Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்றாவது மாதத்தில் "வந்தே பாரத்" திட்டம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு - மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!

மூன்றாவது மாதத்தில் "வந்தே பாரத்" திட்டம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு - மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!

மூன்றாவது மாதத்தில் வந்தே பாரத் திட்டம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு - மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 2:11 PM GMT

சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் தங்க நேரிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான "வந்தே பாரத்" இயக்கத்தின் பணி மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது.

"கோவிட்-19" தொற்று காரணமாக பயணிகள் விமானப்போக்குவரத்து சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்க நேர்ந்துவிட்டது. அவர்கள் "வந்தே பாரத் இயக்கம்" (Mission Vande Bharat) மூலம் கடந்த மே 7ஆம் தேதி முதல் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

"இதுவரை மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தே பாரத் விமானங்கள், சிறப்பு விமானங்கள் (Charter Flights), கடற்படைக் கப்பல்கள் (Naval Ships), மூலமாகவும், எல்லை நாடுகளிலிருந்து தரை வழியாகவும் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

"தற்போது நான்காவது கட்ட வந்தே பாரத் இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 137 நாடுகளிலிருந்து இந்தியர்களைக் கொண்டு வருவதற்காக 860 ஏர் இந்தியா விமானங்கள், 1256 சிறப்பு விமானங்கள், 8 கடற்படை கப்பல்கள் இயக்கப்படுகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கமாக இயங்கிக் கொண்டிருந்த பயணிகள் விமானச் சேவை பொதுமுடக்கம் காரணமாக மார்ச் 23ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதல் கட்ட வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் மே 7ஆம் தேதி தொடங்கி மே 17ஆம் தேதி வரை 84 விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பின்ஸ், சவுதி அரேபியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு இயக்கப்பட்டன.

மே 16ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட வந்தே பாரத் இயக்கப் பணி ஜூன் 13ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. ஜூன் 10 முதல் ஜூன் 22 வரையிலான மூன்றாம் கட்டப் பணியில் 130 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய நான்காம் கட்டப்பணி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரையில் நீடிக்கும் எனத் தெரிகிறது. அதில் 720 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அமெரிக்கா, வியட்நாம், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, ரஷ்யா, கத்தார், ஓமன், பிலிப்பின்ஸ், மலேசியா, மியான்மர், இலங்கை, கனடா, குவைத், கிரிகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

நான்காம் கட்டத்தில் சென்னை, தில்லி, மும்பை, ஹைதராபாத் நகரங்களிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் 170 விமானங்களை இயக்குகிறது.

அதைப் போலவே, பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு 255 விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது. இதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஜூலை 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரையில் 36 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஜூலை 9, 12, 14 ஆகிய தேதிகளில் இயக்குகிறது. திரும்பி வரும் பாதையில் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வருவதற்கு ஜூலை 9, 12 ஆகிய தேதிகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படும்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானம் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு ஜூலை 11ஆம் தேதியும் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு ஜூலை 14ஆம் தேதியும் இயக்கப்படும்.

அத்துடன், திருச்சி – கோலாலம்பூர் நகரங்களுக்கு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 179 பயணிகள் வரவழைக்கப்பட்டனர். அதைப் போல் தோஹாவிலிருந்து 176 பயணிகள் இண்டிகோ (Indigo Flight) விமானம் மூலம் கொண்டு வரப்பட்டனர். குவைத்திலிருந்து 165 பேர் திருச்சிக்கு ஜஸீரா ஏர்வேஸ் (Jazeera Airways) விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.

ஏர் ஏசியா (Air Asia) விமானம் 14 நாடுகளிலிருந்து 169 பேரை திருச்சிக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டுவந்துள்ளது. இதற்கான ஏற்பாட்டை இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகமும் தமிழ்ச் சங்கமும் செய்துள்ளன.

வெளிநாடுகளில் தங்கிவிட்ட இந்தியர்கள் தாங்கள் இந்தியா திரும்ப வேண்டுமானால், அந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று மத்திய உள்துறை நடைமுறையைப் பிறப்பித்துள்ளது. அந்தப் பதிவின் அடிப்படையில் வெளியுறவு அமைச்சகம் பயணிகளின் அடிப்படையில் விமானத்தையோ கப்பலையோ ஏற்பாடு செய்யும்.

வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் 7 நாட்கள் கொரோனா பாதுகாப்பு மையத்திலும் பிறகு 7 நாட்கள் தங்கள் வீடுகளிலும் தனித்திருக்க வேண்டும். அவ்வாறு இருப்போரிடம் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள், வெப்பப் பரிசோதனைக்கு உட்பட்ட பின்னரே விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவர்.

ஒரு வேளை தொற்று இருப்பதாகத் தெரியவந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவர்.

பொதுமுடக்கத்தின் இரண்டாம் கட்டத் தளர்வு (Unlock 2 Period) எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலகட்டமாகும். "கோவிட்-19" தொற்று பரவாமல் இருப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் அரசின் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புவோர் தனக்கும் நாட்டுக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைக்கும் வகையில் தனிமைக் காலத்தில் இந்த நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றியே தீர வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News