Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் லாயத்திலிருந்து ஓட்டமெடுக்கும் குதிரைகள் - கவலையில் கபில் சிபல்!

காங்கிரஸ் லாயத்திலிருந்து ஓட்டமெடுக்கும் குதிரைகள் - கவலையில் கபில் சிபல்!

காங்கிரஸ் லாயத்திலிருந்து ஓட்டமெடுக்கும் குதிரைகள் - கவலையில் கபில் சிபல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 July 2020 2:20 PM GMT

மத்திய பிரதேசத்தில் தான் ஆட்சி அம்போவென்று போய் விட்டதென்றால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அரசு அவ்வளவு நாட்கள் நீடிக்காது போலிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை பீடிக்க ஆரம்பித்திருந்த காலத்தில் காங்கிரஸ் வைரஸிலிருந்து மத்தியபிரதேசம் குணமாகிவிட்டது. மத்திய பிரதேச அரசியலில் முக்கியமானவரும் காலஞ்சென்ற காங்கிரஸ் பிரதமர் ராஜீவ்காந்தியின் உற்ற தோழரான மாதவராவ் சிந்தியாவின் மகனுமான ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநில தேர்தலில் களத்தில் இறங்கி வேலை பார்த்த தனது திறமைக்கு காங்கிரஸ் கட்சியில் மதிப்பு கிடைக்காததால், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் சிந்தியாவின் உதவியுடன் மீண்டும் ஆட்சி அமைத்தார்.

இதே நிலைதான் ராஜஸ்தானிலும் வரும் என்பதற்கான அறிகுறிகள் சில நாட்களாக தென்பட்டு வருகின்றன. நேற்று இரவு சிந்தியாவைப் போன்றே ராஜஸ்தான் மாநில தேர்தலில் களத்தில் இறங்கி உழைத்த சச்சின் பைலட் முதல்வராக்கப்படுவார் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதும் தேர்தலில் வென்ற பிறகு மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக நியமிக்கப்பட்டார். துணை முதல்வர் பதவியில் திருப்தி அடைய நிர்ப்பந்திக்கப்பட்ட சச்சின் பைலட் , நேற்றிரவு தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் என 25 பேருடன் டெல்லிக்கு சென்றதாக செய்திகள் வந்தன. அதே சமயத்தில் முதல்வர் கெலாட்டும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டு உள்ள நிலையில் முதல்வர் கெலாட் , பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில்சிபல் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து கவலை தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"நமது கட்சியை நினைத்து கவலையாக இருக்கிறது. நமது குதிரைகள் லாயத்திலிருந்து ஓடியபின் தான் நாம் விழிப்போமா?" என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது சிந்தியாவின் வழியில் பைலட்டும் காங்கிரஸ் கட்சியை புறந்தள்ளிவிட்டு பாஜகவில் இணைவாரா என்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News