Top
undefined
Begin typing your search above and press return to search.

மறக்க முடியாத மக்கள் தலைவி மறைந்த முதல்வர் ஜெயலலிதா! அவர் இடம் தொடர்ந்து காலியாகவே உள்ளதாக மக்கள் வருத்தம்!

மறக்க முடியாத மக்கள் தலைவி மறைந்த முதல்வர் ஜெயலலிதா! அவர் இடம் தொடர்ந்து காலியாகவே உள்ளதாக மக்கள் வருத்தம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Dec 2019 6:23 AM GMT


மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளாகிய இன்று அவர் விட்டுச் சென்ற இடம் தொடர்ந்து காலியாக இருப்பதாகவே மக்கள் உணர்கின்ற நிலையை இந்த கட்டுரை குறிப்பிடுகிறது.


எதிர்கட்சிகள் அவர் மீது ஆயிரம் புகார்கள் கூறியிருந்தாலும், அவர் முதன் முதலாக முதல்வரானதும் தனக்கென அவர் தோற்றுவித்திருந்த அந்த இமேஜ் பிம்பம் கொஞ்சம் கூட சரியாமல் பார்த்துக் கொண்டார் என்றால் அதில் இருந்தே அவரின் ஆளுமைத் திறனை அனைவரும் உணரலாம்.


அவருடைய கட்சியினர் மட்டும் அவரை அம்மா என்று குறிப்பிடவில்லை. பொது மக்களில் பலரும் கூட அவரை ஜெயலலிதா அம்மா என்றே குறிப்பிட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு பாப்புலர் தலைவியாக மட்டுமல்ல, மக்கள் சக்தி வாய்ந்த தலைவியாகக் கருதப்பட்டார்.


சாதி பலத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யும் தலைவர்கள் இப்போது எதை வேண்டுமானாலும் பேசுகிறார்கள், எதை வேண்டுமானாலும் அரசை மிரட்டி சாதித்தும் கொள்கிறார்கள். அவர்கள் ஒ.கே என்றால்தான் ஒரு சாலை திட்டம் நிறைவேறும், அவர்கள் ஆதரித்தால்தான் அரசு தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற மோசமான நிலைமை இன்று உருவாகியுள்ளது. ஒரு குறுநில மன்னர்கள் போல ஆகிவிட்டார்கள். இதுதான் ஜெயலலிதா இல்லாத வெற்றிடம் என்றும் சிலரால் கூறப்படுகிறது.


ஜெயலலிதாவை பொறுத்தவரை எதுவெல்லாம் பொது நலனுக்கு எதிராக அவர் கண்ணுக்கு படுகிறதோ அதை வேருடன் பிடுங்க முயல்வார். எப்படிப்பட்ட ஜாதிக் கட்சி தலைவராக இருந்தாலும் அஞ்சாமல் சிறையில் தள்ளிவிடுவார். அதனால் எந்த எதிர் விளைவும்வந்ததில்லை. ஏனெனில் அனைத்து சாதிகளிலும் உள்ள மக்களில் பெரும்பாலோனோர் அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால் அனைத்து தலைவர்களும், ஏன் அரசியலுக்கு ஆசைப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் கூட அடக்கியே வாசித்தனர்.


அவர் முதல்வராகவோ அல்லது அதிமுகவின் தலைவியாகவோ இருந்தது மட்டும் பெரும் பலம் அல்ல. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களின் நம்பிக்கை பெற்ற நாயகியாகவும், அவர்களின் பேராதரவு பெற்ற பெண்ணரசியாகவும் இருந்தார். அந்த ஒரே காரணத்தினால்தான் தேர்தல் களத்தில் தனித்து நின்றே பல மாபெரும் வெற்றிகளை குவித்து வந்தார். எந்த ஒரு சின்னஞ்சிறிய கட்சிகளின் ஆதரவோ அல்லது வட்டாரக் கட்சிகளின் தயவு தாட்சண்யமோ அவருக்கு தேவைப்படாததால்தான் அனைத்துக் கட்சிகளும் சட்டம் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டன.


ஆனால் இன்று அவர் உருவாக்கிய ஆட்சி உள்ளது. ஆனால் அவர் மட்டும் இல்லை. அந்த காலியிடத்தால் ஏற்படும் விளைவுகள் எத்தனையோ..அதில் சிலவற்றை மட்டும் கூறுகின்றனர்.


இப்போது மட்டும் அவர் உயிருடன் இருந்திருந்தால் வருவாய் துறையினர் கிராம மக்களை தேடி சென்றுச் சென்று குற்றம் குறைகளை தீர்த்து வைக்கும் அம்மா திட்ட முகாம்கள் மிக சரியான முறையில் முன்பு போலவே நடைபெற்றிருக்கும். அனால் இப்போது அவை முறையாக நடைபெறவில்லை, நடந்தாலும் மீண்டும் பல கட்சிகள் தலையீடு, இலஞ்சம், ஊழல் உள்ளதாக குற்றச்சாட்டுகள்.


சொத்து மோசடிகளை தடுக்க ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அவர் தொடங்கிவைத்த மோசடி தடுப்பு பிரிவுகள் இருக்கிறதா அவை செயல்படுகிறதா என்பது யாருக்கும் தெரியவில்லை.


அவர் மறைந்த அடுத்த சில மாதங்களில் சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த மாவட்டத் தலைவர்களில் பலர் குறிப்பாக துரைமுருகன் போன்ற பெரிய முதலைகள் வெளியே விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்குகளில் சிக்கிய மாவட்டத் தலைகள் முன்பெல்லாம் நீதிமன்றத்துக்கு வந்து சென்றால் பத்திரிக்கைகளின் செய்திகளில் முதலிடம் பிடிக்கும். ஆனால் ஜெயலலிதா மறைந்ததும் இது போன்ற செய்திகள் வருவது மறைந்தன. இந்த வழக்குகள் எல்லாம் எந்த கதியில் உள்ளன என்பதையும் மக்கள் மறந்து விட்டனர். பத்திரிக்கைகளும் பல விஷயங்களை மறைத்து தான்தோன்றி தனமாக நடக்க ஆரம்பித்து விட்டன.


ரியல் எஸ்டேட் துறையில் இப்போது மீண்டும் புரோக்கர்கள் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. மாநகரப் பகுதிகளில், புறநகர் பகுதிகளில் புரோக்கர்கள் நினைத்தால்தான் ஒரு சொத்து விற்பனையாகும் என்ற நிலை இன்று உருவாகி வருவதாக கூறப்படுகிறது. பத்திர பதிவாளர் அலுவலகங்களில் பணி செய்யும் அலுவலர்களை தங்கள் வசமாக்கிக் கொண்டு ஆளும் கட்சி, எதிர் கட்சி, ஆங்காங்கு உள்ள வட்டார, சாதி கட்சிகளை சேர்ந்த புரோக்கர்கள், புரோக்கர் தொழில் செய்யும் அரசியல்வாதிகள் ஆகியோர் வாங்குதல் மற்றும் விற்பனையை தங்கள் அதிகாரத்தில் வைத்துள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும். இனி நகர்ப்புறங்களில் வசிக்கும் அப்பாவிகள் யாரும் புறநகர் பகுதிகளில் சிறு பிளாட் கூட வாங்க முடியாத நிலைக்கு அச்சப்பட்டு உள்ளனர் என்பதே உண்மையாகும்.


உண்மையில் அம்மா உணவகங்கள் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதற்கு ஒரு உயிர்ப்பு இருந்தது. அங்கு ஒரு தூய்மை இருந்தது. சாதாரண மக்கள் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டனர். அது போன்ற திட்டங்களை அவர் நேசித்து பொறுப்புடன் செய்தார்.இன்றைக்கு அந்த அளவுக்கு யாரும் பொறுப்பு எடுத்துக் கொள்ளாததால் முன்பு போல இந்த திட்டம் ஆரோக்கியத்துடன் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் இந்த திட்டம் ஜெயலலிதா நினைத்தது போல விரிவடையவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.


அடுத்து சாதாரண மக்களுக்கு உதவ ரேஷன் கடைகளை அவர் பெரிதும் நம்பினார். எந்த ஒரு பொருளையும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக அளிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வந்தார். ஒரு போதும் ரேஷன் பொருட்களின் விலையை அவர் ஏற்றத் துணியவில்லை. புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டும் மக்களுக்கு முழு இலவசமாக கிடைத்து வந்தன. அரிசியை வெளி சந்தையில் கிடைக்கும் அரிசியின் தரத்துக்கு இணையாக ரேஷனில் கொடுப்பது பற்றி சிந்தித்து வந்தார். அதற்கான வாக்குறுதியையும் தந்தார்.


ஆனால் கடைசியாக ஆட்சிக்கு வந்தவுடன் தனது உடல் நலத்துக்காக போராடினார். அவர் இறந்த பிறகு அவரது வழியில் ஆட்சி பயணிப்பதாக கூறப்பட்டாலும் கூட அவர் கண்ட ‘தரமான ரேஷன் அரிசி’ கனவைப் பற்றி அதன் பிறகு யாரும் சிந்திக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இப்போது பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ள பச்சரிசி மட்டுமே அதிகம் கிடைப்பதாக நகர்ப்புற ஏழை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.. அரிசியின் அளவும் 20 கிலோவில் இருந்து பெரும்பாலும் 10 கிலோவாக கிடைப்பதாகவே புகார் கூறப்படுகிறது. உளுந்து முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இடையில் சர்க்கரை விலையும் கிட்டத்தட்ட சந்தை விலைக்கு நிகராக ஏற்றப்பட்டது. கோதுமை பெரும்பாலும் கிடைப்பதில்லை. மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் சில நாட்கள் அனைத்து பொருள்களும் கிடைப்பதாக காட்சிப்படுத்தப்படுகிறது.


அடுத்து முக்கியமானது உள்ளாட்சி தேர்தல். அவர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அதை கையோடு நடத்தி முடித்திடுவார். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சி நினைத்தால் அதை ஏதேனும் காரணம் கூறி முடக்கிவிடும்நிலை உள்ளது. சாலைகளில் போலீசாரை தாக்கும் சம்பவங்களும், சட்டம் – ஒழுங்கு நடவடிக்கைகளை கையாளும் போலீசாரை குண்டர்கள் போல ஊடகங்கள் சித்தரிப்பதும் எப்போதுமில்லாத காட்சிகள்.


நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் ஜெயலலிதா அணுகிய விதம் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. பெண்கள் ஜெயலலிதாவை ஓர் ஆபத்வானாக கருதினர். பெண்களின் நலனுக்கு எதிராக, பாதுகாப்புக்கு எதிராக ஆளுங்கட்சி பிரமுகரே நடந்தாலும் அவர்களை முகவரி இல்லாமல் செய்து விடுவார். ஆனால் இன்றைக்கு பெண்களுக்கெதிரான பாலியல் சம்பவங்களில் ஆளும் கட்சியால் எந்த ஒரு துணிகரமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மாநிலத்தையே உலுக்கி எடுத்த சம்பவங்களில் கூட ஆளும் கட்சியை சார்ந்த குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.


ஊழல் விவகாரத்தில் ஒரு அமைச்சரின் பெயர் வெளியே தெரிந்துவிட்டாலோ அல்லது அதிகாரிகள், அப்பாவி மக்கள் சாவுக்கு காரணமாக தனது அமைச்சர் இருந்து விட்டாலோ அவர்கள் தனது விசுவாசிகள் எனக் கூட பார்க்கமாட்டார். இதற்கு உதாரணமாக நெல்லை வேளாண்மை அதிகாரி தற்கொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விவகாரத்தை குறிப்பிடுகின்றனர். ஆனால் இன்றைக்கு பல அமைச்சர்கள் மீது எத்தகைய புகார்கள் வந்தாலும் தலைமையால் வலுவான நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் உள்ளது.


இவற்றை வைத்து சிலர் தமிழகத்தில் தலைமைப் பதவிக்கான இடம் காலியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். சிலர் காலி இடம் இல்லை, திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால் ஏழை மக்கள், இயலாதவர்கள், நடுத்தர நகர்புறவாசிகள், அப்பாவி மக்கள் உள்ளத்தில் தங்களை நினைப்பவர்கள், ஆதரிப்பவர்கள் ‘யாருமே இல்லையோ’ என்கிற ஆதங்கம் உள்ளது. இதற்காக அரசியலில் திடுதிப்பென்று உள்ளே வருபவர்கள் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.


ஆனால் அவர்கள் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் ஒவ்வொரு நாள் செயல்பாடுகளையும், பேச்சுக்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஆனால் கப்பல் கரையில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது. கப்பலை நோக்கி கரை நெருங்குமா ? அல்லது கப்பல் கரையை நோக்கி நெருங்குமா? என்பதற்கான பதில் கிடைக்கும் வரை ‘காலி இடத்தில் அமரும் வாய்ப்பை பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்காதவர்களே தட்டிச்செல்லும் துரதிஷ்டத்தில் தமிழகம் உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story