Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜார்கண்டில் யானை பலமுள்ள பாஜகவை, 3 பூனைகள் சேர்ந்து படுக்க வைத்ததன் காரணங்கள் என்ன?

ஜார்கண்டில் யானை பலமுள்ள பாஜகவை, 3 பூனைகள் சேர்ந்து படுக்க வைத்ததன் காரணங்கள் என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2020 7:26 AM GMT


ஜார்கண்டில் யானை பலமுள்ள பாஜகவை 3 பூனைகள் சேர்ந்து படுக்க வைத்ததன் காரணங்கள் என்ன? 10 காரணங்களை அலசி ஆராய்ந்து கூறும் அரசியல் நிபுணர்கள்!


ஜார்கண்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.எம்.எம் – காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணி, பதிவான வாக்குகளில் 35.35 சதவீதமே பெற்றது. ஆனால் ஆட்சியை கைப்பற்றமுடியாமல் தோல்வி அடைந்த பாஜக தனியாக நின்று 33.37 சதவீத வாக்குகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


அந்த மாநிலத்தில் தனக்கென இவ்வளவு பெரிய செல்வாக்கை பாஜக வைத்துள்ள காரணங்கள் அதிகம். முதலில் எப்போதும் அரசியல் குழப்பத்துடன் காணப்படும் ஜார்கண்ட் மாநில வரலாற்றில் முதன்முதலாக ஸ்திரமான ஆட்சியை அமைத்தது பாஜகதான்.


ஆட்சி அமைத்து ஆண்ட இந்த 5 ஆண்டில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை தந்ததுடன், ஏராளமான சாதனைகளை படைத்தது. ஆதிவாசிகள் மற்றும் மலை வாழ் மக்கள் அதிகம் வாழும் அந்த மாநிலத்தில் அம் மக்களின் வளர்ச்சிக்காக ஏராளமான புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தியது பாஜக.


விவசாய நிலங்கள் விவசாயிகளால் விவசாயத்துக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற கொள்கையை வரையறுத்து சோட்டானக்பூர் குத்தகை சட்டத்தை திருத்தி விவசாயிகளுக்காகவும், குறிப்பாக மலைவாழ் பழங்குடி மக்களின் நிலத்தை பாதுகாக்கவும் பாஜக முதலமைச்சர் ரகுபார் தாஸ் சட்டமியற்றி புரட்சிகரமாக செயல்பட்டார்.


ஊழலுக்குப் பெயர் போன அரசியல்வாதிகள் மிகுந்த அந்த மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் மீதோ அல்லது அவரது அமைச்சரவை சகாக்கள் மீதோ யாரும் எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டும் கூறமுடியாத அளவுக்கு அங்கு கறை படியாத ஆட்சி நடைபெற்றது. அவற்றை எல்லாம் விட நக்சல்வாதிகளால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் அந்த மாநிலத்தில் பாஜக அரசு ஏற்பட்ட பின்புதான் நக்சல்களின் கொட்டம் பெருமளவில் அடங்கியது. சட்டம் ஒழுங்கும் அந்த மாநிலத்தில் முன்பைவிட சிறப்பாக இருந்தது.


எல்லாம் சரியாக இருந்தும், 33.37 சதவீத வாக்குகளை பெற்று தனக்கான வாக்கு வங்கியை அதிகம் சிதறாமல் காப்பாற்றியும் அந்த மாநிலத்தில் பாஜக தனது ஆட்சியை வெறும் 2 சதவீதமே பெற்ற கூடுதலாக பெற்ற 3 கட்சி கூட்டணியிடம் ஆட்சியை இழந்தது எப்படி?


தோல்வி குறித்து அரசியல் நிபுணர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறும் காரணங்கள் இதுதான்:


பாஜகவின் அகில இந்திய தலைமை குடியுரிமை திருத்தச் சட்டம், 370 வது பிரிவு மற்றும் ராம் மந்திர் போன்ற தேசிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தியதால் ஜார்கண்ட் விவகாரத்தில் ஆழ்ந்து சிந்திக்கவில்லை. ஜார்கண்ட் மாநில முதல்வரும், முதல்வர் பதவிக்கான வேட்பாளருமான ரகுபர் தாஸ் சிறந்த நிர்வாகியாக அறியப்பட்டாரே தவிர சூழ்நிலைக்கேற்ப வெற்றியை தட்டிப் பறிக்கும் வியூகங்கள் அமைப்பதில் இவர் தவறிவிட்டார்.


குறிப்பாக கூட்டணிக்காக பாஜகவை நாடிவந்த ஜார்கண்ட் மாணவர் சங்கத்தின் (ஏ.ஜே.எஸ்.யூ) பலத்தை ரகுபர் தாஸ் கவனிக்கத் தவறிவிட்டார். ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு )18 தொகுதிகள் கோரிய நிலையில் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணி அமைத்திருந்தால் பாஜகவின் வாக்குகள் அனைத்து தொகுதிகளிலும் அதிகரித்து மாபெரும் வெற்றி அடைந்திருக்கலாம். ஏனெனில் ஜார்கண்ட் மாணவர் சங்கம் 8.10 சதவீத வாக்குகளைப் பெற்றது. இரண்டையும் சேர்த்தால் 41. 47 சதவீத வாக்குகள் வருகிறது. எனவே பாஜக வெற்றி உறுதியாகி இருக்கும். மேலும் ஒரு கூட்டணி இல்லாததால் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வாக்குகள் (ஏஜேஎஸ்யுவுக்கு ஆதரவானவை ) பாஜகவுக்கு மாற்றப்படவில்லை, மேலும் பல தொகுதிகளில் பாஜகவின் வாக்குகளை ஏஜேஎஸ்யூ வேட்பாளர்கள் குறைத்தனர். அவர்களை நழுவ விட்டது கூட்டணி அமைக்காமல் தனித்து நின்றதும் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.


பாஜக மேலிடம் மாநிலத்தில் உள்ள வேறு எந்த தலைவர்களையும் கலந்தாலோசிக்காமல் முழுக்க, முழுக்க ரகுபர் தாஸ் சொல்வதையே நம்பியது. ரகுபர்தாஸ் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களைக் கூட கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதால் மூத்த அமைச்சர் சாரியு ராய் அதிருப்தி அடைந்தார். அவருக்கு கூட தேர்தலில் நிற்க டிக்கெட் அளிக்காததால் அவர் ரகுபர்தாஸ் போட்டியிட்ட தொகுதியில் சுயேட்சையாக போட்டிட்டு ரகுபர்தாசை படு தோல்வி அடைய செய்தார். மேலும் ரகுபர்தாஸ் தனது ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை ஆராயாமல் இருந்ததால் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் பிரச்சாரங்களின் போது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதில் அளிக்க தவறினார். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் பிரச்சாரம் மட்டுமே வெற்றிக்கு வழி வகுத்துவிடும் என ரகுபர்தாஸ் நம்பினார்.


ஆனால் இந்த முறை பழங்குடி இனத்தவரான ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் சாதியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தார். ரகுபர் தாஸ் அண்டை மாநிலமான சத்தீஷ்கரை பூர்வீகமாகக் கொண்டவர். பழங்குடி அல்லாதவர். இதை பிரச்சாரங்களில் ஹேமந்த் சோரன் தொடர்ந்து முடுக்கி விட்டார். இதுவும், பழங்குடி மக்களுக்கு எதிரான ஒரு பிம்பத்தை ரகுபார் தாஸுக்கு ஏற்படுத்தியது.


கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்து நிற்பதை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு ஜேஎம்எம் ஒரு வலுவான கூட்டணியையும் ஏற்படுத்திக் கொண்டு குறைந்த வாக்கு சதவீதங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் விட்டது.


ஏனெனில் பதிவான மொத்த வாக்குகளில் பாஜக 33.37 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், ஜே.எம்.எம், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து பெற்ற மொத்த வாக்குப் பங்கு 35.35 சதவீதம் மட்டுமே.


இந்த சிறிய வாக்கு சதவீதத்தை வைத்து பலம் மிக்க தனி ஒற்றை யானையான பாஜகவை ஜே எம் எம் கீழே தள்ளிவிட்டது.


எனவே ஏ.ஜே.எஸ்.யு வை பாஜக அனுசரித்து சென்றிருந்தால் ஒரு வெற்றிக் கூட்டணியை ஏற்படுத்தி இருக்க முடியும்.


ஆனால் இதற்கு மாறாக, ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய அளவில் பெரிய கட்சியான காங்கிரஸ் தனது கவுரவத்தை விட்டுக் கொடுத்து தன்னை ஒரு சிறிய பங்காளியாக ஆக்கிக் கொண்டது, அதாவது தனது செல்வாக்கை புரிந்து கொண்டு ஜே.எம்.எம் அளித்த இடங்கள் குறைவாயினும் அதில் திருப்தி அடைந்தது. இதன் பலனாக பாஜகவை காங்கிரஸ் கூட்டணி தோற்கடித்து விட்டது என அக் கட்சி தேசிய அளவில் பிரச்சாரம் செய்து தம்பட்டம் அடித்து வருகிறது.


மேற்கண்ட காரணங்கள் தவிர ரகுபர்தாஸ் சில சமயங்களில் பொது இடங்களில் கோபத்தை காட்டிய வீடியோ நிகழ்வுகளை எதிர் கட்சிகள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் பரவச் செய்து அவரது இமேஜை சரித்தன. ஒரு வீடியோவில் பழங்குடி இனத்துக்கு எதிராக ரகுபார் தாஸ் பேசுவதைப் போல சித்தரித்து ஊடகங்களில் பரவவிடப்பட்டன. இதனால்தான் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் 28 தொகுதிகளில் பாஜக இரண்டில் மட்டுமே பாஜக வெற்றி பெற முடிந்தது எனவும் கூறப்படுகிறது.


மேலும் ரகுபர்தாஸின் சர்வாதிகார பாணி சொந்த கட்சி நிர்வாகிகளையும் அந்நியப்படுத்தியது என்றும் இதனால் கட்சிக்குள்ளேயே பிளவுக்கு வழி வகுத்ததாகவும், பல கட்சி ஊழியர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.


மூத்த தலைவர் சாரியு ராயின் கிளர்ச்சியும், கட்சி உறுப்பினர்களின் அதிருப்தியும் பாஜகவின் தேர்தல் வாய்ப்புகளை பாதிக்காது என்று ரகுபார் தாஸ் கட்சியின் மத்திய தலைமைக்கு தவறான கருத்துக்களை தெரிவித்தார்.


கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ரகுபர் தாசை நம்பியதன் மூலமும், அவர் மீது அளவு கடந்த மீது நம்பிக்கை வைத்ததன் மூலமும் தவறு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள்வரை தேர்தல் டிக்கெட் ஒதுக்கும் பணியை பாஜக மேற்கொண்டதால் வேட்பாளர்களால் முறையாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை.


அனால் எதிர் வரிசையில் ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணி ஆரம்பத்தில் இருந்தே ஒரு நல்ல தொடக்கத்தை கொண்டிருந்தது. ஹேமந்த் சோரன், உண்மையில், ஒரு வருடம் முன்பே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ஆனால் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவை பாஜக குறைவாக மதிப்பிட்டு விட்டது.


பாஜகவின் இந்த தோல்விக்கு காரணம் மாறியிருந்த உள்ளூர் அரசியல் சூழ்நிலைகளை அறியத் தவறியதும், வெற்றியின் மீது கொண்டிருந்த அளவு கடந்த நம்பிக்கையும்தான் என கூறப்பட்டாலும், பாஜக தனது தனித்தன்மையை அங்கு இழந்துவிடவில்லை. பாஜக இப்போதும் அங்கு பலத்தில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் ஒரு தனி யானைதான்.


ஆனால் கட்சி மேலிடத்தின் கவனமும், குறிப்பாக அமித்ஷாவின் சாணக்கிய குண வெளிப்பாடும் தேர்தல் களத்தில் சரியாக கிடைக்கப் பெறாததால் 3 பூனைகள் ஓன்று சேர்ந்து யானையை தந்திரமாக படுக்க வைத்து விட்டது என்பது உண்மைதான்.


Next Story