ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகு என்ன நிலை என மத்திய அரசு தான் முடிவு செய்யும் - முதல்வர் பழனிச்சாமி!
ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகு என்ன நிலை என மத்திய அரசு தான் முடிவு செய்யும் - முதல்வர் பழனிச்சாமி!

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், "இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகு என்ன நிலை என்பது மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
விவசாயிகள் அறுவடை செய்யவும், வேளாண் பணியை மேற்கொள்ளவும் எந்தவித சிரமமும் இல்லாமல் மேற்கொள்ளலாம் என அரசாங்கம் தெரிவித்து விட்டதாகவும், அதேபோல் விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை எனக் கூறினார்.
மேலும் ஒட்டுமொத்த மக்கள் முயற்சித்தால் மட்டுமே இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும், தனி ஒருவனால் இதைக் கட்டுப்படுத்த முடியாது, அரசாங்கம் சட்டம் போடலாம் ஆனால் அதை மதித்து மக்கள் நடக்க வேண்டும், நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கம் சட்டம் போடுவதாகவும் ஆனால் நோயின் தாக்கத்தை தெரியாமல் பரவலாக மக்கள் வெளியே செல்வதாக வேதனை தெரிவித்த முதலமைச்சர், நோயின் தாக்கத்தை உணர்ந்து மக்கள் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.