Top
undefined
Begin typing your search above and press return to search.

“இனி எங்கள் ஓட்டு, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு இல்லை” - கொந்தளிப்பில் குமரி மாவட்ட கிறிஸ்தவர்கள்!

“இனி எங்கள் ஓட்டு, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு இல்லை” - கொந்தளிப்பில் குமரி மாவட்ட கிறிஸ்தவர்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 6:05 AM GMT2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகை 18,70,374. இதில் இந்துக்கள் 9,09872 பேர். கிறிஸ்தவர்கள் 8,76,299 பேர். முஸ்லிம்கள் 78,590 பேர். அதாவது 48.65% பேர் இந்துக்கள், 46.85% பேர் கிறிஸ்தவர்கள், 4.2% பேர் முஸ்லிம்கள். தற்போது குமரி மாவட்டத்தில் சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.


இந்த மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்துள்ளனர். அதுவும் சமீபத்திய காலங்களில் தங்களின் முழு ஆதரவையும் திமுக - காங்கிரஸ் அணிக்கே முழுமையாக வழங்கி வந்துள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியே மொத்தமுள்ள 6 இடங்களையும் கைப்பற்றியது. 3 எம்எல்ஏக்கள் திமுகவை சேர்ந்தவர்கள். 3 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். 


அதேபோல கடந்த பாராளுமன்ற தேர்தலின்போதும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வசந்தகுமாருக்குத்தான் வாக்களித்தனர். சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெற வைத்தனர். இந்த வெற்றிகளுக்கு எல்லாம் முழுமுதற்காரணம் குமரிமாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவ சமுதாய மக்கள்தான்.


திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட்டுகள், திருமாவளவன், வைகோ, கி.வீரமணி போன்றவர்களெல்லாம் தொடர்ந்து இந்துக்களையும், இந்து மத வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் இழித்தும், பழித்தும் பேசி வருகின்றனர். இது நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை இந்து விரோதிகளாக இருந்து வந்த திமுக கூட்டணி கட்சிகள், இப்போது கிறிஸ்தவ விரோத கட்சியாகவும் அவதாரம் எடுத்துள்ளன. 


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, ப.சிதம்பரம், திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்டுகள் உள்பட அனைவருமே கண்டனம் தெரிவித்தனர். போராட்டங்கள் நடத்தினார்கள். கனிமொழி டெல்லிக்கே சென்று பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ப.சிதம்பரம் இன்னமும் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.


அதே சமயத்தில்தான், குமரிமாவட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன் கொடூரமாக வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளைில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது இது நடந்துள்ளது. ஆனால் இதுவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் திமுகவின் தலைவர் மட்டுமல்ல, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அவர்தான். அதாவது அனைத்து சமுதாய மக்களுக்கும் அவர் பொதுவானவர். மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, கனிமொழி ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன் உள்பட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒருவர்கூட வில்சன் படுகொலையை கண்டிக்கவில்லை. அவரது குடும்பத்தாருக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை.


இதற்கெல்லாம் என்ன காரணம்? வில்சனை கொலை செய்த பயங்கரவாதிகள் முஸ்லிம்கள். இதை தவிர இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. வில்சன் ஒரு காவல்துறை அதிகாரி. அந்த அடிப்படையில் அவருக்கு நேர்ந்த இந்த படுபாதக செயலை கண்டிக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கடமை. ஆனால் கண்டிக்கவில்லை. வில்சன் ஒரு கடமை தவறாத அதிகாரியாக தன் கடமையை செய்த ஒரே காரணத்திற்காகதான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமான மருந்துக்குகூட ஒரு நாதியையும் காணவில்லை.


கண்டதற்கு எல்லாம் கவிதை எழுதி, தன் இருப்பை காட்டிக்கொள்ளும் வைரமுத்து எங்கே சென்றார் என்று தெரியவில்லை. காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு களமிறங்கி உலக அளவிற்கு குரல் எழுப்பிய மனித உரிமை அமைப்புகள் கலைக்கப் பட்டு விட்டதா என்ற கேள்வி எழுகிறது.


எங்கோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் இறந்ததற்கெல்லாம் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட தமிமுன் அன்சாரி எங்கே? அவருடன் ஓடோடிவரும் கருணாஸ் எங்கே? எதுஎதற்கோ பொங்கும் நக்கீரன் கோபால் எங்கே? இப்படி பல எங்கேகள் நீள்கிறது.
ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று நாடகமாடிவரும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வில்சன் ஒரு சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையிலானது அவருடைய மாபாதக படுகொலையை கண்டித்து இருக்க வேண்டும். அதற்குகூட அவர்களுக்கு மனம் வரவில்லை.


எங்கெல்லாம் பிணம் விழுந்ததோ அங்கெல்லாம் முதல் ஆளாக ஓடிப்போய் பிண அரசியல் செய்து வரும் மு.க.ஸ்டாலின் எங்கே போனார்? அவரின் பின்னால் அணி வகுத்துவரும் திருமாவளவன் எங்கே? வைகோ எங்கே?


அப்படியானால் இங்கே படுகொலை செய்யப்பட்டவர் யார் என்பது முக்கியமல்ல. படுகொலை செய்தவர்கள் பயங்கரவாதிகளாகவே இருந்தாலும், அவர் முஸ்லிமாக இருந்துவிட்டால் அவருக்கு எதிராக குரல் கொடுக்க மாட்டார்கள். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனுதாபம் தெரிவிக்க மாட்டார்கள். நேரில் சென்று ஆறுதல் சொல்ல மாட்டார்கள். இப்படி ஒரு மோசமான, கீழ்த்தரமான அரசியல் செய்துவரும் திமுகவும், காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்த நாட்டின் சாபக்கேடுகள்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுடைய வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களில் ஒருவர்கூட இந்த மாபாதக செயலை கண்டிக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை. மதரீதியாக எடுத்துக்கொண்டால்கூட அதிகமான எம்எல்ஏக்கள் கிறிஸ்தவர்கள். அந்த அடிப்படையில்கூட வில்சனின் குடும்பத்தாருக்கு அவர்கள் ஆறுதல் தெரிவிக்க முன்வரவில்லை. அதேபோல எம்பியாக தேர்வுசெய்யப்பட்ட வசந்தகுமார் ஒப்புக்குகூட இந்தப் படுகொலையை கண்டிக்கவில்லை.


“அப்படியானால் குமரி மாவட்டத்திலுள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியம் அல்ல. கிறிஸ்தவ மக்களைப் பற்றி அக்கறை இல்லை. அவர்களின் துக்கங்களில் பங்கு எடுக்க மாட்டார்கள். அப்படியானால் அவர்கள் என்னதான் செய்வார்களாம்?” என்று குமரிமாவட்ட கிறிஸ்தவர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
குமரிமாவட்ட கிறிஸ்தவ சமுதாய மக்கள் இந்த சம்பவத்தின் மூலம், திமுக, காங்கிரஸ் கூட்டணியினரின் சுய ரூபத்தை புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள், “இனி எங்கள் ஓட்டு திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு இல்லை” என்று கொந்தளித்துள்ளனர்.


இவர்கள் எல்லாம் அரசியல் வாதிகள், முஸ்லிம்களுடைய ஓட்டுக்காக கண்டிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் மதவாதியாக பேராயர் எஸ்ரா சற்குணம் எங்கே போனார்? ஜெகத் கஸ்பர் எங்கே போனார்? குமரிமாவட்டத்திலுள்ள பாதிரியார்கள், பேராயர்கள், ஆயர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஏன் இதை கண்டிக்கவில்லை? அவர்கள் ஏன் பாதிக்கப்பட்ட வில்சனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க வில்லை என்பதே குமரி மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த மக்களின் கேள்விகளாக உள்ளது.Next Story