Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவும், வருவாய்த்துறையும் - வெளிவராத தகவல்கள்.!

கொரோனாவும், வருவாய்த்துறையும் - வெளிவராத தகவல்கள்.!

கொரோனாவும், வருவாய்த்துறையும் - வெளிவராத தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 April 2020 1:04 PM GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு உத்தரவுகளை தீவிரமாக அமல்படுத்துதல் மற்றும் அது குறித்து கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து வருவாய் துறையினர் வெளியே தெரியாத வேர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையிலான நிர்வாகத்தில் வருவாய்துறை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் சப்கலெக்டர்களின் கோட்ட நிர்வாகங்களுடன் இயங்கிவருகிறது. 10 வட்டாட்சியர்கள், இவர்களுடன் வருவாய்துறை திட்டங்களுக்கான வட்டாட்சியர்கள், 35 வருவாய் ஆய்வர்கள், 506 கிராம நிர்வாக அலுவலர்கள், 800 கிராம ஊழியர்களுடன் வருவாய்துறை சக்கரம் கொரோனாவிற்கு எதிராக இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம்,கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற காவல்துறை, சுகாதாரத்துறை, துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையில் தங்கள் துறை விடுபட்டு போனதில் வருவாய்துறையினருக்கு மெலிதான சோகம்.

சட்டம் ஒழுங்கு, மற்றும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துதலில் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். சுகாதார மற்றும் மருத்துவத்துறையினர் பரிசோதனை மற்றம் சிகிச்சை பணிகளை மேற்கொள்கின்றனர். துப்புரவு பணியாளர்கள் கிரிமிநாசினி தெளித்து மக்களை பாதுகாக்கின்றனர். ஆனால் கொரோனா தடுப்பில் முதல் பணி முதல் முதுகெலும்பாய் உள்ள பணிகள் வரை வருவாய்துறையுடையதாக இருந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை முதலில் இனம் கண்டு சுகாதாரத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தது வருவாய்துறையின் கிராம நிர்வாக அலுவலர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவர் எங்கெங்கு சென்றார் என்ற விவரங்களை சேகரிப்பதும் வருவாய்துறையினர்தான். அதன்படி அந்நபர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள பிரபல ஸ்டோர் ஒன்றிற்கு சென்று பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அதனை அடுத்து அந்த ஸ்டோருக்கு சென்று அதில் பணியாற்றுபவர்களின் பட்டியலையும் முகவரியையும் எடுத்து அவர்களின் முழு விவரங்களையும் சுகாதாரத்துறைக்கு வருவாய்துறையினர் அளித்தனர். இதுபோல் ஆயிரக்கணக்கான விசாரணைகள், தேடல்கள், கண்டறிதல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் வருவாய்துறையினர் மின்னல்வேகத்தில் செயலாற்றி கொரோனாவின் இருப்பிடம் கண்டறிகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்தோ, வெளிமாநிலங்களிலிருந்து ஒரு நபர் வருகிறாரென்றால் அவரின் வீட்டில் தனிமை படுத்தப்பட்ட வீடு என்ற போஸ்டர் ஒட்டி அவரை வீட்டிற்குள் சமூக விலகலைகடை பிடிக்குமாறும் வெளியே செல்லக்கூடாது எனவும் கூறி அவரை கண்காணிக்கும் பணியினை மேற்கொள்வது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் தான். ஒரு வேளை அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய்துறை தகவல் அளிக்கின்றனர். அப்பகுதி முழுவதும் அத்துறையினர் மேற்பார்வையில் சீல் வைக்கப்படுகிறது. அப்பகுதியில் தனிமை படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களை பாதுகாப்பாய் வைத்திருப்பது வருவாய்துறையினர்தான்.

மேலும் வெளிமாநிலங்களிவிருந்து கடலுர் மாவட்டத்தில் பயிலும் மாணவர்கள் பற்றிய விவரங்களை வட்ட நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய்துறையினர் தகவல் அளிக்கின்றனர். இது போல் வெளிமாநிலங்களிலிருந்து கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், கட்டுமான பணிகள், பல்வேறு திட்டப்பணிகள், உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை கண்டறிந்து பட்டியலிட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை அத்தியாவசிய தேவைகளை வருவாய்துறையினர் செய்து தருகின்றனர். வெளிமாநிலங்களில் தங்கியுள்ள கடலூர் மாவட்ட தொழிலாளர்கள் குறித்த விவரங்களை அந்தந்த மாநில அரசுகளுக்கு தெரிவித்து அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணியிலும் வருவாய்துறையினர் செய்துவருகின்றனர்.

இது போல் கடலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் தனிமை படுத்தப்பட்ட நபர்களுக்கும் அரசு தரக்கூடிய ஆயிரம் ரூபாயும் அத்தியாவசிய உதவிப்பொருட்களையும் அவரவர் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கும் பணியையும் மேற்கொள்கின்றனர்.

இது போல் ஊரடங்கு மற்றும் சமூக விலகல் உள்ள நிலையில் நியாயவிலைக்கடைகளில் உதவித்தொகை மற்றும் பொருட்கள் வழங்குதலை தனிநபர் இடைவெளியோடு பெறுவதற்கான நடவடிக்கைகளும் வருவாய்துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது.

முதியோர் உதவித்தொகை வழங்குவதற்காக வரும் வங்கி முகவர், அஞ்சலக ஊழியர்களுக்கு பயனாளிகளை வருவாய்துறையினர் அடையாளம் காட்டுகின்றனர். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும் தேவையான இடுபொருட்களை வாங்குவதற்கும் அனுமதி சீட்டுகள் வருவாய்துறையினரால் வழங்கப்படுகிறது.

கிராமம் மற்றும் நகர பகுதிகளில் ஏற்படும் திடீர் பற்றாக்குறை, சட்டம் ஒழுங்கு, கிரிக்கெட், சூதாட்டம், குழுவாக கூடுதல் ஆகியவற்றை கண்காணித்து தகவல் அளித்து அப்பிரச்சனைக்கு உடனடி தீர்வினை ஏற்படுத்திவருகின்றனர். திருவிழாக்கள், சமூக விழாக்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது வருவாய்துறையினரின் முக்கிய பணியாக உள்ளது.

ஊராட்சிகளில் தூய்மை பணிகள், கிரிமிநாசினி தெளித்தல், அரசின் உத்தரவுகள் குறித்து தண்டோரா போடுதல், விதிமுறைகள் மீறும் கடைகள், நிறுவனங்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்து சீல் வைத்தல் ஊரடங்கை மீறும் குழுக்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவோர் குறித்தும் சமூக விலகள் கடைபிடிக்கப்படாத இடங்கள் குறித்தும் கண்காணித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கின்றனர். அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு வேளை கொரோனா சமூக பரவலாக மாறினால் அதனை எதிர்கொள்ளும் விதமாக பள்ள, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், தனியார் அரசு மருத்துவமனைகள், புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து அவற்றை தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளாக மாற்றவதற்குரிய பணிகளையும் வருவாய்துறையினர் தயார் நிலையில் செய்து வைத்துள்ளனர்.

இவ்வளவு பணிகளுக்கு இடையேயும் மாவட்ட நிர்வாகம் கேட்கும் அத்தனை புள்ளிவிவரங்களையும் சேகரித்து கொடுத்து புது புது திட்டமிடல்களுக்கு உதவியாகவும் வருவாய்துறையினர் இருந்து வருகின்றனர்.

வருவாய்துறையினரின் அர்ப்பணிப்பு மிகுந்த கொரோனா தடுப்பு பணிகளுக்கு வெளியே தெரியாத வேர்களை போன்றது வருவாய்துறையினரின் பணி என குறிப்பிட்டு கடலூர்மாவட்ட பொது மக்களும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்களும் பாராட்டு தெரிவித்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News