Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழ்நாடு தனிநாடாக உதவுவீர்களா? - அமெரிக்காவிடம் திமுக அமைச்சர்‌ பிரிவினைவாதத்திற்கு உதவி கேட்டதாக வெளியிட்ட விக்கிலீக்ஸ்.!

தமிழ்நாடு தனிநாடாக உதவுவீர்களா? - அமெரிக்காவிடம் திமுக அமைச்சர்‌ பிரிவினைவாதத்திற்கு உதவி கேட்டதாக வெளியிட்ட விக்கிலீக்ஸ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 May 2020 4:01 AM GMT

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணத்தில் எமர்ஜென்சி காலகட்டத்தில் திமுக அமைச்சர்‌ ஒருவர்‌ தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரியும் தனிநாடு கோரிக்கையை முன்வைத்தால் அமெரிக்கா அதற்கு உதவுமா என்று கேட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு, "நான் நேற்று தமிழக தொழிலாளர் நல மற்றும் வீட்டுவசதித் துறை ராஜாராமை அவரது இல்லத்தில் சந்தித்து செக்கரட்டரி‌ சைமனை அவர் சந்தித்த புகைப்படம் வெளியான Foreign Services இதழை அளித்தேன். அமைச்சர் உடனடியாக இந்தியாவில் நடப்பதைப் பற்றி தாங்கள் என்ன‌ நினைக்கிறீர்கள் என்று‌ கேட்டார். நமது கடைசிச் சந்திப்பிற்குப் பிறகு நிறைய நடந்திருக்கிறது என்று நான் ஆரம்பித்தேன்.

அவர் என்னை இடைமறித்து "நீங்கள் வந்தது நல்லதாகப் போய்விட்டது. நானே உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தேன். நான் உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்க வேண்டும். தமிழ்நாடு சுதந்திரம் பெற முடிவு செய்தால் அமெரிக்கா உதவுமா?". நான் அதற்கு நானும் நேரடியாகவே பதிலளிக்கிறேன் என்று கூறி "இல்லை" என்று கூறினேன். இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. நாங்கள் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் ஆதரிக்கிறோம். இந்த யோசனை தீவிரமாக விவாதிக்கப்படுகிறதா என்று‌ நான் கேட்டபோது உயர்மட்ட அளவில் இதைப்பற்றி பேசப்படவில்லை ‌என்று கூறினார். பிரிவினைவாதக் கொள்கையை திமுக பல வருடங்களுக்கு முன்னரே கைவிட்டுவிட்டது‌. ஆனால் கடந்த சில நாட்களாக கட்சியில் இளைஞர்கள் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். 'சோவியத் யூனியனும் பிற கம்யூனிஸ்ட் நாடுகளும் இந்தியாவில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் இந்திரா காந்திக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இந்த முயற்சி வெற்றி அடைந்தால் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்துவிடும். அத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிய முயன்றால் அதற்கு அமெரிக்கா உதவுமா?' என்ற கேள்வி விவாதிக்கப்படுகிறது. இந்தக் காரணத்தால்தான் அவர் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க விரும்பியதாக கூறினார்.



மேலும் பேசிக்கொண்டிருந்த போது ராஜாராம் இதைப்பற்றி மீண்டும் என்னிடம் பேசவில்லை. திமுக மற்றும் தமிழ்நாடு அரசு எமர்ஜென்சியை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை பற்றியும் இந்த விஷயத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் மட்டுமே பேசினோம். 1971 இல் இருந்து அமைச்சராக பதவி வகித்து வரும் ராஜாராம் தூதரக தலைமையுடன் வெகு நட்பாகவும் எளிதில் அணுகக் கூடிய வகையிலும் இருக்கிறார். தூதர் Saxbe அவர்களுக்கு வைத்த விருந்தில் கலந்து கொண்டதோடு அமெரிக்காவிற்கு இரண்டு முறை வந்துள்ளார். அவர் கூறுவதை உண்மை என எடுத்துக்கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் நிலைமை மிக மோசமானால் தமிழ் நாட்டுக்கு சுதந்திரம் கேட்பதைப் பற்றி கட்சியில் இருக்கும் இளம் தலைவர்கள் விவாதிக்கிறார்கள். ஆனால் கட்சியின் உயர் மட்டத்தில் இதைப் பற்றி தீவிரமாக பேசப்படவில்லை.

மேற்கண்ட செய்தியை தயாரித்த பிறகு ஒரு உள்ளூர் கல்வியாளர், இதற்கு முன் நான் சந்தித்திராதவர், இரண்டு நாட்களுக்கு முன் என்னை சந்திக்க அனுமதி கேட்டு என்னைப் பார்க்க வந்திருந்தார். ஹான்க்‌ ராம்சே மற்றும் பால் ஷெர்பர்ட் இருந்தபோது தூதரகத்துடன் நெருக்கமான தொடர்பு இருந்ததாக கூறியவர் தற்போதைய நிலையைப் பற்றி கவலை கொண்டதால் முதலமைச்சரை சந்தித்து நிலைமை மிக மோசமானால் தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்க வேண்டும் என்றும் பிற இந்திய மாநிலங்கள் அனைத்தும் கம்யூனிஸ்ட் ஆட்சியின்கீழ் வந்தால் அமெரிக்கா உதவ வாய்ப்புள்ளது என்றும் கூறியதாக தெரிவித்தார். முதலமைச்சர் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்று கூறியதாகவும் எனினும் சூழ்நிலையை தான்‌ உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வியட்நாமுக்கு பிறகு ஆசியாவில் அமெரிக்கா வேறு எங்கும் புதிதாக தலையிடும்‌ என்று தனக்கு தோன்றவில்லை என்றும்‌ கூறியதாகத் தெரிவித்தார்." இவ்வாறு அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக பல வளர்ச்சித் திட்டங்களை எதிர்த்து வருவதும், எதிர்க்கும்‌ வெளிநாட்டு தொடர்புகள் உள்ள நபர்களுக்கும் அமைப்புக்களுக்கும்‌ ஆதரவு‌ அளித்து வரும்போது திமுக ஆதரவு சமூக ஊடக நபர்கள் 'இந்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது; எனவே தமிழ்நாடு தனிநாடாக வேண்டும்' என்று பிரிவினைவாதம் பேசி வரும்‌ நிலையில் பிள்ளையையும்‌ கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும்‌ திமுகவின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டும் விதமாக விக்கிலீக்ஸ் ஆவணம் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் பிற நாட்டு அரசுகளிடம் இன்னும் என்னென்ன ரகசியங்களைக் கசிய விட்டிருக்குமோ என்ற அச்சத்தையும்‌ ஏற்படுத்தியுள்ளது.

Next Story