ஹிட்லரை வீழ்த்தும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி - அரசு பெண்கள் பள்ளியை சிறைச்சாலையாக மாற்றும் செயலுக்கு அதிமுக சட்டமன்ற கொறடா எதிர்ப்பு.!
ஹிட்லரை வீழ்த்தும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி - அரசு பெண்கள் பள்ளியை சிறைச்சாலையாக மாற்றும் செயலுக்கு அதிமுக சட்டமன்ற கொறடா எதிர்ப்பு.!

புதுச்சேரி சட்டமன்ற அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்களின் நலனுக்காக, அவர்களின் பசியை போக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் அரும்பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்கப்பட்டு பசியாற்றப்படுகிறது. அரிசி, பருப்பு, எண்ணைய், மளிகை பொருட்கள், நிவாரணம் என பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை அறிந்து அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்னரே தமிழகஅரசு அறிவித்து வழங்கி வருகிறது. தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் இரவு பகல் பாராமல் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் புதுச்சேரியில் சில அமைச்சர்கள் காணாமல்போய்விட்டனர். புதுச்சேரியில் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வால் கொரோனா நோய் தொற்று பரவவில்லை. ஆனால் காக்கை அமர பனம்பழம் விழுந்த கதையாக இந்த பலனை ஆளும் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அறுவடை செய்ய நினைக்கிறது. புதுச்சேரி அரசு இதுவரை மக்கள் நலன்சார்ந்த எந்த திட்டத்தையும் முறையாக அறிவிக்கவோ, செயல்படுத்தவோ அரசு முன்வரவில்லை. நாள்தோறும் இன்றைய கொரோனா நிலை என வீடியோ பதிவிடுவதிலும், யாரிடம் நிவாரணம், நிதி பெறலாம்? என ஆலோசித்து அவற்றை தங்கள் கட்சியினருக்கு வழங்குவதிலும்தான் அரசு முனைப்பு காட்டுகிறது. மாநிலத்தின் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுப்பது எப்படி? பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தை காப்பது எப்படி? என எந்த ஆலோசனையிலும் புதுச்சேரி அரசு ஈடுபடவில்லை.
பல மாநில அரசுகள் துணிச்சலுடன் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள், தொழில் முனைவோர் வாழ்வாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு மட்டும் வாய் மூடி மவுனியாக உள்ளது.
புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தற்காலிக சிறைச்சாலைகளாக தற்போது மாற்றப்பட்டு வருகின்றன. பல லட்சம் ரூபாயை வீணாக்கி கைதிகள் அறை, உணவுக்கூடம் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர். இந்த செயலை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
பள்ளி, கல்லூரிகளை சிறைச்சாலைகளாக மாற்றும் அரசு அங்கு படித்து வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பற்றி சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் குற்றவாளிகள்போல கேலி செய்யப்படும் சூழ்நிலை ஏற்படும். ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக கைதிகளை அடைத்து வைக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளது.
புதுவை காலாப்பட்டில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. புதுவையில் உள்ள அனைத்து சமுதாயக்கூடங்கள், அரசு, தனியார் திருமண மண்டபங்கள், அரசு விருந்தினர் விடுதிகள் பூட்டப்பட்டு கிடக்கிறது. இவற்றை பயன்படுத்துவதை விட்டுவிட்டு தற்போது நிலவும் பொருளாதர நெருக்கடியில் அரசு நிதியை திட்டமிட்டே வீணடிக்கும் நோக்கோடு தற்காலிக சிறைச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை புதுச்சேரி அரசு உடனடியாக கைவிட வேண்டும். மக்களின் வாழ்வதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழகம்போல துணிச்சலான முடிவெடுத்து நலத்திட்ட அறிவிப்புகளை புதுச்சேரி அரசு வெளியிட வேண்டும்.