கொரோனா அச்சம் - காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கொரோனா அச்சம் - காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீனவர்கள் 300 விசைப்படகு, 500 பைபர் படகு மற்றும் கட்டுமரங்களில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களுக்கு வசதியாக மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி துறைமுகத்தில் மீன்வியாபாரிகள், அதை சார்ந்து பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோர்கள், மீனவர்கள் என ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.
இதனால் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என கருதி மாவட்ட நிர்வாகம் மீன்பிடித்தொழிலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கேட்டுக்கொண்டது.
இதன்பேரில் மீன்வளத்துறை துணை இயக்குனர் கவியரசன், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தார்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து காரைக்காலில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை இதேபோல் கடலில் மீன் பிடித்து கொண்டிருப்பவர்கள் கரைக்கும் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.