Kathir News
Begin typing your search above and press return to search.

"என் அம்மா காத்திருக்கிறார்! விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சிய தலித் இளைஞரைக் கொன்ற கொடூரர்கள்

"என் அம்மா காத்திருக்கிறார்! விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சிய தலித் இளைஞரைக் கொன்ற கொடூரர்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2020 6:31 AM GMT

உத்திரப் பிரதேசத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் பணிக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் 25 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் சக பணியாளர்களின் மீது சந்தேகம் உள்ளதாக புகாரளித்திருந்த நிலையில் தற்போது உண்மையான கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

முகமது அதில், முகமது மொஹ்சின், மற்றும் முகமது சல்மான் ஆகிய மூவரையும்‌ காசியாபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக காசியாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் நீரஜ் ஜடான் கூறியதாக ஸ்வராஜ்யா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மூவரில் மொஹ்சின் மீது ஏற்கனவே அலைபேசி திருட்டு, விலங்குகளைத் துன்புறுத்துதவ் உள்ளிட்ட குற்றங்களுக்காக காசியாபாத்தில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் ‌பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நீரஜ் கூறியுள்ளார்.



கொலையுண்ட விவேக் குமார் ஜாதவ் பட்டியலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காசியாபாத் பாபு தாம் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக பணியாற்றியுள்ளார். கொலையாளிகளைப் பிடிக்க மோப்ப நாய் லீனா உதவியுள்ளது.

விவேக்கின் தந்தை ராஜேந்திர குமார், "எனது மூன்று மகன்களில் விவேக் மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவன் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக டெல்லியில் உள்ள அவனது அத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். எனது குழந்தைகளில் சிறந்த கல்வி அவனுக்கு மட்டும் தான் கிடைத்தது" என்று கூறியதாக ஸ்வராஜ்யா குறிப்பிட்டுள்ளது.

மேலும், "இப்போது தான் எங்களுடன் வாழ்ந்து குடும்பத்தின் நிலைமையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். இப்போது போய்விட்டான்" என்று விவசாயக் கூலியாக வேலை செய்யும் ராஜேந்திரன் வேதனையுடன் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.



திருமணமாகாத விவேக் ராஜேந்திரனின் மூன்று மகன்களில் இரண்டாவதாகப் பிறந்தவர். அவருக்கு ஒரு சகோதரியும் உண்டு. முதல்நாள் இரவிலிருந்து மகனைத் தேடிக் கொண்டிருந்த ராஜேந்திரன், மறுநாள் அவரது கிராமமான குஷலியாவிலிருந்து 5கிமீ தொலைவில் உள்ள மதியலா என்ற கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் விவேக்கின் உடலைக் கண்டு பிடித்தார்.

இரவு 8.30 மணி அளவில் தனது சக பணியாளர் முகமது ஜப்பாரை அலைபேசியில் அழைத்து தான் ஒரு சிறிய விபத்தில் சிக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவரது அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. விவேக்கின் தந்தை அவரைக் காணாமல் மசுரி காவல் நிலையத்தில் விவேக்கின் சக பணியாளர்கள் முகமது ஜப்பார், அனில் சந்திரபன் மற்றும் லோகேஷ் ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார். "அவர்களுக்கு என் மகன் மீது கோபம் இருந்தது" என்று ராஜேந்திரன் கூறியதாக முதல் தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோணத்தில் காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே மோப்ப நாய் லீனா கொலையாளிகளைக் கண்டுபிடித்து விட்டது‌. "சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து ஓடத் தொடங்கிய லீனா 1.5கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு முன் சென்று தான் நின்றது. பின்னர் அந்த வீட்டில் குடியிருந்தவன் கொலையாளிகளில் ஒருவன் என்பதை பல சாட்சிகளை வைத்து உறுதி செய்தோம்" என்று காவல்துறை கண்காணிப்பாளர் நீரஜ் கூறியுள்ளார்.

கொலையாளிகளின் வாக்குமூலத்தில் இருந்து இந்தக் கொலைச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அவர் விவரித்துள்ளார்:

மூன்று கொலையாளிகளும் பயணித்த நான்கு சக்கர வாகனத்தின் மீது விவேக்கின் இருசக்கர வாகனம் உரசியுள்ளது. இதில் தடுமாறி கீழே விழுந்த விவேக் உடனடியாக தனது சக பணியாளர் ஜப்பாரைத் தொடர்பு கொண்டு விபத்தைப் பற்றி தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் அவரது அலைபேசியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்த சுடுகாட்டுக்கு பின்னால் உள்ள ஒரு பகுதிக்கு ஓடிச் சென்றுள்ளனர். விவேக் அவர்களைத் தொடர்ந்து சென்றுள்ளார். அங்கே அவரைக் கீழே தள்ளி, அடித்து, பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளனர்.

விவேக் "என்னை விட்டுவிடுங்கள்; என் அம்மா எனக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்" என்று திரும்பத் திரும்ப கெஞ்சியதாகவும், ஆனால் அவரை விடாமல் உயிர் பிரிந்த பின்னரே தாக்குதலை நிறுத்தியதாகவும் கொலையாளிகள் கூறியுள்ளனர். மேலும், உடலைப் புதைக்க முயன்றதாகவும் முடியாத‌ பட்சத்தில் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொலைக் குற்றவாளிகளைக் கண்டறிந்த காவலர்கள் குழுவுக்கு ₹ 10,000 பரிசுத் தொகையும் மோப்ப நாய் லீனாவுக்கு புதிய லெதர் பெல்ட் மற்றும் வெல்வெட் படுக்கையை பரிசளிப்பதாக காசியாபாத் தலைமைக் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News