக கள்ளநோட்டுகள் சிக்கின. அவற்றை பொட்டலமாக கட்டி வீசிச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.நாமக்கல் மாவட்டம் சொல்லியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36). இவருக்கு சொந்தமான லாரியை டிரைவர் செல்லையன் ஓட்டி வருகிறார். அந்த லாரியில் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர் பாட்டில் லோடு ஏற்றிக் கொண்டு மதுரை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.


அங்கு 2 இடங்களில் ஒரு குறிப்பிட்ட தண்ணீர் பாட்டில்களை இறக்கிவிட்டு, நள்ளிரவில் லாரியை ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாசல் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார்.காலையில் எழுந்து மீண்டும் தண்ணீர் பாட்டிலை இறக்குவதற்காக சென்றார். அப்போது லாரியின் உள்ளே பிளாஸ்டிக் பை பொட்டலம் கிடந்ததை கண்டார்.


யாராவது, சாப்பிட்டுவிட்டு மீதம் உள்ளவற்றை பொட்டலமாக கட்டி போட்டு இருக்கலாம் என்று நினைத்து, அதை கையில் எடுத்தார். அது சற்று கனமாக இருந்ததால் பிரித்து பார்த்தார்.அப்போது அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 4 கட்டுகளாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நோட்டை பிரித்து பார்த்த போது, அது கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது போல் இருந்தது. உடனே அவர் இதுபற்றி திலகர்திடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர்.


அவர்கள் அந்த கள்ளநோட்டு கட்டுக்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அதில் 7 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய்க்கான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தன.அதனை பொட்டலமாக கட்டி லாரியில் வீசிச் சென்ற மர்ம மனிதர்கள் யார்? எதற்காக அந்த லாரியில் வீசினார்கள்? என்பது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை செய்து தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story