Top
undefined
Begin typing your search above and press return to search.

சரிவில் சன் டி.வி! பங்கு சந்தையில் ஒரே ஆண்டில் 33% வீழ்ச்சி!

சரிவில் சன் டி.வி! பங்கு சந்தையில் ஒரே ஆண்டில் 33% வீழ்ச்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Jan 2020 11:06 AM GMT


சன் டிவி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனுக்கு சொந்தமானது. மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது அதனை பயன்படுத்தி, சன் டிவியை மிகப்பெரிய நிறுவனமாக மாற்றினார்கள்.


அதே நேரத்தில் சன் டிவிக்கு போட்டியாக இருந்த அனைத்து தொலைக்காட்சிகளையும் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி தொலைத்து கட்டினார்கள். எஸ்சிவி என்ற கேபிள் நெட்வொர்க் மூலம் மற்ற தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்து, சன் டிவி குழும சேனல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.


மற்றொருபுறம் எஸ்சிவிக்கு போட்டியாக இருந்த அனைத்து கேபிள் நெட்வொர்க்களையும் திமுகவின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி துவம்சம் செய்தனர். சின்ன சின்ன கேபிள் நெட்வொர்க் ஆப்பரேட்டர்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு அவைகளை வாங்கி, எஸ்சிவியுடன் இணைத்னர். இதன் மூலம் தமிழகத்தில் எஸ்சிவி கேபிள் நெட்வொர்க் மிகப்பெரிய நிறுவனமாக உருவாக்கப்பட்டது.


தொடர்ந்து திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், சன் குழுமம் அனைத்து வகையிலும் தன்னை வளப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக திமுக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாததாலும், மத்திய பாஜக அரசில் அங்கம் வகிக்காத காரணத்தினாலும், சன் குழுமத்தால் முன்புபோல் அதிகாரம் செலுத்த முடியவில்லை.


இது ஒருபுறமிருக்க, சன் குழும சேனல்கள் அனைத்தும் கட்டண சேனல்களாக மாற்றப்பட்டன. நீண்ட நாட்களாக சன் டிவி மட்டும் இலவச சேனலாக இருந்து வந்தது. அதுவும் இப்போது கட்டண சேனலாக மாறிவிட்டது. எஸ்சிவி செட்டாப்பாக் வழியாக சன் குழும சேனல்கள் ஒளிபரப்பப்பட்ட போது, சன் டிவி மட்டும் இலவசமாக இடம் பெற்றிருந்தது.


இதற்கிடையே சன் டைரக்ட் டிடிஎச் மூலம் சன் குழும சேனல்கள் கட்டாயப்படுத்தி மக்கள் தலையில் திணித்து வந்தனர்.


இப்படி அரஜகமாக தங்களை தனிக்காட்டு ராஜாவாக காட்டி வந்த சன் டிவியை சமீபகாலமாக தமிழர்கள் புறக்கணிக்க தொடங்கினர். டாட்டா ஸ்கை போன்ற மற்ற டிடிஹச்களில் ஏராளமான தமிழர்கள், சன் டிவி குழும சேனல்களை நிறுத்தி விட்டார்கள். மற்றொருபுறம் சன் டிடிஎச்-க்கும் தமிழர்களிடையே முன்புபோல் ஆதரவு இல்லை. அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.


இதன் காரணமாக சன் குழும சேனல்களை பார்க்கும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கி உள்ளது. அதேநேரம் சன் டிவிக்கு போட்டியாக உள்ள விஜய் டிவி, ஜீ தமிழ், கலர் தமிழ், பாலிமர் போன்ற தொலைக்காட்சிகள் சுதந்திரமாக வளர்ந்துள்ளன. செய்தி சேனல்களை பொறுத்தவரை சன் நியூஸ், திமுகவின் சார்பு நிலையில் இருப்பதால், அதனை திமுகவினரை தவிர மற்றவர்கள் பார்ப்பதில்லை. அதே நேரம், தந்தி டிவி, பாலிமர் நியூஸ், புதிய தலைமுறை, நியூஸ் 18 போன்ற தொலைக்காட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.


இதுபோன்ற காரணங்களால் சன் குழும பங்குகள், பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. கடந்த ஓராண்டாக சுமார் 33 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியை சன் குழும பங்குகள் சந்தித்து உள்ளது.


கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி சன் குழும பங்கின் விலை 641.80 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று (04.01.2020) சன் குழும பங்கின் விலை 429.50 ரூபாயாக சரிந்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் 4.70 ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது.


தொடர்ந்து இறங்கு முகத்தில் சென்று கொண்டிருக்கும் சன் குழுமப் பங்க, தூக்கி நிறுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சன் குழும சேனல்களில் கட்டணத்தை அதிரடியாக குறைத்தும், பல்வேறு சலுகைகளை வழங்கியும் வருகின்றனர். எஸ்சிவி செட்டாப் பாக்ஸ் மூலம் வழங்கப்படும் சன் குழும சேனல்களில் சன்டிவி மீண்டும் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.


இருந்தாலும் தமிழர்கள் மத்தியில் முன்பு இருந்ததுபோல், சன் குழும சேனல்களுக்கு வரவேற்பு இல்லை. குறிப்பாக சன் டிவிக்கு வரவேற்பு இல்லை. 20- ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை, “சன்டிவிகாரன்” என்றதான் அழைத்தனர். அப்படிப்பட்ட சன் டிவி, இன்று பரிதாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


நாட்டின் பொருளாதாரம் சரிந்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், சன் டிவி உரிமையாளர் மற்றும் எம்பியுமான தயாநிதி மாறனும் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் கவலைப்பட்டது நாட்டின் பொருளாதாரம் பற்றியது அல்ல, சன் குழுமத்தின் பொருளாதாரம் என்பது இப்போதுதான் புரிகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


Next Story