Kathir News
Begin typing your search above and press return to search.

ரயில்வே துறை மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு - கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் யோஜனாவின் கீழ் பணிகள் தொடக்கம்!

ரயில்வே துறை மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு - கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் யோஜனாவின் கீழ் பணிகள் தொடக்கம்!

ரயில்வே துறை மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு - கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் யோஜனாவின் கீழ் பணிகள் தொடக்கம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Jun 2020 6:47 AM GMT

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அறிமுகப்படுத்தப்பட்ட கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 லட்சம் மனித உழைப்பு நாட்கள் நடைபெறும் உட்கட்டமைப்பு பணிகளை இந்திய ரயில்வே துவக்கியுள்ளது.

அடுத்த 125 நாட்களுக்கு ஒடிஷா, உத்தரப் பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலுள்ள 116 மாவட்டங்களில் 1800 கோடி மதிப்புள்ள உட்கட்டமைப்பு பணிகளை இந்திய ரயில்வே நிறைவேற்ற உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்ய பிரதம மந்திரி கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் முடுக்கி விடப்படுகின்றன.

இந்த 116 மாவட்டங்களில் 160 உட்கட்டமைப்பு பணிகளுக்கான தேவையை கண்டறிந்துள்ள ரயில்வே துறை மாவட்ட மற்றும் மாநில அளவில் அதிகாரிகளை நியமித்து ஊரடங்கால் வேலை இழந்து பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி இருக்கும் உள்ளூர்வாசிகளுக்கு பணி வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த ரயில்வே மண்டலங்கள் மற்றும் பொதுத்துறை அலகுகளின் கூட்டத்தில் ரயில்வே போர்டு சேர்மன் வி கே யாதவ் கரீப் கல்யாணம் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் நிலையை ஆராய்ந்ததோடு பல்வேறு வகையான பணிகளிலும் வேலை வழங்குவதை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்த 116 மாவட்டங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமிருப்பதால் ரயில்வே திட்டங்கள் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்வே பணியில் ஈடுபடுவதையும் அவர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு விகே யாதவ் ரயில்வே மண்டல அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அளிக்கப்படக்கூடிய வேலைவாய்ப்புகளையும் இதன்மூலம் செய்து முடிக்கப்படக்கூடிய பணிகளையும் ரயில்வே தெரிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ரயில் நிலையங்கள் மற்றும் லெவல் கிராசிங்குகளுக்குச் செல்லும் சாலைகளை பராமரித்தல், புதிய சாலைகள் அமைத்தல், ரயில் தண்டவாளப் பாதையை ஒட்டி இருக்கும் நீர்வழிப்பாதைகள், பள்ளங்கள், நீர் வெளியேறும் பாதைகள் ஆகியவற்றை அமைத்தல், சீர்படுத்துதல், பராமரித்தல், ரயில் தண்டவாளங்களை அமைத்தல், அகலப்படுத்துதல், சரி செய்தல், பராமரித்தல் மற்றும் ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களில் மரங்கள் நடுதல் ஆகிய பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் மாதம்வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஒவ்வொரு நாளும் கவனித்து அது குறித்த அறிக்கையை ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென்று மண்டல ரயில்வே அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தோற்று ஏற்படுத்தியுள்ள அசாதாரண சூழ்நிலையால் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்த கிராமங்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து உதவுவதற்காக பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் 50,000 கோடி மதிப்புள்ள உட்கட்டமைப்பு வசதிகள் கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, சுரங்கம், குடிநீர் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எல்லை சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும் விவசாயத்துறை ஆகிய 12 அமைச்சகங்கள்/ துறைகளை ஒன்றிணைத்து 25 வகையான உட்கட்டமைப்பு பணிகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story