Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினியால் முதல்வராக முடியுமா? சொல்லப்படாத உண்மை!

ரஜினியால் முதல்வராக முடியுமா? சொல்லப்படாத உண்மை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 March 2020 10:18 AM IST

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 2020 மார்ச் 5-ம் தேதி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் ரஜினிகாந்த். கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றமாக இருந்தது. அது என்னவென்று பின்னர் கூறுகிறேன். மற்ற வகையில், இது ஒரு இனிமையான சந்திப்பு" என்று "பொடி" வைத்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, ரஜினிக்கு ஏமாற்றமாக இருக்கும் விஷயம் எது என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில் காட்சி ஊடகங்கள் சுறுசுறுப்படைந்தன. விவாதங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யூகங்களை முன்வைத்தனர். இதனிடையே 6-ம் தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஒரு விஷயத்தை வெளியிட்டது. அந்த தகவல் இதுதான். "மன்ற நிர்வாகிகளிடம் பேசிய ரஜினிகாந்த், கட்சித் தலைவராக தாம் இருக்கப் போவதாகவும் முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவர் இருப்பார் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்ற நிர்வாகிகள், ரஜினியின் கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மன்ற நிர்வாகிகளை அமைதிப்படுத்தினார் ரஜினி". இவ்வாறு அந்த நாளேடு குறிப்பிட்டது. காரணம் என்ன? "முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவர் இருப்பார்" என்று கூற வேண்டிய அவசியம் ரஜினிக்கு ஏற்பட்டது ஏன்? மன்றத்தின் மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்ததுபோல், "மன்ற நிர்வாகிகளின் மன நிலையை அறிந்து கொள்வதற்காக" இருக்கலாம்.

ஆனாலும் இது போதுமான காரணமாகப் படவில்லை. எந்தக் கழகத்தோடும் கூட்டணி இல்லாமல் ரஜினி போட்டியிடுவார் எனில், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்திக் கொள்வதில் அவருக்கு எந்தத் தடையும் இல்லை. அப்படியொரு சூழ்நிலையில், அவரைத் தவிர வேறு எவரையும் முதல்வர் வேட்பாளராக ஏற்க அவரது ரசிகர்களோ – அவரை ஆதரிக்கும் பொதுமக்களோ விரும்ப மாட்டார்கள். 2017 டிச. 31-ம் தேதி தனிக் கட்சி தொடங்கப் போவதாக அவர் அறிவித்தபோது, 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத்தான் அறிவித்தார்.

ஆனால், இன்று களம் வெகுவாக மாறியிருக்கிறது. அவர் கட்சி அறிவிப்பு வெளியிட்டபோது இருந்த அதிமுக இன்றில்லை. அது படிப்படியாக பலம் பெற்று வருகிறது. எடப்பாடியார் கொஞ்சம் கொஞ்சமாக ஒற்றைத் தலைமையாக உருவெடுத்து வருகிறார். திமுகவுக்கும் அதிமுகவுக்கான வெற்றி இடைவெளி குறைந்து வருகிறது. மற்றொருபுறம், கலைஞர் மறைந்த நிலையிலும் 38 மக்களவைத் தொகுதிகளில் வென்று ஸ்டாலினும் தன்னை நிரூபித்துள்ளார்.

எனவே, ஜெயலலிதா, கருணாநிதி மறைவைத் தொடர்ந்து தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கருதப்பட்ட நிலை இன்று மறைந்துவிட்டது. இந்நிலையில் "தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்" என்று கூறாமல், கூட்டணி பற்றியும் யோசிக்க ஆரம்பித்துள்ளார் ரஜினி. இல்லையெனில், "முதல்வர் வேட்பாளர் நானில்லை" என்ற தொனியில் பேச வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்காது. களயதார்த்தத்தை புரிந்துகொள்வதில் ரஜினிக்கு இருக்கும் முதிர்ச்சிக்கு இது சான்று.

இதை வைத்துப் பார்க்கும்போது, அதிமுக கூட்டணியை நோக்கி ரஜினி நகர்கிறாரோ என்று தோன்றுகிறது. அங்கு முதல்வர் வேட்பாளர்களாக முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரும உள்ளனர். பெரிய கட்சியான அதிமுக, முதல்வர் வேட்பாளராக தங்கள் கட்சியை சேர்ந்தவர்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்வர் நாற்காலியை ரஜினிதான் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அதிமுக கூட்டணி நோக்கி நகர்வதால்தான், கமலுடனான கூட்டணி பற்றிய செய்தியாளர் கேள்விக்கு, "காலம் பதில் சொல்லும்" என்றார்.

இங்கும் ஒரு சிக்கல் உள்ளது. ரஜினியைத் தவிர வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், ரஜினி ரசிகர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவது சந்தேகமே. ரசிகர்களின் உணர்வுகளையும் மதித்தாக வேண்டும் – யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு நடந்தாக வேண்டும் – இதுதான் ரஜினிக்கு உள்ள மாபெரும் சவால். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தீர்வுக்கு ஒரு வழியிருக்கிறது. மாயாவதி – கல்யாண் சிங் உடன்பாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு முதல்வர் பதவியைரஜினியும் அதிமுகவும் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஒருவேளை ரஜினி தனித்துப் போட்டியிட்டாலும், குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பிரித்து கர்நாடகத்தில் குமாரசாமி போல் ஒரு "கிங் மேக்கர்" ஆக உருவாகவும் வாய்ப்புண்டு. அத்தகைய ஒரு சூழ்நிலையில் முதல்வர் பதவியை அவர் கோரிப் பெற முடியும். தமிழகத்தின் வாக்களிக்கும் முறையில் (voting pattern) மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. மக்களவைத் தேர்தலில் பெருமளவு வாக்குகளை எதிர்க்கட்சிகள் பிரித்தாலும், அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள்பிரிந்தாலும், பெரிய பாதிப்பை உருவாக்கும்.

(எ..டு) 2014 மக்களவைத் தேர்தல் – இந்த தேர்தலில் பாஜக கூட்டணி 19 சதவீத வாக்குகளைப் பெற்றது. என்றாலும், ஜெயலலிதா 37 தொகுதிகளில் வாகை சூடினார். ஆனால், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 6 கட்சிக் கூட்டணியான மக்கள் நலக் கூட்டணி 6 சதவீத வாக்குகளைத்தான் பிரித்தது. அதன் பலன், ஆட்சிக்கு வர முடியாமலே போனது திமுக. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை ரஜினியால் பிரிக்க முடியுமெனில், இரு கழகங்களுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகம் உண்டு. அத்தகைய சூழலில் ரஜினி தீர்மானிக்கும் சக்தியாக திகழக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் முதல்வராகவும் வாய்ப்பு ஏற்படலாம். கட்சி எப்போது? மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், "தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்கட்சியை தொடங்குவேன்" என்று சொன்னதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு நிர்வாகி குறிப்பிடுகிறார். அதாவது இந்த ஆண்டுசெப்டம்பர் அல்லது அக்டோபரில் கட்சி தொடங்குவார் என்று தெரிகிறது.

குறுகிய காலத்தில் கட்சியை ஆரம்பித்த பெரிய அறுவடை செய்துவிட முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. இங்கு 2 முன்னுதாரணங்களை நினைவுகூரலாம். 1. என்.டி. ராமா ராவ், 2. அரவிந்த் கேஜரிவால். தெலுங்குதேசம் கட்சி நிறுவனரான நடிகர் என்டி ராமா ராவ், 1982 மார்ச் மாதம் கட்சியைத் தொடங்கி 1983 ஜனவரியில் ஆட்சியைப் பிடித்தார். 10 மாதங்களில் முதல்வர் ஆனார். அவர் முதல்வரானது ஒருங்கிணைந்த ஆந்திரத்துக்கு என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். அது தமிழகத்தைக் காட்டிலும் பரப்பில் பெரியது. அவ்வளவு பெரிய மாநிலத்தில் 10 மாதங்களில் ஆட்சியைப் பிடிக்க என்.டி. ராமா ராவால்முடிந்தது எனில், ரஜினிக்கும் சாத்தியமாகலாம். அரவிந்த் கேஜரிவால் 2012 நவம்பரில் ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்தார். 2013 டிசம்பரில் தில்லி முதல்வரானார். 13 மாதங்களில் அவர் ஓர் அரசியல் சக்தியாக தில்லியில் நிலைநிறுத்திக்கொண்டு விட்டார்.

நீண்டகாலமாக இருந்துவரும் கட்சிகள் மண்ணைக் கவ்வுவதையும் – புதிய கட்சிகள் உடனேயே ஆட்சியைப் பிடிப்பதையும் பார்த்திருக்கிறோம். எனவே, தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் கட்சி ஆரம்பிப்பது எவ்வித பின்னடைவையும் ரஜினிக்கு ஏற்படுத்தாது. 2018 ஆகஸ்ட் 28-ம் தேதி ரஜினி மக்கள் மன்றத்துக்கென தனி விதிகள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு கட்சிக்கான விதிகள் (by-laws) போலவே அவை இருந்தன. அந்த மன்றத்தை அப்படியே கலைத்துவிட்டு உடனே கட்சியாகப் பதிவு செய்துவிட முடியும் என்பதை சுட்டிக்காட்டுவதுபோல் விதிகள் அமைந்திருந்தன.

"மன்ற நிர்வாகிகளின் முன்னுரிமை வரிசை" என்கிற அதன் 18வது பகுதி, தலைவரில் தொடங்கி மன்ற உறுப்பினர் வரையிலான 23 படிநிலைகளைக் (hierarchy) கொண்டதாக இருந்தது. இது ஒரு கட்சியின் படிநிலையை போன்றே இருந்தது. 2018 அக்டோபர் 20-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90% முடிவடைந்துவிட்டன. சரியான நேரம், காலம் பார்த்து கட்சி அறிவிப்பை வெளியிடுவேன்" என்று கூறியிருந்தார். எனவே, கட்சியின் அடிப்படைக் கட்டுமானம் தயாராகவே உள்ளது.

கட்சிக்குப் பெயர்தான் வைக்கப்படவில்லையே தவிர, மற்ற அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. இந்தக் காரணங்களால், 6 மாதங்களுக்கு முன் கட்சி ஆரம்பிப்பது என்பது தவறான முடிவாக இருக்காது. மொத்தத்தில், ரஜினியால் முதல்வராக முடியுமா? என்ற கேள்விக்கு "ஏன் முடியாது?" என்பதே என் பதில்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News