Top
undefined
Begin typing your search above and press return to search.

காதலில் விழுதல் என்பது உண்மையில் என்ன? ஐ லவ் யூ என்பது மந்திரமா? - ஆழமான பார்வை

காதலில் விழுதல் என்பது உண்மையில் என்ன?  ஐ லவ் யூ என்பது மந்திரமா? - ஆழமான பார்வை

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  13 Feb 2020 5:57 PM GMT

ஆங்கிலத்தில் "காதலில் விழுதல் " என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. காரணம், ஒருவர் காதலில் விழ மட்டுமே முடியுமே அல்லாமல் அதிலிருந்து எழவோ அல்லது அதை பிடித்து கொண்டு மேலே எழவோ முடியாது. ஆன்மீக ரீதியாக சொன்னால் ஒருவரிடமிருந்து நான் என்கிற தன்மை விழுகிற போது அங்கே அன்பு எழுகிறது. அதுவே காதலில் விழுதல் என்று வெளிப்படுத்தப்படுகிறது. இந்த கருத்தை தான் ஈஷாவின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களும் வலியுறுத்துகிறார்.

பொதுவாக, நமக்கு செளகரியமான, இலாபம் தரக்கூடிய தொடர்புகளை தவறுதலாக உறவுகள் என்று சொல்ல பழகிவிட்டோம். மக்களுக்கு உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக, அல்லது பொருளாதார ரீதியாக ஒரு உறவு தேவைப்படுகிறது. இதில் ஏதொவொரு நிர்பந்தத்திற்காகவே உறவுகளை பேணி கையாள்கிறார்கள். இதற்கு ஏதுவாக ஒருவரிடம் சென்று "ஐ லவ் யூ " என்றும் சொல்லி பழகி விட்டார்கள் ஐ லவ் யூ என்பது ஒரு மந்திரம் போல் ஆகிவிட்டது. நீங்கள் ஒருவரிடம் இதை சொல்வதன் மூலம், அந்த மந்திரமே மீண்டும் உங்களிடம் சொல்லப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்.

நாம் செய்கிற ஒவ்வொரு விஷயங்களும் ஏதோவொரு தேவையை பூர்த்தி செய்வதற்காகவே செய்யப்படுகின்றன. அந்த ஒவ்வொரு செயலிலும் அன்பால், காதலால் மலரும் சாத்தியம் இருப்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஆனால் எதிர்பாரா விதமாக பலரும் உறவும், காதலும் நம் செளகரித்திற்கு, நல்வாழ்விற்கு மட்டுமானது என தவறாக புரிந்து கொள்கிறார்கள். அதற்காக இதையெல்லாம் விரும்பினால் அது காதல் இல்லை என்று பொருளில்லை. இப்படி ஒன்றை எதிர்பார்க்க துவங்கினால் அது குறிப்பிட்ட சில எல்லைகளுக்குள் நிற்கிற உறவாக ஆகிவிடும்.

எனவே காதல் என்பது எல்லைகளற்றது, எதிர்பார்ப்பற்றது. எப்போது ஒரு உறவில் எதிர்பார்ப்பு இருக்கிறதோ அது உங்களை முழுமையடையச்செய்யாது, உங்களை வேறொரு பரிமாணத்திற்கு கூட்டி செல்லாது. அது ஒரு செளகரியமான ஏற்பாடு மட்டுமே.

எனவே நீங்கள் வாழ்கையை வாழ்கிறீர்கள் என்றால் அங்கே காதல்/அன்பு என்பது இயல்பானது. ஒவ்வொரு மனிதருக்கும் இந்த இயல்பான காதல் என்பது சாத்தியமானதே ஆனால் ஒவ்வொரு தனிமனிதரும் தான் சந்திக்க நேர்ந்த அல்லது அனுபவிக்க நேர்ந்த நம்பிக்கைகள், அபிப்ராயங்கள், தத்துவங்கள், தர்கங்களின் அடிப்படையில் காதல் என்பதை அணுகுகிறார்கள்.

எனவே காதல் என்பது ஏதொவொரு செயலை போல் செய்யப்படுவது அல்ல. இது இரு நபர்களுக்கு இடையேயானது மட்டுமல்ல. இது உங்களுக்குள் நிகழ்வது. கல்லோ, மண்ணோ, செடியோ, கொடியோ உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் எந்தவொன்றையும் ஒவ்வொரு நாளும் 15 – 20 நிமிடங்கள் கவனத்துடன் கவனியுங்கள். உங்களுக்குள் அன்பு பெருகும். நீங்கள் அந்த கல்லின் மீதோ புல்லின் மீதோ அன்பு கொண்டிருக்கிறீர்கள் என்பது அதற்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு அந்த உணர்வு இருக்கிறது இல்லையா? அதுவே உங்களுக்கு ஓர் ஆகச்சிறந்த அனுபவத்தை வழங்கும். புரிந்து கொள்வீர்கள் காதல் என்பது செய்யப்படுவதல்ல, காதல் என்பதே நீங்கள் தான் என்று.

( சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உரையின் சாரம்)

Next Story