Top
undefined
Begin typing your search above and press return to search.

சீனாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவும் கொரோனா! நாடு திரும்பும் மக்களை 2 வாரம் தனி தீவில் தள்ளி வைக்கும் ஆஸ்திரேலியா!

சீனாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவும் கொரோனா! நாடு திரும்பும் மக்களை 2 வாரம் தனி தீவில் தள்ளி வைக்கும் ஆஸ்திரேலியா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Jan 2020 6:09 AM GMT



சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக BBC செய்தி நிறுவனம் இன்று செய்தி வௌியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இதுவரையில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்தாலும் உண்மையில் மரணங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.


இன்றைய தகவல்படி சீனாவில் 7711 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் சீனா முழுவதுமே நோய் தீவிரமாக பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


இந்தியாவின் கேரள மாநிலத்திலும் பிலிப்பைன்ஸ், பின்லாந்து மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் கேரளாவை சேர்ந்த மாணவரே இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையொன்றில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த நிலையில், சீனாவின் வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபெய் பிராந்தியத்தில் இருந்து அழைத்து வரப்படுபவர்களை இரண்டு வாரங்களுக்கு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்து கண்காணித்து சிகிச்சை அளித்து தங்கள் நாட்டுக்குள் கொண்டு வர ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. கிட்டத்தட்ட 600 ஆஸ்திரேலியர்களை அங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.


ஆனால் ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு சீனாவின் ஹூபெய் பிராந்தியத்திலுள்ள ஆஸ்ஸ்திரேலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் தனித்தீவில் அடைத்து வைக்க நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


மேலும், சீனாவை தவிர ஏனைய நாடுகளில் வைரஸ் பரவும் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பரவும் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


2002 – 2003 ஆம் ஆண்டுகளில் பரவிய சார்ஸ் வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பை விட கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


வைரஸ் பரவுகின்ற காரணத்தினால் கூகுள் உள்ளிட்ட சீனாவில் அமைந்துள்ள உலகின் பிரபல நிறுவனங்கள் தமது அலுவலகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.


வீட்டில் இருந்த வண்ணம் சேவையாற்றுமாறு Microsoft நிறுவனம் சீனாவிலுள்ள தமது ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த நிலையில், சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள தமது நாட்டு மக்களை மீண்டும் தங்கள் நாட்டுக்கு அழைத்து வர தனி விமானமொன்றை நியூஸிலாந்து அனுப்பியுள்ளது.


கொரோனா வைரஸ் தொடர்பாக யாரும் அச்சமடைய வேண்டாம் என கூறிய தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் ஹூபெய் பிராந்தியத்திலுள்ள 700 தென் கொரிய மக்களில் ஒரு பிரிவினரை மீண்டும் தங்கள் நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்துள்ளதாக கூறினார்.


Next Story