Top
undefined
Begin typing your search above and press return to search.

சிவசேனா, சோனியா சேனா ஆனது! மராட்டிய சிவாஜி, மதசார்பற்ற சிவாஜி ஆனார்! இந்துத்வா, செக்குலர் இந்துத்வா ஆனது!

சிவசேனா, சோனியா சேனா ஆனது! மராட்டிய சிவாஜி, மதசார்பற்ற சிவாஜி ஆனார்! இந்துத்வா, செக்குலர் இந்துத்வா ஆனது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Nov 2019 11:31 AM GMT


சிவசேனா, 1996-ஆம் ஆண்டு பால் தாக்கரேவால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மராட்டியர்களை முன்னிலைப்படுத்தி செயல்பட்டாலும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1970-இல் இந்துத்துவா சித்தாந்தத்தை கையில் எடுத்தது. அதன்பிறகுதான் இது வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது


1989-ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து, மும்பை மாநகராட்சியை அது கைப்பற்றியது. அதன் பிறகு தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்து வந்தது.


இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய மராட்டிய சிவாஜியை, முன்னிலைப்படுத்வதில், பாஜகவைவிட சிவசேனா தீவிரமாக இருந்தது. இந்துத்துவா கொள்கையில்கூட பாஜகவைவிட மிகத் தீவிரமாக இருந்தது சிவசேனா.


இதன் உச்சக்கட்டமாக மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை “தேசபக்தர்” என்று சிவசேனா கொண்டாடியது. இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கட்டுரையை எழுதி, கோட்சேவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தியது.


இதைப்போல சோனியா காந்தி பிரதமராக வருகின்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, அவர் இத்தாலியை சேர்ந்தவர் என்பதால் அவரை மிகத் தீவிரமாக எதிர்த்து சிவசேனா. “இந்தியாவை ஒரு இந்தியர்தான் ஆள வேண்டும்” என்பதில் உறுதியாக இருந்தது.


சிவசேனாவை தொடங்கிய பால்தாக்கரே, இறுதி மூச்சு வரை இந்துத்துவா கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. எந்த சூழ்நிலையிலும் அவர் இந்துத்துவா கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை. அவருக்கு ஆட்சி அதிகாரம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.


ஆனால் அவரது மகன் உத்தவ் தாக்கரே நேர் எதிராக போய்விட்டார். எந்த சோனியா காந்தி, இந்த நாட்டிற்கு பிரதமராக வரக்கூடாது என்பதில் மிகத் தீவிரமாக பால்தாக்கரே இருந்தாரோ, அந்த சோனியாவின் பக்தனாக மாறிப்போனார் உத்தவ் தாக்கரே. எந்த மராட்டிய சிவாஜியின் வாரிசாக இதுவரை தன்னை காட்டிக் கொண்டாரோ அந்த உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய சிவாஜிக்கு காவி உடையை கழற்றும் நிலைக்கு வந்துவிட்டார்.


உத்தவ் தாக்கரேவுக்கு தான் இரண்டாவது பால்தாக்கரே என்ற நினைப்பு மனதில் ஆழமாக உள்ளது. ஆனால் பால்தாக்கரேயின் இந்துத்துவ கொள்கைகளை அவர் குழிதோண்டி புதைப்பதில், சோனியாவை விஞ்சிவிட்டார்.


காலங்காலமாக மகாராஷ்டிராவில் காங்கிரசை எதிர்த்து சிவசேனா வளர்ந்தது. பாஜகவின் முதுகில் சவாரி செய்து சிவசேனா தன்னை வளர்த்துக் கொண்டது. ஆனால் இப்போது முதல்வர் பதவி என்ற ஒரே ஆசையை அடைவதற்காக, இதுவரை எதிரிகளாகவும், இந்துக்களுக்கு துரோகிகளாகவும் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து உள்ளது. ஒருவேளை தேர்தலுக்கு முன்பாகவே இவர்கள் கூட்டணி அமைத்திருந்தால், இவர்களின் முகத்திரையை மகாராஷ்டிர மக்கள் கிழித்து எறிந்து இருப்பார்கள். ஆனால் பாஜக முதுகில் சவாரி செய்து 56 எம்எல்ஏக்களை பெற்றுவிட்டு எதிரணிக்கு ஓடிவிட்டார் உத்தவ் தாக்கரே.


சோனியாவின் சூழ்ச்சி, பால் தாக்கரேக்கு நன்றாக தெரியும். ஆனால் அதனை புரிந்துகொள்ளக்கூடிய தகுதியும், மதிநுட்பமும் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. ஆகவேதான் அவர் முதல்வர் பதவிக்காக சோனியாவிடம் சரணாகதி அடைந்து விட்டார்.


இதன் மூலம் பால் தாக்கரேவால் உருவாக்கப்பட்ட சிவசேனா, சோனியா சேனாவாக ஆகிவிட்டது. மராட்டிய சிவாஜி, மதசார்பற்ற சிவாஜி ஆக்கப்பட்டு விட்டார். சிவசேனாவின் இந்துத்துவா கொள்கை, செக்குலர் இந்துத்துவா கொள்கையாக புது வடிவம் பெற்றுவிட்டது.


ஆனால் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க நேரத்தில், தக்க பதிலை கண்டிப்பாக தருவார்கள்.


Next Story