Top
undefined
Begin typing your search above and press return to search.

முஸ்லீம் ஓட்டு இல்லை; கிறிஸ்தவ ஓட்டு இல்லை; மீடியாக்களின் ஆதரவு இல்லை! ஆனாலும் மாஸ் காட்டிய அ.தி.மு.க கூட்டணி!

முஸ்லீம் ஓட்டு இல்லை; கிறிஸ்தவ ஓட்டு இல்லை; மீடியாக்களின் ஆதரவு இல்லை! ஆனாலும் மாஸ் காட்டிய அ.தி.மு.க கூட்டணி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Jan 2020 8:03 AM GMT


உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளிவர தொடங்கியது முதல் மு.க.ஸ்டாலின் நிலைகுலைந்து போனார். அவர் தேர்தல் கமிஷனர் அலுவலகத்திற்கும், கோர்ட்டுக்கும் அலைய தொடங்கினார்.


காரணம், அவர் ஏற்கனவே பயந்தது போலவே நடந்துவிட்டது.


கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு நடந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் கடைசி வரை போராடி சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்தது. இதன்பிறகு நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.


இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை தரும் என்று கருதிய மு.க.ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட் வரை சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அவை எதுவும் பலனளிக்கவில்லை. கடைசியாக தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க போராடினார். அதுவும் கைகூடவில்லை.


உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணிக்கு பல வகையில் சாதகமான அம்சங்கள் இருந்தன. முக்கியமாக முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை முழுமையாக திமுகவே அறுவடை செய்தது. அதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் திமுகவிற்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு இரவும், பகலும் வேலை பார்த்தன.


இதற்கிடையே சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்களை திமுக தூண்டி விட்டது. இதன்மூலம் அதிமுக, பாஜக கூட்டணி கூட்டணிக்கு எதிராக மக்களைத் திருப்பிவிடும் வேலையை திமுக செய்தது.


இது ஒருபுறமிருக்க, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தினகரன் கணிசமான அளவு, அதிமுகவின் வாக்குகளை பிரித்தார். இதுவும் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.


கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ததில் திமுக கூட்டணி மிக திறமையாக செயல்பட்டு அதிருப்தி வேட்பாளர்கள் களம் இறங்குவதை ஏறக்குறைய 99% தவிர்த்து விட்டது. ஆனால் அதிமுக அணியில் பல்வேறு இடங்களில் ஒரே பதவிக்கு திமுகவும், பாமகவும் போட்டியிட்டன. இன்னும் சில இடங்களில் அதிமுகவும், பாஜகவும் போட்டியிட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் அதிமுகவும், தேமுதிகவும் மோதி உள்ளன.


இப்படி போட்டியிட்டவர்கள் அனைவரும் அந்தந்த கட்சி சின்னத்தில் போட்டியிட்டனர். இது அதிமுக கூட்டணி ஓட்டுகளை பிரித்தது. பரவலாக தமிழகத்தின் பல இடங்களில் இது நடந்துள்ளது. இதுவும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு சாதகமான அம்சமாக அமைந்தது.


இப்படி பல வகையில் திமுக அணிக்கு சாதகமாகவே உள்ளாட்சி தேர்தல் களம் இருந்தது. இதனால் 75 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் திமுக அணி வெற்றி பெறும் என்று மனக்கோட்டை கட்டி இருந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்துவிட்டது.


இவ்வளவு அம்சங்கள் சாதகமாக இருந்த சூழ்நிலையிலும் கூட, திமுக கூட்டணியால் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட முடியவில்லை. அதோடு இப்போது நடந்த தேர்தல்கள் மூலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்தான் ஒன்றிய பெருந்தலைவர்கள், ஒன்றிய துணைத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.


அந்த தேர்தலின் போது, சுயேட்சையாக வெற்றி பெற்ற உறுப்பினர்களின் ஆதரவு பெரும்பாலும் அதிமுக அணிக்கு சாதகமாக இருக்கும். எனவே மறைமுகமாக நடைபெறுகின்ற அந்தத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திப்பது உறுதி.


இதோடு இது முடிந்து போவதில்லை. பேரூராட்சிகள், நகராட்சிகள், நகரப் பஞ்சாயத்துக்கள் போன்றவற்றிற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளன. அந்தத் தேர்தலில் நிச்சயமாக திமுக அணி இதைவிட மோசமான தோல்வியை சந்திக்கம் நிலையே உள்ளது. இது அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.


இது இப்படியே தொடர்ந்தால், முதல்வர் நாற்காலிக்கு இலவு காத்த கிளியாக காத்திருக்கும் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் அதே இலவு காத்த கிளியாகதான் இருக்க வேண்டியது இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


Next Story