ராஜ்யசபாவில் பெரும்பான்மையின் அருகாமைக்கு செல்லும் பா.ஜ.க பலம்: ஏப்ரலில் 100, நவம்பரில் 110 – ஐ எட்டுகிறது!
ராஜ்யசபாவில் பெரும்பான்மையின் அருகாமைக்கு செல்லும் பா.ஜ.க பலம்: ஏப்ரலில் 100, நவம்பரில் 110 – ஐ எட்டுகிறது!

நாடாளுமன்ற மாநிலங்களவையில்( ராஜ்யசபா ) தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 55 பேரின் இடங்களுக்கு வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட, வரும் 6 ஆம் தேதியில் இருந்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர். 13 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இந்த நிலையில், மக்களவையில் 303 உறுப்பினர்களைக் கொண்டு தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ள போதிலும், மாநிலங்களவையில் அக்கட்சிக்கு தேவையான 120 உறுப்பினர்களில் தற்போது 83 உறுப்பினர்களே உள்ளனர்.
பெரும்பான்மை பெற தேவையான 37 உறுப்பினர்களுக்காக தன் தோழமை கட்சிகளையே சார்ந்துள்ளது. இதனால் முக்கிய மசோத்தாக்களை கொண்டு வரும்போது தோழமை கட்சிகளை சமாளித்து செல்லும் நிலையில் பாஜக உள்ளது.
இந்த நிலையில், வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு 12 முதல் 13 இடங்கள் வரை கண்டிப்பாக கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. இதன் மூலம், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 96 வரை உயரும்.
அடுத்து, வரும் 2020 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அடுத்த சுற்று தேர்தலில், பாஜகவின் பலம் மேலும் அதிகரிக்கும். ஏனெனில் உத்தர பிரதேசத்தில் அக்கட்சிக்கு 322 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அங்கு ஆதரவு கட்சிகளுக்கு 9 இடம் உள்ள நிலையில் பாஜக, 9 முதல் 10 ராஜ்யசபா எம்பி இடங்களை குறைந்தது பெறும் நிலையில் உள்ளது.
இதன்மூலம் கிட்டத்தட்ட பெரும்பான்மையை நோக்கி நெருங்கினாலும், 10 எம்பிக்கள் அளவுக்கு ராஜ்யசபாவில் தோழமை கட்சிகளை நம்பும் நிலை இருக்கும். என்றாலும் முன்பை விட சிரமங்கள் குறையும்.
இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கருத்து கூறுகையில் " 2022 ஆம் ஆண்டில்தான் ராஜ்யசபாவில் பாஜக சொந்த பெரும்பான்மையை பெறும் நிலை கூடும், ஏனெனில் அடுத்து நிகழ உள்ள மேற்கு வங்கம், அஸ்ஸாம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களில் அக்கட்சிக்கு எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும் நிலையில் எளிதாக பெரும்பான்மையை கைப்பற்றும்.
இல்லாவிடினும் நினைத்ததை முடிக்கும் சாதுர்யத்துடன் அது முன்பு எப்படி மிகவும் பரபரப்பான மசோதாக்களை கையாண்டதோ அதேபோல கையாளும், 10 எம்பிக்கள் குறைவு என்பது ஒன்றும் அந்த கட்சிக்கு ஒரு பின்னடைவாக இருக்காது என கூறுகின்றனர்.