படப்பிடிப்பைத் துவங்கச் சொன்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் - திட்டவட்டமாக மறுத்த செல்வமணி.!
படப்பிடிப்பைத் துவங்கச் சொன்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் - திட்டவட்டமாக மறுத்த செல்வமணி.!

கரோனா அச்சுறுத்தலால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நம்பியிருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள், சீரியல்களின் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு மே 5ம் தேதி படப்பிடிப்பைத் துவக்கி, மே 11லிருந்து அதனை ஒளிபரப்பும் வகையில் தருமாறு கேட்டிருக்கிறார்கள். அதற்குத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் கலந்து கொள்ளத் தயாராக இருந்தாலும் ஃபெப்சி தொழிலாளக்ரள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் மட்டுமே படப்பிடிப்புக்கான சாத்தியம் இருக்கிறது எனவும், அந்த முடிவை ஃபெப்சி தான் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஃபெப்சியின் தலைவரான RK செல்வமணியை தொடர்பு கொண்டு பேசியுள்ளது தொலைக்காட்சி தரப்பு. கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3ம் தேதி ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுமா என்று தெரிந்த பின்னரே ஃபெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதைப் பற்றி முடிவு செய்ய முடியும் எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளவர், மே 15க்கு பிறகு இதைப் பற்றி முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளாராம்.
மேலும் அரசு சார்பில், படப்பிடிப்பில் பங்கு பெறுபவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு சில அம்சங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். அதில் அடுத்த சில மாதங்களுக்கு வெளியூர் படப்பிடிப்பைத் தவிர்த்தல், மிகக் குறைந்த அளவிலான தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்தல், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மாஸ்க் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவை குறிப்பிடப்படுள்ளதாம். படப்பிடிப்பு நடத்தலாம் என்ற நிலை ஏற்பட்டதும் அரசு சார்பில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறுகின்றனர்.