புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ7.50 கோடி ஒதுக்கீடு!
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ7.50 கோடி ஒதுக்கீடு!

புதுச்சேரி மாநில அரசு கொரோனா வைரஸ் வராமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை வளாகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் நடைபெற்ற இக்காலத்தில் சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 400 தனிமைப்படுத்தப்பட்ட படுகைகள் தயாராக உள்ளது. எதிர்காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டால், அதற்காக மருத்துவமனைகளை வலுப்படுத்துவதற்கும், தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும் ரூ.130 கோடி தேவைப்படும். முதற்கட்டமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாமுக்கு 120 வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது. இதற்காக சுகாதாரத்துறை மூலம் ரூ.6 கோடியும், வருவாய்த்துறை மூலம் ரூ.1.50 கோடியும் என மொத்தம் ரூ.7.50 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் என்னென்ன செய்ய முடியும் அனைத்தையும் செய்வேன். அதேபோல் அவசர தேவைக்காக வருவாய்த்துறை நிதியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதுதொடர்பான கோப்பும் கவர்னருக்கு அனுப்பியுள்ளோம்.
புதுச்சேரியில் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5ம் வகுப்பு வரையும், மற்ற மாநிலங்களில் தேர்வு உள்ள வகுப்புகளை தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் 6, 7, 8, 9ம் வகுப்புகளுக்கும் விடுமுறை விடுவது நல்லது. மற்ற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து, ரயில்களில் வரும் பயணிகள், ஓட்டல்களில் தங்கியுள்ளவர்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை. மற்ற மாநிலங்களில் 70 சதவீதம் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. எனவே, புதுச்சேரியிலும் சுற்றுலா பயணிகளின் வருகைகயை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ கல்லூரிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 1000 முதல் 1,200 பேர் புதுவையை சேர்ந்த மாணவர்கள். மற்றவர்கள் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள். மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் 65 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். என்னை பொறுத்தவரை இக்கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிப்பது நல்லது. இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வரும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக ஒரு ஆம்புலன்சு கொடுக்க அறிவுறுத்தியுள்ளேன். அங்கு தனியாக 10 தனிமைப்படுத்த படுகைகள் ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டுள்ளோம். கொரோனா வைரஸ் தொடர்பாக நாளை மத்திய அரசுடன் கூட்டம் நடக்கிறது. தினமும் முதல்வர் உத்தரவுடிப்படி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. புதுச்சேரியிலும் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றார்.