Top
undefined
Begin typing your search above and press return to search.

‘லஷ்மன் ஸ்ருதி’ நிறுவனர் ராமன் தற்கொலை செய்து கொண்டது ஏன்! போலீஸ் விசாரணையில் தகவல்கள்!

‘லஷ்மன் ஸ்ருதி’ நிறுவனர் ராமன் தற்கொலை செய்து கொண்டது ஏன்! போலீஸ் விசாரணையில் தகவல்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2019 10:36 AM GMT



கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற லஷ்மன் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக்குழுவின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ராமன் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.


சென்னை கோடம்பாக்கம் டாக்டர் சுப்புராயன் தெருவில் வசித்து வந்தவர் ராமன் (வயது 54). அவரது சகோதரர் லஷ்மணன். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். மற்றொரு சகோதரர் பெயர் முருகவேல். இவர்கள் அசோக¢நகர் 100 அடி சாலையில் லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல் என்ற பிரபல இசைக்கருவிகள் விற்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்கள்.


பின்னர் 1987-ம் ஆண்டு லஷ்மன் ஸ்ருதி ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக்குழுவை துவங்கி நடத்தினார்கள்.


தமிழகத்தில் பட்டித்தொட்டியெங்கும் இவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறாத ஊரே இல்லை என்று கூறும் அளவுக்கு இசைநிகழ்ச்சிகளை நடத்தினார்கள். வெளிநாடுகளுக்கும் சென்று தங்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றனர். சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்தி உள்ளனர்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாலை 6.30 மணியளவில் அந்த நிகழ்ச்சியில் இருந்து தனியாக புறப்பட்டு ராமன் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.


இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரது மனைவி நிர்மலா மற்றும் தாயார் ஆகியோர் காரில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து திறந்துள்ளனர்.


அப்போது ஹாலில் இருக்கும் மின்விசிறி கொக்கியில் ஒரு கயிற்றில் தூக்கு மாட்டி ராமன் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். பின்னர் இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


ராமன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


Next Story