Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : ஆளுநர் உரையின்றி ரூபாய் 9000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்த முதலமைச்சர் நாராயணசாமி - வெடித்த சர்ச்சை.!

புதுச்சேரி : ஆளுநர் உரையின்றி ரூபாய் 9000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்த முதலமைச்சர் நாராயணசாமி - வெடித்த சர்ச்சை.!

புதுச்சேரி : ஆளுநர் உரையின்றி  ரூபாய் 9000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை  பேரவையில் தாக்கல் செய்த முதலமைச்சர் நாராயணசாமி - வெடித்த சர்ச்சை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 July 2020 4:15 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ரூபாய் 9,000 கோடிக்கு நிதிநிலை அறிக்கை மதிப்பீடு செய்து, மத்திய உள்துறை மற்றும் நிதித்துறையின் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மானிய கோரிக்கைகள் விவரங்கள் துறை ரீதியாக முழுமையாகச் சமர்ப்பிக்கவில்லை மற்றும் பேரவைக்கான ஆளுநர் உரையைக் கால தாமதமாக அனுப்பியதாகக் கூறி கிரண்பேடி பட்ஜெட் உரைக்கு வர மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே கூட்டத்தொடர் தொடங்குவதால், ஜனநாயக முறைப்படி ஆளுநர் இதில் பங்கேற்கலாம் என்று கூறி துணை நிலை ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பினார்.


இதற்கு பதிலளித்த ஆளுநர் கிரண்பேடி, "பட்ஜெட்டிற்கு முழு வடிவம் பெறாமல் சட்டப்பேரவை ஏன் கூட்ட வேண்டும் என்று கேள்வி எழுகிறது, யூனியன் பிரதேச சட்டப்படி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சரியான கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு வேறு ஒரு தேதியில் சட்டப்பேரவை கூட்டினால் ஆளுநர் உரை அளிப்பதாகவும், என்னிடம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்காத சூழலில் தெரியாத அறிக்கைக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கமுடியும்," என்று கேள்வி எழுப்பினார் கிரண்பேடி. ‌

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குக் கூடியது. இதையடுத்து பேரவை தொடங்கி, 15 நிமிடங்கள் வரை காத்திருந்த பிறகும் துணைநிலை ஆளுநர் வராத காரணத்தினால், சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவை நிகழ்வைத் துவங்கினார். அப்போது துணை ஆளுநர் உரையாற்ற வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, ஆளுநர்‌ உரை நிகழ்வைச் ரத்து செய்ய வாக்கெடுப்பு நடத்தி சபாநாயகர் ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் அடுத்த நிகழ்வான 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் கூறி பேரவையைச் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இதனையடுத்து சரியாக 12 மணியளவில் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 2020-21 ஆண்டிற்கான ரூபாய் 9000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார்.


அதில் முக்கிய அம்சங்களான, "வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்குக் குடிநீர் வரி ரத்து செய்யப்பட்டு இலவச குடிநீர் வழங்கும் திட்டம்.

மாதம் 100 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் உபயோகிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

வரும் கல்வி ஆண்டில் புதிய வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் புதிதாகத் தொடங்கப்படும்.

நாடுமுழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டையில் வழங்கும் திட்டத்திற்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் குடும்ப அட்டை பெறப் பிரத்தியேக இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி காலைச் சிற்றுண்டி மற்றும் ஊட்டச்சத்து திட்டமாக இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும், இத்திட்டம் குழந்தைகள் தினமான நவம்பர் 14 அமல்படுத்தப்படும்.

மாணவர்களின் வீடுகளுக்கே பாடத்திட்டங்கள் போதிப்பதைக் கொண்டு செல்ல கல்வி தொலைக்காட்சி மற்றும் சமூக வானொலி தொடங்கப்படும்.

கிராமப்புற பள்ளிகளில் மின்னணு வகுப்பறைகள் இந்த ஆண்டு அமைக்க முடிவு.

மீனவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி உதவி ரூபாய் 2000ல் இருந்து ரூபாய் 10000ஆக உயர்த்தப்படுகிறது, முதியோர் ஓய்வூதியம் பெற்ற மீனவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

முகக்கவசம் மற்றும் தேவையான உபகரணங்களை வாங்க சுகாதாரத்துறைக்கு ரூபாய் 9.50 கோடி‌ ஒதுக்கப்படும்.

வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் மரணமடைந்தால் ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் , ஊனம் ஏற்பட்டால் ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை ரத்து செய்து இலவசக் கல்வி வழங்கப்படும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்திராகாந்தி மருத்துவக்காப்பிட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு, முழு மருத்துவக்காப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட பல திட்டங்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி முதல்வர் முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவை நிகழ்வை காலை 9.30 மணி வரை ஒத்திவைத்தார்.

முன்னதாக, முதல்வர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து கொண்டிருந்தபோது, ஆளுநர் அனுமதியின்றி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

குறிப்பாக, புதுச்சேரியில் ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நீண்ட நாட்கள் நடக்க வேண்டிய இந்த முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடரானது, கொரோனா நோய்த் தொற்று காரணமாக இரண்டு நாட்களுக்குள் முடித்துக்கொள்ளப் புதுச்சேரி அரசு திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத் தொடரில், கொரோனா‌ நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாகப் பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டது.

Next Story