கொரோனா வைரஸும் உலக கச்சா எண்ணெய் அரசியலும் - ஓர் அலசல்
கொரோனா வைரஸும் உலக கச்சா எண்ணெய் அரசியலும் - ஓர் அலசல்

சீனாவின் வுஹான் மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஆட்கொல்லி இன்று வரை உலகம் முழுதும் சுமார் 1,60,000 மக்களைத் தொற்றி அதில் சுமார் 6,000 மக்களை பலி வாங்கியுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து அதன் விலை அதிரடியாக விழ ஆரம்பித்தது. 1 பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை சுமார் $35 என்கிற நிலையைத் தொட்டது. இது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு (OPEC) தலைவலியை உண்டாக்கத் தொடங்கியது, காரணம் அந்நாடுகளின் 90% வருமானம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியிலிருந்தே வருகிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால் அவர்கள் பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கும். OPEC நாடுகளுக்கு தலைமை என்று அதிகாரப் பூர்வமாக எந்த நாடும் இல்லாவிட்டாலும் சவுதி அரேபியாதான் முக்கிய முடிவுகளை எடுக்கும். பிற நாடுகள் அதனை வழி மொழியும். எனவே கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிடம் தன்னுடைய திறமை மற்றும் தலைமைப் பண்பை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் சவுதி பட்டது இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உள்ளார்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வள நாடுகளில் ரஷியாவும் ஒன்று, ஆனால் அது OPEC கூட்டமைப்பில் இணையவில்லை. எனவே ரஷியா சவுதி அரேபியாவின் கட்டுப்பாட்டையோ முடிவையோ ஏற்க வேண்டிய அவசியத்தில் இல்லை. ஆனால் ரஷியா தன்னுடைய உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளவில்லையெனில் கச்சா எண்ணெய் விலை சவுதி எதிர்பார்த்த விலையை அடையாது. எனவே சவுதி தலைமையிலான OPEC மற்றும் ரஷியா இடையே ஒப்பந்தம் தேவை. அதற்காக சவுதி இளவரசர் ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கச்சா எண்ணெய் உற்பத்திக் குறைப்பிற்கான பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால் ரஷிய அதிபர் புட்டினுக்கு அதில் உடன்பாடில்லை. காரணம் ரஷியாவின் இலக்கு அதன் பரம எதிரி அமெரிக்கா. அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களை அழிப்பது. ஆம் கடந்த 20 ஆண்டுகளில் உலகின் அதிக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வது அமெரிக்க நிறுவனங்கள் தான். அதன் காரணமாக அமெரிக்கா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் அமெரிக்காவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் அதிக பொருட் செலவில் மட்டுமே எடுக்கப் படக் கூடிய ஷேல் எண்ணெய் . அவை பாறைகளின் இடுக்கில் இருந்து அதி நவீன பிராக்கிங் (Fracking) தொழில் நுட்பத்தின் மூலம் மாத்திரமே எடுக்கப் படக் கூடிய எண்ணெய். 1 பீப்பாய் எடுப்பதற்கே நிறுவனங்கள் $40 செலவு செய்ய வேண்டும். ஆனால் சவுதி மற்றும் ரஷிய நாடுகளில் எண்ணெய் பூமிக்கடியில் இலகுவாக கிடைக்கும் எண்ணெய் . 1 பீப்பாய் எடுக்க ஆகும் செலவும் $2 மட்டுமே. எனவே $30 விலையில் கச்சா என்னை விற்குமேயாயின் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களால் ரஷியாவுடன் அந்த விலைக்கு போட்டியிட இயலாது. அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகும் அதன் தொழிலாளர்கள் வேலை இழப்பர் . கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரம் மேலும் வீழும். இது புட்டினின் கணக்கு.
புடின் தன்னுடைய கோரிக்கையை ஏற்காததால் கடுங்கோபத்திற்கு ஆளானார் சவுதி பட்டது இளவரசர் முஹம்மத் பின் சல்மான். எனவே ரஷியாவைப் பழி வாங்குவதற்கு ஒரே வழி கச்சா எண்ணெய் உற்பத்தியை இன்னும் அதிகமாக்கி விலையை இன்னும் கீழே கொண்டு செல்வது தான் என்று முடிவெடுத்தார். காரணம் ரஷியாவிற்கும் எண்ணெய் ஏற்றுமதிதான் 90% வருமானத்தைத் தருகிறது. ரஷியாவால் ஒரு அளவிற்கு மட்டுமே குறைந்த விலையை சமாளிக்க முடியும் அதற்கு கீழே சென்றால் வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு ரஷியா வரும் என்று சவுதி திடமாக நம்புகிறது . சவுதி இன்னும் 2 மில்லியன் பீப்பாய்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் என்று அறிவித்தார். அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்து பீப்பாய் $30 என்கிற அளவைத் தொட்டது.
ரஷியா முதலில் அமெரிக்க நிறுவனங்களை அழிக்கிறதா ? அல்லது சவுதி அரேபியா நினைப்பது போல் ரஷியா வேறு வழி இல்லாமல் பேச்சு வார்த்தைக்கு வருகிறதா?அல்லது சவுதி மற்றும் OPEC நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்து ரஷியாவிடம் சரணடைய போகின்றனவா? என்பதைக் காலம் தான் சொல்லும்.
ஆக சவுதி அரேபியா, ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையேயான சிக்கலின் காரணமாக தாற்காலிகமாக எண்ணெய் விலைக் குறைந்துள்ளது. ஆனால் இது ஒரு மிகப் பெரிய விலை ஏற்றத்திற்கான காரணியாக அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதன் காரணமாகவே இந்திய அரசாங்கம் தற்பொழுது சில்லறை எண்ணெய் விலையைக் குறைக்காமல் விலையை அப்படியே வைத்துள்ளது.இதன் காரணமாக அரசாங்கத்திற்கு வருடத்திற்கு 30,000 கோடி ருபாய் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நாளை கச்சா எண்ணெய் விலை உயருமாயின் இன்று நாம் கொடுக்கும் அதிக வரியை வைத்து சில்லறை விற்பனை விலையை கட்டுக்குள் வைக்க அது உதவும்.
குறிப்பு :- OPEC நாடுகளில் வெனிஸுலவும் அடக்கம்