Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய, அமெரிக்க, ஜப்பான் படைகளுடன் இணையும் ஆஸ்திரேலிய கடற்படை - 'மலபார்' பயிற்சிக்கு ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அழைப்பு.!

இந்திய, அமெரிக்க, ஜப்பான் படைகளுடன் இணையும் ஆஸ்திரேலிய கடற்படை - 'மலபார்' பயிற்சிக்கு ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அழைப்பு.!

இந்திய, அமெரிக்க, ஜப்பான் படைகளுடன் இணையும் ஆஸ்திரேலிய கடற்படை -  மலபார் பயிற்சிக்கு ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அழைப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2020 2:05 AM GMT

அண்மையில் ஜப்பான் போர்ச் சூழலில் பிற நாட்டு ராணுவங்களுடன் படை பலம், இருப்பு, நிலைகள், தளங்கள் உள்ளிட்டவை பற்ற தகவல்களை பரிமாற வகை செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. இது சீனாவின் ஏகாதிபத்திய போக்கால் பாதிக்கப்படும்‌‌ நாடுகளை பாதுகாக்கவும் சீனாவுக்கு எதிரான ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கணிக்கப்பட்டது. ஏனெனில் இந்த சட்டத் திருத்தத்தின்‌ மூலம் போர்ச்‌சூழலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் ராணுவங்களுடன் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்கள், தரவுகளை பகிரவும் முடியும். இது ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வழக்கமாக நடைபெறும் இந்திய-அமெரிக்க கடற்படைகளின் 'மலபார்' கூட்டு பயிற்சியில் பங்கு பெற ஆஸ்திரேலிய கடற்படைக்கும் இந்தியாவில் அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே மாதம்‌ வீடியோ கான்பரன்சிங் முறையில் ‌சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய‌ பிரதமர் ஸ்காட் மோரிசனும் இரண்டு நாடுக்ளுக்கு இடையில் இராணுவ தளங்கள், தரவுகள், துறைமுகங்கள் ‌உள்ளிட்டவற்றை உபயோகிக்க அனுமதி அளிக்கும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதை விமர்சித்து 'சீனாவை எதிர்த்து அணி திரள சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இது நம் பிராந்தியத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும்' என்று சீன கம்யூனிஸ்ட் ஆதரவு பத்திரிகை நிறுவனமான Global Times கருத்து வெளியிட்டிருந்தது. இந்த ஒப்பந்தமே சீனாவின் அடி வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்றால் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதன் ஒரு பகுதியாக இரண்டு நாட்டு கடற்படைகளும் இணைந்து பயிற்சி வேறு மேற்கொள்வது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

'மலபார்' கூட்டுப் பயிற்சி 1992லிருந்தே நடந்து வருகிறது என்றாலும் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து தான் பிற ஆசிய நாடுகளின் பங்களிப்புடன் வழக்கமாக நடைபெறுகிறது. 2007ம் ஆண்டு அமெரிக்கா, இந்தியா மற்றும் சிங்கப்பூருடன் ஆஸ்திரேலிய கடற்படையும் கூட்டுப் பயிற்சியில் இணைந்த போது சீனா ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் இதற்கும் நேரடி தொடர்பு இல்லையென்றும், இயற்கையாகவே அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய ஜனநாயக நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சுதந்திரமான சரக்குப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய Quad என்னும் முறையாக அறிவிக்கப்படாத கூட்டமைப்பை ஏற்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் மலபார் பயிற்சியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு விடுவதைப் பற்றி கருத்து தெரிவிக்காத நிலையில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் "ஒருவருக்கொருவர் தகவல்கள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொண்டு, சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பகுதியில் நமது நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நான்கு தரப்பு பாதுகாப்பு பயிற்சிகளில் பங்கேற்பதில் பயன் உள்ளது என்று ஆஸ்திரேலியா கருதுகிறது" என்று கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற மலபார் பயிற்சியில் ஜப்பான் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா 'சம்பந்தப்பட்ட நாடுகள் மோதலைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்த முயல வேண்டாம்' என்று எச்சரிக்கை விடுத்தது. தற்போது இந்தியாவிடம் வாலாட்டுவதோடு ஜப்பான் உரிமை கோரும் செனககு தீவுகளை சொந்தம் கொண்டாட சீனா முயற்சிக்கிறது. மேலும், இந்தியாவுடன் ராணுவ ரீதியாக நட்பு பாராட்ட முயல்வதற்காக இந்திய வங்கி சேவை சார்ந்த தகவல் தொழில்நுட்ப தளங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்திய சீனா அதே போன்று அதே சமயத்தில் ஆஸ்திரேலிய வங்கி சேவைகள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தியது. இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அந்நாட்டு கடற்படை இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் மலபார் பயிற்சியில் பங்கேற்கவும் செய்தால் சீனாவின் ரியாக்ஷன் எவ்வாறு இருக்கும் என்று பார்க்க சர்வதேச உறவு மற்றும் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News