Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளாவில் முதல்முறையாக எரியூட்டப்படும் கிறிஸ்தவர்களின் சடலம் - COVID-19 பாதிப்பு எதிரொலி.!

கேரளாவில் முதல்முறையாக எரியூட்டப்படும் கிறிஸ்தவர்களின் சடலம் - COVID-19 பாதிப்பு எதிரொலி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 6:30 AM GMT

கொரோனா வைரஸ் பரவல் பல அசாதாரணமான சூழ்நிலைகளையும் விசித்திரமான பிரச்சினைகளையும் சமூகத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது‌. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை அவர்களது குடும்பமே ஏற்றுக் கொள்ளாத அவலம் ஒரு பக்கம் என்றால் இறந்தவர்களை புதைக்கும் வழக்கம்‌ கொண்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் புதைக்க இடம் கிடைக்காமலும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் சூழலையும் எதிர் கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கூட புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலிஸ் என்பவர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்த போது அவரை புதைக்க விடாமல் சக மதத்தினரே சதி செய்ததாக தகவல்கள் வெளியாகின. கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் கேரளாவிலும் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. தாங்கள் செல்லும் சர்ச்சுக்கு சொந்தமான கல்லறைகளில் புதைக்க சக மதத்தவர்களே அனுமதிக்காத அவலமும் பொது மயானங்களில் புதைக்க அக்கம் பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதும் உறவினரின் இறப்பால் சோகத்தின் இருக்கும் குடும்பத்தாருக்கு மேலும் அவஸ்தையை தருகின்றன.

பல அரசு தரப்புகளில் இருந்தும் மருத்துவர்கள் தரப்பிலும் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், மத நம்பிக்கை காரணமாக யாரும் அதை தீவிரமாக பரிசீலிக்கவில்லை. இந்நிலையில் ஆலப்புழா மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஆலப்புழா மறைமாவட்ட நிர்வாகம் தங்களது கல்லறைகளுக்கு வரும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட சம்மதம் தெரிவித்துள்ளது.

ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டரின் வேண்டுகோள் பரிசீலித்த லத்தீன் கத்தோலிக்க பிஷப் ஜோசப் அன்னபரம்பில் பல தரப்பினருடன் ஆலோசித்த பின் தங்களது கல்லறைகளில் எரியூட்டலை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதன்படி கல்லறையில் கோவிட்-19 வழிமுறைகளின் படி சடலம் எரியூட்டப்பட்டு பின்னர் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை பாதுகாக்கும் வண்ணம் சாம்பல் மண்ணுக்குள் புதைக்கப்படும் என்று கூறப்படுகிறது. லத்தீன் கத்தோலிக்க திருச்சபையின் முடிவை ஒட்டி சிஎஸ்ஐ திருச்சபையும் இந்த முறையைப் பின்பற்ற சம்மதம் தெரிவித்துள்ளது.

பொதுவாக கிறிஸ்தவர்கள் தங்களது சர்ச்சில் மட்டுமே சடலத்தைப் புதைக்கும் வழக்கத்தைக் பின்பற்றுவர் என்பதால் இந்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று ஆட்சியர் அலெக்சாண்டர் குறிப்பிட்டுள்ளார். முதல்முறையாக 62 வயதான தெரசம்மா என்பவரின் சடலம் மராரிக்குளம் பகுதியில் உள்ள‌ புனித அகஸ்டின் சர்ச் கல்லறையில் எரியூட்டப்பட்டு பின்னர் அவரது அஸ்தி புதைக்கப்பட்டது. இதனால் முனிசிபல் மயானங்களுக்கு உடலை எடுத்துச் சென்று அங்கே அக்கம் பக்கத்தினரின் கோபத்திற்கு ஆளாகும் அசம்பாவிதம் தவிர்க்கப்படும் என்று அலெக்சாண்டர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கல்லறைகளில் இடப்பற்றாக்குறையால் vault முறையை கேரள கல்லறைகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News