Kathir News
Begin typing your search above and press return to search.

சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு: சங்க இலக்கியங்கள் கூறும் திடமான சான்றுகள்!

சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு: சங்க இலக்கியங்கள் கூறும் திடமான சான்றுகள்!

சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு: சங்க இலக்கியங்கள் கூறும் திடமான சான்றுகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2020 1:37 AM GMT

சித்திரை மதத்தின் முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் காலம் காலமாக கொண்டாடி வருகின்றனர்.

மேஷ ராசியின் ஊடாக சூரியன் நகர்ந்து வரும் மாதமான சித்திரை மாதமே வருடத்தின் முதல் மாதமாக பண்டைய தமிழர்கள் கருதினர் என்பதற்கு சங்க இலக்கியங்களிலேயே சான்று உள்ளது. சங்க இலக்கியங்களின் பதினென்மேல்கணக்கு நூல்களின் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநெல்வாடையின் வரிகள் 160–161:

திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக,

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,

இதற்கு நச்சினார்க்கினியரின் உரை

திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே…

அதாவது, மேஷ ராசி தொடங்கி மற்ற ராசிகளில் சென்று திரியும் சூரியன் என்று உரையெழுதுகிறார். ஆகவே மேஷ ராசியே முதல் ராசியாக பண்டைய தமிழர்களும் கருதினர் என்று நாம் அறியலாம். மேஷ ராசியில் சூரியன் திரியும் மாதம் சித்திரை, ஆகவே அதுவே அவர்களது முதல் மாதம்.


புறநாநூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கிய நூல்களிலும் இதை உறுதி செய்யும் சான்றுகள் உள்ளன.

ஒரு சிலர் பழங்கால கல்வெட்டு என்று ஒன்றைக் காட்டி அதில் தை மாதமே முதல் மாதமாக குறிப்பிட்டிருப்பதாகவும் ஆதலால் பண்டையத் தமிழர் தை மாதத்தையே முதல் மாதமாக கொண்டிருந்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.


சரி, அது எவ்வளவு பழமையானது என்பது பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தோமேயானால் அது 300 ஆண்டுகள் பழமையானது என்று ஒரு செய்திக் கட்டுரை சொல்கிறது. மேலும் அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களும் தற்காலத் தமிழ் எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களுமே ஆகும். தமிழி எழுத்துக்களோ, வட்டெழுத்துக்களோ கூட அல்ல. ஆகவே இது முதலில் பழங்கால கல்வெட்டே அல்ல. ஒரு ஒப்பீட்டிற்காகச் சொல்கிறேன், நான் மேலே அளித்துள்ள, மேஷ ராசியை முதல் ராசியாகக் குறிப்பிடும் நெடுநெல்வாடை பாடலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு, அதாவது அப்பாடல் 1800–1900 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கல்வெட்டோ 300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது.

சரி, இடைக்காலத்தில் வந்த அந்தக் கல்வெட்டில் தை மாதம் முதல் மாதமாக ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது?

முதலில் அந்தக் கல்வெட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றி எனக்கு தெளிவாக விளங்கவில்லை, அந்த செய்திக் கட்டுரை சொல்வதையே நாம் உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியே அதில் தை மாதம் முதல் மாதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். தைத்திங்கள் முதல் நாள் அறுவடைத்திருநாள் என்பது நாம் அறிந்ததே. அன்றிலிருந்து வியாபாரத்தை தொடங்குவதால் தை முதல் நாளை வர்த்தக வருடத்தின் தொடக்கமாக தமிழக விவசாயிகளும் வியாபாரிகளும் கொண்டிருக்கலாம். தற்போதும் கூட ஜனவரி 1-ஆம் தேதியை உலகம் முழுவதும் புத்தாண்டாகக் கொண்டாடிலும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியை வர்த்தக வருடத்தின் தொடக்கமாக கருதுகிறோம், அது போல் இதுவும் இருக்கலாம். ஏன், தற்போதும் கூட குஜராத்தைச் சேர்ந்த சில தொழில் சார்ந்த சமூகங்கள், மார்வாரிகள் போன்றோர் தீபாவளியை வருடத்தின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் பரம்பரை பரம்பரையாக வியாபாரம் செய்பவர்கள், அவர்களுக்கு தீபாவளி நாளே தொழில் கணக்கு வழக்குகளை தொடங்கும் நாள். அதனால் அவர்கள் இந்துக்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

அப்படியும் "தை ஒன்றே வருடப்பிறப்பு" என்று பிடிவாதம் பிடிப்பவர்களிடம் நான் கேட்கிறேன், தை முதல் நாள் எப்போது வரும் என்று எப்படி கணிப்பீர்? சூரியனின் சுழற்சியை வைத்துத்தானே? சூரியன் மகர ராசியில் நுழையும் நாளை வைத்துத் தானே? ஆகவே பஞ்சாங்கத்தை, நம் பழங்கால வானிலை முறையை வைத்துத் தானே தை முதல் நாளையும் கணிப்பீர்? பழங்கால வானிலை முறையில் மகர ராசி முதல் ராசியா? அது பத்தாம் ராசி அல்லவா? ஆகவே தை மாதம் வருடத்தின் பத்தாம் மாதமாகத் தானே இருக்க முடியும்? மகர ராசியே முதல் ராசி, தை மாதமே முதல் மாதம் என்று குறிப்பிடும் தமிழ் இலக்கியச் சான்று ஏதாவது உள்ளதா? மாறாக "திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக" என்று மேஷ ராசியையே முதல் ராசியாக இரண்டாம் நூற்றாண்டு தமிழ்ச்சங்கப்பாடலான நெடுநெல்வாடை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறதே! மேஷ ராசியே நம் பண்டைய வானிலை முறையின் முதல் ராசி என்றால் சூரியனின் பெயர்ச்சியை வைத்து மாதங்களைக் கணிக்கும் பண்டையத் தமிழர்கள் சூரியன் மேஷராசியில் நுழையும் சித்திரை ஒன்றாம் நாளையே வருடத்தின் தொடக்கமாகக் கொண்டார்கள் என்பது நிரூபணமாகிறது அல்லவா?

ஆக, தை முதல் நாளன்று கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் வேளான் தொழிலை முதன்மையான தொழிலாகக் கொண்ட தமிழ்ச்சமூகத்திற்கு மிகவும் முக்கியமான திருநாள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எவருக்கும் இருக்க முடியாது. அறுவடைத் திருநாள் தொழில் கணக்கு வழக்குகளுக்கான முதல் நாளாக, வர்த்தக வருடத்தின் முதல் நாளாக கருதப்பட்டதற்கான வாய்ப்பு நிச்சயமாக உண்டு. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று தை முதல் நாளை ஒரு புதிய செழுமையான காலத்தை எதிர்நோக்கும் நாளாக இன்றளவும் நாம் கொண்டாடி வருகிறோம்.

அதே சமயம், அந்த தை முதல் நாளையும் கணிக்கும் நம் பண்டைய வானிலை முறைப்படி "வருடம்" என்பது சித்திரை முதல் நாளே தொடங்குகிறது. சிலப்பதிகார காலத்திலிருந்து இன்று வரை தமிழரனைவரும் சித்திரைத் திருநாளை வருடப்பிறப்பாக சிறப்பாகக் கொண்டாடி வருவதும் இதையே பறைசாற்றுகிறது.

அனைவருக்கும் இனிய சார்வரி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Source: Srinivasan G, வானியல் ஆர்வலன், சென்னை

Next Story
கதிர் தொகுப்பு
Trending News