Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா தொற்று நேரத்தில் போலி செய்தியை வெளியிடும் 'தி வயர்' செய்தித்தளம் : எங்கே ஊடக தர்மம்?

கொரோனா தொற்று நேரத்தில் போலி செய்தியை வெளியிடும் தி வயர் செய்தித்தளம் : எங்கே ஊடக தர்மம்?

ஏந்திழைBy : ஏந்திழை

  |  23 May 2020 3:20 AM GMT

கொரோனா தொற்றை ஒரு‌ சவாலாக எடுத்துக் கொண்டு இந்திய நிறுவனங்கள் மேக் இன்‌ இந்தியா திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பல நிறுவனங்கள் மருத்துவ உபகரண வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் விறுவிறுப்பாக ‌ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனம் மருத்துவர்களின்‌ உதவியுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கியது; சாஸ்த்ரா பல்கலை அவர்களது 3D ப்ரின்டரை பயன்படுத்தி இரு நோயாளிகளுக்கு ஒரு வென்டிலேட்டர் மூலம் சுவாச உதவி அளிக்கும் ஸ்பிளிட்டரை தயாரித்து இலவசமாக வழங்கியது. இவ்வாறு பலரும் இச்சூழ்நிலையை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி உற்சாகமாக இந்தியாவின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் 'அண்ணன் எப்போ சாவான்‌ திண்ணை எப்போ காலியாகும்' என்பது போல், இந்த அசாதாரணமான சூழ்நிலையிலும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜோதி CNC என்ற‌ நிறுவனம் பத்தே நாட்களில் புதிய வென்டிலேட்டரை‌ (Dhaman-1) வடிவமைத்து விட்டதாகவும் விரைவில் தயாரிப்பில் ஈடுபட்டு முதல் 1000 வென்டிலேட்டர்கள் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது. சந்தையில் தற்போது கிடைக்கும் வென்டிலேட்டர் ஒன்றின் விலை கிட்டத்தட்ட 6‌ லட்சம் என்றிருக்கும் நிலையில் Dhaman-1 விலை ஒரு லட்சத்துக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அறிவித்தபடியே அந்நிறுவனம் அகமதாபாத்தில் உள்ள 1200 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு 230 வென்டிலேட்டர்களை அளித்தது. இந்நிலையில் அம்மருத்துவமனையின்‌ தலைமை மருத்துவ கண்காணிப்பாளர், குஜராத் மருத்துவ சேவைகள் கழகத்திற்கு எழுதிய கடிதத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளுக்கும், சிறுநீரக சிறப்பு மருத்துவமனைக்கும் 50 உயர்தர வென்டிலேட்டர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தங்களது மயக்கவியல் துறைத்தலைவர் Dhaman-1 மற்றும் AGVA(இரண்டுமே சுதேசி தயாரிப்புகள்) வென்டிலேட்டர்கள் 'எதிர்பார்ப்பை சந்திக்கும்‌ வகையில் செயல்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அகமதாபாத் மிர்ரர் எனும் செய்தி நிறுவனம்‌ செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் இந்த வென்டிலேட்டர்களை வாங்க முடிவு செய்திருந்த நிலையில் இந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு‌ இதில் ஊழல் நடந்துள்ளதாகவும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் நரேந்திர மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் பராக்ரமசிங் ஜடேஜாவின் நிறுவனமான ‌ஜோதி CNCக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் வதந்தி பரப்பப்பட்டது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு காங்கிரஸ் ஆதரவு செய்தி வலைத்தளமான The Wire ஏற்கனவே பல முறை ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக பல கட்டுரைகள் எழுதி மூக்குடைபட்ட ரோகிணி சிங்கின் உதவியுடன் Dhaman-1 ரக வென்டிலேட்டர் போலி எனவும், போலி உபகரணத்தை வாங்குவது மூலம் குஜராத் மற்றும் மத்திய அரசுகள் நோயாளிகளின் உயிரைப் பணயம் வைப்பதாகவும் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனமான HLL Life Care 5,000 Dhaman-1 வென்டிலேட்டர்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஜோதி சி.என்.சி நிறுவனத்தின்‌ பங்குதாரர்கள் பிரதமர் மோடிக்கு அவரது பெயர் பதித்த சிறப்பு உடையை பரிசளித்த குடும்பத்தினர்‌ என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

Dhaman-1 ரக வென்டிலேட்டர் உண்மையான வென்டிலேட்டரே இல்லை, Ambu Bag எனப்படும்‌ சாதாரண சுவாச உதவி அளிக்கும் கருவி என்று காங்கிரஸ் கூறும் நிலையில், வென்டிலேட்டர் வேலை செய்யவில்லை என்றும், உயர்தர வென்டிலேட்டர் தேவை என்றும் கூறிய அதே மருத்துவர்கள் வென்டிலேட்டர் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களை பரிசோதனை செய்து அனுமதி வழங்கும் குழு முன்னிலையில் நோயாளிக்கு பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்ட‌ போது அக்குழுவில் இருந்ததும், அவர்கள் கருவியில் சில மாற்றங்கள், வசதிகளை சேர்க்குமாறு‌ கூறியதை ஏற்றுக் கொண்டு அவ்வாறே செய்து தரப்பட்டதாகவும் அதே அகமதாபாத் மிர்ரர் ‌செய்தி வெளியிட்டுள்ளது‌. Dhaman-1 ரக வென்டிலேட்டர் சந்தையில் இருப்பதிலேயே உயர்தரமானவையோ அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவையோ அல்ல என்று நிறுவனம் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தியது. இது பெருந்தொற்று காலத்தில் அவசரநிலையை சமாளிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்றும் தேவைப்படும் மாற்றங்கள், வசதிகள் செய்து தரப்படும் என்றும் கூறியது.

அகமதாபாத் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயின் தீவிரத்திற்கு ஏற்பவே மருத்துவ உபகரணங்களைக் கொண்டு சிகிச்சை வழங்கப்படும். இதையே மருத்துவர்களும் கூறியுள்ளனர். மயக்கவியல் துறைத்தலைவர் சைலேஷ் ஷா கூறுகையில், "Dhaman-1 வென்டிலேட்டர் தற்போதுள்ள நிலையில் (வடிவமைப்பு மற்றும் வசதிகள்) இருப்பதிலேயே உயர்தர வென்டிலேட்டருடன் ஒப்பிடும் அளவு சிறப்பானதாக இல்லை. ஆனால் எங்களிடம் தேவையான அளவு உயர்தர வெண்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதால் Dhaman-1 ரக வென்டிலேட்டர்களை சிறிய அளவிலேயே உபயோகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அவை உயர்ந்தர வென்டிலேட்டர் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் வேறு வென்டிலேட்டர்கள் இல்லாத நிலையில் அவற்றை பயன்படுத்தலாம்.

கடந்த வாரத்தில் வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் உயர்ரக வென்டிலேட்டர்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது' என்றார். மேலும் "தரமான வென்டிலேட்டர்கள் சந்தையில் கிடைக்காத நிலையில் அவற்றை பெற்றுத்தருவது அரசுக்கும் கடினமான பணியே எனவே நம்மிடம் இருக்கும் தரத்தில் சற்று குறைந்த வென்டிலேட்டர்களையே உபயோகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது" என்று விளக்கினார்.

Deccan Herald செய்தி நிறுவனத்திடம் கடிதத்தை எழுதிய மருத்துவர் மோடி கூறுகையில், "நான் ஒவ்வொரு நாளும் இது போன்ற பல கடிதங்களை எழுதி வருகிறேன். இந்தக் கடிதத்தைப் பற்றி மட்டும் செய்து நிறுவனங்கள் பரபரப்பாக பேசுவது ஏன் என்று தெரியவில்லை. Dhaman-1 ரக வென்டிலேட்டர்களில் ஒரு சில வசதிகள் சேர்க்கப்பட்டு அவை மேம்படுத்தப்பட வேண்டும் அவ்வளவே. அவற்றை உபயோகப்படுத்தும் விதமாக மேம்படுத்த நிறுவனத்திலிருந்து பணியாளர்கள் வந்து உதவினார்கள். உலகெங்கிலும் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை இருக்கும் நிலையில் இத்தகைய முயற்சி எடுக்கும் நிறுவனங்களை நாம் குறை கூற இயலாது."

மேலும் இந்த வென்டிலேட்டர் தேசிய தர ஆய்வு நிறுவனத்திடமும் மருத்துவ உபகரணங்களுக்கு அனுமதி அளிக்கும் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு குஜராத்தில் உள்ள ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டு அனுமதி பெற்ற பின்னரே மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது P.I.B. பதிவிட்ட ட்விட்டர் இடுகையில் குஜராத் அரசுக்கு வென்டிலேட்டர்கள் இலவசமாகவே வழங்கப்பட்டன என்றும் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ தரம் உள்ளவையே என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று ஒரு பெருந்தொற்று சூழ்நிலையில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உதவி செய்கிறேன் என்ற பெயரிலும் ஊழலை வெளிப்படுத்துகிறேன் என்ற பெயரிலும் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் அவமானப்படுத்தும் விதமாகவும் மக்கள் மத்தியில் அரசு சரியான முறையில் செயல்படவில்லை என்ற அச்சத்தை விதைக்கும் விதமாகவும் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறது. ஊடக தர்மத்தை காப்பாற்ற வேண்டிய பத்திரிக்கையாளர்களோ தொழில் தர்மத்திற்கு விரோதமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. இதே ரோகினி சிங் தான் இதை வயர் பத்திரிக்கையில் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவை பற்றி தவறான தகவல் வெளியிட்டு தற்போது 100 கோடி மானநஷ்ட வழக்கை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story