50 பேர் சேர்ந்து கிடா, கோழிக்கறி விருந்து, பேஸ்புக் லைவால் போலீசில் சிக்கிய கும்பகோணம் புள்ளிங்கோ.!
50 பேர் சேர்ந்து கிடா, கோழிக்கறி விருந்து, பேஸ்புக் லைவால் போலீசில் சிக்கிய கும்பகோணம் புள்ளிங்கோ.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கும்பகோணம் அருகே உள்ள தியாகசமுத்திரம் என்ற கிராமத்தில் 50 இளைஞர்கள், சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து கிடா விருந்து வைத்த சம்பவம் போலீசார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள தியாகசமுத்திரம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் ஒரு சில பெரியவர்களும் ஒன்றாக சேர்ந்து கிடா வெட்டி, கோழி வறுவல் செய்து திருவிழா போன்று ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
50 பேரும் ஒரே இடத்தில் அமர்ந்து தலைவாழை இலை நீளமாக போட்டு ஒன்றோடு ஒன்று சேர்த்து வைத்து சாப்பாடு பரிமாறியிருக்கின்றனர்.
ஒரு இளைஞர் மட்டும் குழம்பை ஊற்றிக் கொண்டே வந்துள்ளார். இதில் 50 பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தொடங்கியுள்ளனர்.
அந்த சமயத்தில் ஒரு இளைஞர் மட்டும் எங்க ஊர் கொரோனா திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது என்று பேஸ்புக்கில் வைல் செய்துள்ளார்.
இந்த வீடியோ தஞ்சாவூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து கபிஸ்தலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகுரு என்ற இளைஞரை கைது செய்தனர்.
மேலும், கறி விருந்தில் பங்கேற்ற 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகுருவிடம் போலீசார் விசாரித்ததில் சும்மா ஒரு ஜாலிக்காக செய்து விட்டோம் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை பார்த்து உலகமே மிரண்டு போயுள்ளது. பல்வேறு நாட்டு அரசுகள் நோயை கட்டுப்படுத்துவதற்கு பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதிலும் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிக உள்ள நாட்டில் நோய் தொற்று ஏற்பட்டால் பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமிழகத்தில் ஒரு சில இளைஞர்கள் நோயின் ஆபத்தை உணராமல் இது போன்று கறி விருந்து வைத்து கொண்டாடுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இனிமேல் ஆவது அரசு கூறிய அறிவுரைகளை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடை பிடித்து கொரோனா இல்லா தேசத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்வது சிறந்தது.