Top
undefined
Begin typing your search above and press return to search.

கனடாவில் அமைச்சரான முதல் தமிழ் இந்து பெண் அனிதா! வேலூரை சேர்ந்தவர்!

கனடாவில் அமைச்சரான முதல் தமிழ் இந்து பெண் அனிதா! வேலூரை சேர்ந்தவர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 5:19 AM GMT


உலகில் 2-வது மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடு கனடா. இந்த நாட்டின் 43-வது மக்களவை பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏற்கனவே பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.


மொத்தம் உள்ள 338 இடங்களில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 151 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்த்துப் போட்டியிட்ட ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 121 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியை தக்கவைத்துள்ளார்.


இவரது அமைச்சரவையில் அனிதா ஆனந்த் என்ற பெண் இடம்பெற்றுள்ளார். இவருக்கு பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் தமிழ் இந்து பெண் என்ற பெருமை அனிதா ஆனந்த் பெற்றுள்ளார்.


ஓக்வில் பாராளுமன்ற தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக பணிபுரிந்தார். நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர்.





இவரது பூர்வீகம் தமிழகத்திலுள்ள வேலூர் மாவட்டமாகும். இவரது தந்தை பெயர் ஆனந்த் விவேகானந்தன். அவர் டாக்டராக பணியாற்றுகிறார். அனிதாவின் தாய் சரோஜ் ராம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர். அனிதா ஆனந்திற்கு 4 குழந்தைகள் உள்ளனர்.


ஜஸ்டின் ட்ரூடோவின் 37 பேர் கொண்ட அமைச்சரவையில் 4 பேர் .இந்தியர்கள். அவர்களில் அனிதா ஆனந்தும் ஒருவர். இவரை தவிர, மேலும் 3 இந்தியர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். நவ்தேப் பெயின்ஸ், பார்டிஷ் சாகர், ஹர்ஜித் சச்சன் ஆகிய அந்த 3 பேரும் சீக்கியர்கள். இதில் அனிதா ஆனந்த் மட்டுமே இந்து. அதோடு அவர் தமிழகத்தை சேர்ந்தவர்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அனிதா ஆனந்த்,“பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக என்னை நியமித்துள்ளதற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். கனட மக்களின் முன்னேற்றத்திற்காக நான் அயராது பாடுபடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/AnitaOakville/status/1197476197200023554


தமிழ் இந்து பெண் அனிதா ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.




https://twitter.com/Dineshkumar0208/status/1197480455760691200



Next Story