மார்ச் 21 - ஏப்ரல் 14 வரையிலான அனைத்துப் பயணச் சீட்டுகளுக்குமான முழுப்பணத்தையும் இந்திய ரயில்வே திருப்பித் தர முடிவு!
மார்ச் 21 - ஏப்ரல் 14 வரையிலான அனைத்துப் பயணச் சீட்டுகளுக்குமான முழுப்பணத்தையும் இந்திய ரயில்வே திருப்பித் தர முடிவு!

2020 ஏப்ரல் 14 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் அந்நாள் வரை பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த பயணச்சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக, 2020 மார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரையிலான காலப்பகுதியில் பயணம் செய்வதற்கான அனைத்து பயணச் சீட்டுகளுக்குமான முழுத் தொகையையும் திரும்ப வழங்குவதென இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பயணக் கட்டணத்தை திரும்ப அளிப்பதற்கான விதிமுறைகளில் விலக்கு அளித்து 2020 மார்ச் 21 அன்று வழங்கப்பட்ட விதிமுறைகளோடு கூடவே இந்த வழிமுறைகளும் அவற்றில் அடங்கும்.
1. பயணச் சீட்டு மையத்தில் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளைப் பொறுத்தவரை:
2020 மார்ச் 27க்கு முன்பாக ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகள்: பயணிகள் மீதமுள்ள பணத்தை திரும்பப் பெற இதற்கென உள்ள படிவத்தை பயண விவரங்களுடன் நிரப்பி தலைமை வணிக மேலாளர் அல்லது எந்தவொரு ரயில்வே கோட்டத்தின் தலைமை கோரல் அதிகாரியிடம் 2020 ஜூன் 21க்கு முன்பாக அளிக்க வேண்டும். இதுபோன்ற பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படும்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகை போக மீதமுள்ள தொகையை பயணிகள் திரும்பப் பெறும் வகையில் ரயில்வே ஒரு ஏற்பாட்டை செய்து தரும்.
2020 மார்ச் 27க்குப் பிறகு ரத்து செய்யப்பட்ட பயணச் சீட்டுகள்: இதுபோன்று ரத்து செய்யப்பட்ட அனைத்து பயணச் சீட்டுகளுக்கும் முழுத் தொகை திரும்பத் தரப்படும்.
2. இணையவழி பயணச் சீட்டுகள்:
2020 மார்ச் 27க்கு முன்பு ரத்து செய்யப்பட்ட பயணச் சீட்டுகள்: மீதமுள்ள தொகை எந்த கணக்கின் மூலம் பயணரால் பயணச்சீட்டு பெறப்பட்டதோ அந்தக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மீதமுள்ள தொகையை வரவு வைப்பதற்கான ஏற்பாட்டை ஐஆர்சிடிசி நிறுவனம் செய்யும்.
2020 மார்ச் 27க்குப் பிறகு ரத்து செய்யப்பட்ட பயணச் சீட்டுகள்: இதுபோன்று ரத்து செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் முழுத்தொகையை திரும்பத் தருவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.