Kathir News
Begin typing your search above and press return to search.

பூரி ஜகநாதர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் வருடாந்திர திருவிழா.!

பூரி ஜகநாதர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் வருடாந்திர திருவிழா.!

பூரி ஜகநாதர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் வருடாந்திர திருவிழா.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2020 3:50 AM GMT

கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பீடிக்கப்பட்டு இருக்கும் இந்த சூழலில் தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி மற்றும் சுய தனிமை ஆகிய சொற்றொடர்கள் நமது வாழ்வின் அங்கமாகி விட்டன. மருத்துவம் சார்ந்த பார்வையில் இவை மேற்கத்திய விஷயங்களாக பலருக்கும் தோன்றினாலும், நமது கலாச்சாரம், சடங்கு மற்றும் சம்பிரதாயங்களில் பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

அவற்றுள் சிறந்த உதாரணமாக ஒவ்வொரு வருடமும் பூரி ஸ்ரீ ஜகந்நாதர் கோவிலில் பின்பற்றப்படும் 'அனஸரா' என்ற வழக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். அனஸரா என்பது ஜகந்நாதரும் அவரது உடன்பிறப்புகளான பலபத்ரரும், சுபத்ராவும் தேவஸ்னான பூர்ணிமா திருவிழாவிற்கு பின் காய்ச்சலால் அவதிப்படுவதால்‌ கர்ப்பக் கிரகத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் சம்பிரதாயம்.

தேவஸ்னான பூர்ணிமா

தேவஸ்னான பூர்ணிமா அல்லது ஸ்னான யாத்ரா என்பது‌ ஸ்ரீ ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ராவுக்கான நீராட்டு‌ விழா. பூரி கோவிலின் பழம்பெரும் வழக்கமாகக் கருதப்படும் இந்த விழா ஜ்யேஷ்ட(ஆனி) மாத பௌர்ணமி அன்று நடத்தப்படுகிறது. இந்த வருடம் ஜூன் 5ம் தேதி இந்த விழா கொண்டாடப்பட்டது. ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரர் சிலைகள் 'பஹண்டி' என்று அழைக்கப்படும் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டு 'ஸ்னான பேடி' எனும் நீராட்டு பீடத்தில் வைக்கப்படுகின்றன.

நீராட்டு விழா தொடங்குவதற்கு சற்று முன் பூஜாரிகள் சில சடங்குகளைச்‌ செய்வார்கள். கோவிலினுள் இருக்கும் பொற்கிணறு அல்லது 'சுனா குவா'வில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீருடன் மூலிகை மற்றும் நறுமணப் பொருட்கள் கலந்து 108 முறை ஸ்னானம் செய்விக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது பூஜாரிகள் புனித நீர் மாசடைவதைத் தடுக்க துணியால் வாயை மூடிக்கொள்வது குறிப்பிடத்தக்கது. பூஜாரிகள் புனித நீரை மஞ்சள், உடைக்கப்படாத அரிசி, சந்தனம், பூக்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு தூய்மைப்படுத்துவர். இந்த நீரைக் கொண்டு ஸ்னானம் செய்த பின்னர் 'சத பேஷா' என்ற உடையை அணிவிக்கின்றனர்.

இரவில் ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ரா ஆகிய மூவரும் 'அனஸர கரா' என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு 14 நாட்களுக்கு பக்தர்களின் பார்வையில் படாமல் தனிமைப்படுத்தப்படுகின்றனர். நீண்ட ஸ்னானத்திற்கு பிறகு தெய்வங்களுக்கு காய்ச்சல் வருவதாக நம்பப்படுகிறது.

அனஸரா அல்லது அனபஸரா - இரண்டு வார தனிமைக்காலம்

இந்த 14 நாள் அனஸரா அல்லது அனபஸரா காலத்தில் பக்தர்கள் தெய்வ மூர்த்தங்களைப் பார்க்க‌ அனுமதி இல்லை. ஜகந்நாதர், பலபத்ரர் மற்றும் சுபத்ராவின் சிலைகள் 'அனஸரா பிண்டி' எனப்படும் இடத்தில் வைக்கப்பட்டு இயற்கை மூலிகை மருந்துகள் மற்றும் இதற்கென்றே சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட எண்ணெய்கள் மூலம் மருத்துவம் பார்க்கப்படுகிறது. உடல்நிலை சரியில்லாத தெய்வங்களுக்கு பழங்களும்‌‌ நீரும் பாலாடைக்கட்டியும் 'தசமுலா' என்ற மூலிகை மருந்தும் கலந்த கலவை மட்டுமே உணவாக வழங்கப்படும். இந்நேரத்தில் தைதபதி சேவாயத் என்று அழைக்கப்படும் ஜகந்நாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் பூ‌ஜாரிகள் தெய்வங்களை குணப்படுத்த ரகசிய சடங்குகளைச் செய்கிறார்கள்.

அனஸராவின் போது கர்ப்பகிரகம் மூடப்பட்டு மூலவரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் 'பட்டி தியன்' எனப்படும் பட்டசித்ர ஓவியங்கள் வழிபடப்படுகின்றன. பட்டசித்ர ஓவியங்களில் ஸ்ரீ அனந்தநாராயணன் ஜெகன்நாதராகவும் ஸ்ரீ அனந்த பசுதேவர் பலபத்ரர் ஆகவும் புவனேஸ்வரி சுபத்திராவாகவும் வழிபடப்படுகின்றனர்.

கலிங்கா டிவியின் தலைமை பொறுப்பாசிரியர் சௌம்யஜித் பட்நாயக் பட்டி தியன் வழிபடப்படும் காணொளிக் காட்சியைப் பகிர்ந்துள்ளார்.

பதி மஹாபத்ரா மூன்று தெய்வங்களும் உடல் நலமடைய 'பான போகா'வை நைவேத்தியம் செய்வார். இயற்கை மருந்துகளும் பிற மூலிகைகளும் கூட தைதபதிகளால் தெய்வங்களுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன. எட்டாவது நாளான அஷ்டமி திதியில் மரத்தால் செய்யப்பட்ட மூர்த்தங்களின் மேல் சிறப்பாக தயாரிக்கப்பட்ட 'புலுரி தேலா' எனப்படும் எண்ணெயை பயன்படுத்தி தைலக்காப்பு இடப்படும்.

தசமி திதியன்று தெய்வங்கள் உடல் பலத்தையும் தெம்பையும் திரும்பப் பெறுவதாக ஐதீகம். மறுநாள் மர மூர்த்தங்கள் சேதமடையாமல் இருக்க புதிய வண்ணங்கள் பூசப்படுகின்றன.

12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'நப களேபரா' என்னும் மற்றொரு பெரிய திருவிழாவின் போதுதான் இந்த மர மூர்த்தங்கள் மாற்றப்படுகின்றன. எனவே, ஒரு வகையில் பார்த்தால் அனஸரா சம்பிரதாயம் மர மூர்த்தங்களை வருடாவருடம் பராமரிக்க‌ செய்யப்படும் சடங்கு என்றும் கூறலாம். இதற்கு முழுக்க முழுக்க இயற்கையான எண்ணெய்கள் மற்றும் பதன பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பழமையான மரபுகளுள் அடக்கம்.

அமாவாசை அன்று அதாவது இந்த விழாவின் பதினைந்தாவது நாள், மூர்த்தங்களுக்கு 'நபஜௌபான பேஷா' அணிவிக்கப்படுகிறது. பக்தர்கள் மூன்று தெய்வங்களையும் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். எல்லா நோய்களிலிருந்தும் குணமாகி அவர்களின் வழக்கமான ஆரோக்கியம் மற்றும் அழகோடு திகழ்வதாக நம்பப்படும் தெய்வங்களுக்கு இத்தோடு வருடாந்திர தனிமைக் காலம் முடிவடைகிறது. இதன் பின்னர் மூன்று மூர்த்தங்களும் ரத யாத்திரைக்காக தயார் செய்யப்படுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு பின் ஆஷாத சுக்ல பட்சத்தில், துவிதியை திதியில் ரதயாத்திரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜெகந்நாதர், பலபத்ரர், சுபத்ரா மற்றும் சுதர்சனர் ஆகிய அனைவரின் மூர்த்தங்களும் பெரிய ரதங்களில் பக்தர்களின் தரிசனத்துக்காக எடுத்து வரப்பட்டு குண்டிச்சா கோவிலுக்கு தேரிழுக்கும் பக்தர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.


நன்றி: Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News