Top
undefined
Begin typing your search above and press return to search.

நிர்பயா பாலியல் கொலை வழக்கில் கடைசி குற்றவாளியின் கருணை மனுவும் தள்ளுபடி! தூக்கு மேடையை நோக்கி வேகமாக நகரும் குற்றவாளிகள்!

நிர்பயா பாலியல் கொலை வழக்கில் கடைசி குற்றவாளியின் கருணை மனுவும் தள்ளுபடி! தூக்கு மேடையை நோக்கி வேகமாக நகரும் குற்றவாளிகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2019 10:17 AM GMT


இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிர்பயா பாலியல் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் கடைசியாக தள்ளுபடி செய்துவிட்டது.


இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறையில் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார்.


எஞ்சிய நால்வரில் மூவரின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்துவிட்டது.


நான்காவது குற்றவாளியான அக்‌ஷய் குமார் சிங்கும் பின்னர் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.


ஆனால் இந்த வழக்கிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிக்கொள்வதாக தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், எஸ்.ஏ.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


இந்த வழக்கில் அக்‌ஷய் குமார் சிங்கின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங், மரண தண்டனை என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது, இந்தியாவிலிருந்து மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


அரசாங்க வழக்கறிஞர் துஷார் மேத்தா, மனித குலத்திற்கு எதிராக இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கருணை காட்டவேக் கூடாது என்று வாதிட்டார்.


இரு தரப்பு வாதங்களைக் கேட்ட அமர்வு, குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.


இதையடுத்து அக்‌ஷய் குமார் சிங்கின் தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள நிர்பயாவின் தாயார், “தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ” என்றார்.


இந்த நிலையில் நான்கு பேரின் தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் தண்டனை நிறைவேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


Next Story