Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தங்கை மகன் மீது மேலும் ஒரு வழக்கு - ₹ 787 கோடி வங்கிக் கடன் மோசடி!

காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தங்கை மகன் மீது மேலும் ஒரு வழக்கு - ₹ 787 கோடி வங்கிக் கடன் மோசடி!

காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தங்கை மகன் மீது மேலும் ஒரு வழக்கு - ₹ 787 கோடி வங்கிக் கடன் மோசடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Jun 2020 11:40 AM GMT

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு மற்றும் வங்கிக் கடன் வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் மத்திய பிரதேச முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தின் தங்கை மகனான ரதுல் பூரி‌ மீது தற்போது புதிதாக ஒரு வங்கிக் கடன் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூரி குடும்பத்திற்கு சொந்தமான இடங்களிலும் மோசர் பேயர் சோலார் லிமிடெட் என்ற நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று சோதனையிட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ரதுல் பூரியின் மோசர் பேயர் நிறுவனம் ₹ 786 கோடி கடன் மோசடி செய்து விட்டதாக அளித்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பேர ஊழல் வழக்கு மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பதிவு செய்த ₹ 354 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கு ஆகியவற்றில் கைது செய்யப்பட்ட ரதுல் பூரி தற்போது ஜாமீனில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்பிஐ வங்கி, எக்சிம் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளில் ₹ 787.25 கோடி அளவில் கடன் பெற்று அதை வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்துதல், போலி பரிவர்த்தனைகள் மற்றும் போலியாக மதிப்பு உயர்த்தப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் சட்டத்துக்கு புறம்பாக கையாண்டதாக சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி, நொய்டா, காசியாபாத், அன்னுபூர்(மத்திய பிரதேசம்) ஆகிய பகுதிகளில் உள்ள ரதுல் பூரியின் இடங்கள் மோசர் பேயர் நிறுவன கட்டிடம் மற்றும் அதன் இயக்குனர்களின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த சோதனைகளின் போது முக்கியமான ஆவணங்களும் டிஜிட்டல் சாட்சியங்களும் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ரதுல் பூரியின் தந்தை மற்றும் தாயார் ஆகியோரும் ‌மோசர் பேயர் நிறுவனத்தின் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர மோசர் பேயர் நிறுவனத்தின் இயக்குனர்களான தீபக் கந்தெல்வால், ராஜேஷ் கந்தெல்வால், பெர்னார்ட் ஜெர்மன் கல்லஸ், சுனிதா மௌத்கல் மற்றும் சஞ்சய் ஜெய்ன் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ரதுல் பூரி அவர் மீது போடப்பட்டிருக்கும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறி விட்டு மாயமாகி விட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் கோரினார்.

இந்த வழக்குகளில் ‌விசாரணை நடந்து கொண்டிருந்த போதே சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கடன் மோசடி வழக்கு குறித்த தகவல்களை அமலாக்கத் துறை சிபிஐக்கு அனுப்பி வைத்தது. இதன் அடிப்படையில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும் போதே பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை பூரியைக் கைது செய்தது. அவர் பின்னர் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில், '2007 முதல் 2013 வரையிலான கால கட்டத்தில் மோசர் பேயர் நிறுவனம் ஒரு மின் திடடத்துக்காகவும் மூலதனமாகவும் ₹ 950 கோடி வரை கடனாகப் பெற்றது. இந்தத் தொகையை திருப்பி செலுத்த கால தாமதமான போது வங்கிகள் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டை தொடங்கின. ஆனால் மோசர் பேயர் நிறுவனம் 2016ல் வங்கிகளின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளாததால் இந்த கடன்தொகை வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகள் இந்தக் கடன் தொகை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்று ஆராய்ந்த போது ரிசர்வ் வங்கி விதிகளுக்குப் புறம்பாக வேறு வங்கிகளில் கணக்குகள் தொடங்கி லாபத்தை அந்த கணக்குகளுக்கு திருப்பி விட்டது தெரிய வந்தது.

மேலும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஹெலியோஸ் போட்டோவோல்டெய்க் லிமிடெட் (HPVL) என்ற நிறுவனத்தில் ₹ 696 கோடி முதலீடு செய்ததும் தெரியவந்தது. இவ்வாறு முதலீடு செய்த சமயத்தில் அந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ₹ 455 கோடியாக மட்டுமே இருந்ததால் முதலீடு செய்த பணத்தை மீட்கவே வாய்ப்பு இருந்திருக்காது என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசர் பேயர் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளிலும் முறைகேடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. HPVL நிறுவனத்துடனான கொள்முதல் மற்றும் விற்பனைக் கணக்குகள் அனைத்தும் சரி என்று நிரூபிக்க தகுந்த ஆதாரங்களும் இல்லை. எனவே HPVL நிறுவனத்துடன் நடந்த பணப்பரிமாற்றங்கள் போலியானவை என்று தெரிய வந்தது. மேலும் MBSL நிறுவனம் மோசர் பேயர் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு குத்தகை வாடகை ஒப்பந்தத்துக்கு ₹ 135 கோடி வட்டியில்லா வைப்பு நிதியாக அளித்தது. இது வருடாந்திர வாடகையை விடவும் 58.82 மடங்கு அதிகம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

மேலும் வங்கிக் கடனுக்கு செக்யூரிட்டியாக உறுதி தரப்பட்ட மோசர் பேயர் நிறுவனத்தின் மூலப்பொருட்கள், முழுதாக/ பாதி தயாரிப்பு முடிந்த பொருட்களை நிறுவன இயக்குநர்கள் மோசடி செய்து வேறு இடத்தில் பதுக்கி கடன் தொகையை வங்கிகள் மீட்க முடியாமல் செய்து விட்டதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி புகாரளித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News