Kathir News
Begin typing your search above and press return to search.

சுதந்திரப் பறவை சந்திர சேகர் ஆசாத்தின் பிறந்த தினம் இன்று!

சுதந்திரப் பறவை சந்திர சேகர் ஆசாத்தின் பிறந்த தினம் இன்று!

சுதந்திரப் பறவை சந்திர சேகர் ஆசாத்தின் பிறந்த தினம் இன்று!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 3:03 AM GMT

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி நாம் மறுபடியும் மறுபடியும் நினைவு கூற வேண்டியது அவசியம். ஏன்? பாரதியார் சுதந்திரப் பயிரை பற்றி "தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ திருவுளமோ" எனப் பாடுகிறார். அத்தகைய சுதந்திரப் பயிரை நாம் பெற எத்தனை பேரின் கண்ணீர் மட்டுமல்ல ரத்தமும் சிந்தப்பட்டது என்பதை அறிவது அவசியம் தானே?

ஜெனரல் G.D. பாக்ஷி தனது "போஸ் அல்லது காந்தி, இந்தியாவிற்கு யார் விடுதலை பெற்றுத் தந்தது? என்ற புத்தகத்தில், உண்மையில் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியதற்குக் காரணம், இரண்டாம் உலகப் போரில் இருந்து திரும்பி வந்த இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் மூலம், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் ராணுவக் கிளர்ச்சி ஏற்படும் என பிரிட்டிஷ் அஞ்சியதேயாகும் என வாதிடுகிறார். அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கிளிமெண்ட் அட்லீ இந்தியாவிற்கு வந்த போது இதை ஒப்புக் கொண்டதாகவும் கூறுகிறார்.

அகிம்சை வழியில் போராடியவர்களுக்கு பல வருடங்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டாலும், புரட்சியாளர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது அல்லது அந்தமான் சிறையில் நிரந்தரமாக இடம் ஒதுக்கப்பட்டது. புரட்சி, தூக்கு என்று கூறியவுடன் பகத்சிங்கின் நினைவு வருவது இயல்புதான். அந்த பகத்சிங்கின் குருவாக அறியப்படும் சந்திரசேகர் ஆசாத் அல்லது சந்திரசேகர் திவாரியின் பிறந்த தினம் இன்று.

மீசையை முறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தின் மூலம் நம் மனதில் இடம் கொண்டிருக்கும் சந்திரசேகர ஆசாத் ஜூலை 23-ஆம் தேதி 1906-ல் உத்திரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பண்டிட் சீதாராம் திவாரி, தாய் ஜகராணி தேவி. சந்திர சேகர் ஒரு சமஸ்கிருத பண்டிதராக வேண்டும் என விரும்பிய அவர் அன்னை அதற்காக அவரை வாரணாசிக்கு அனுப்பி வைத்தார்.

1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சந்திரசேகரின் மனதை மிகவும் பாதித்தது. அப்போது அவருக்கு வயது 13. தனது 15வது வயதில் காந்தி அறிவித்த அகிம்சை வழிப் போராட்டமான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். அப்போது நடந்த ஒரு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மாஜிஸ்ட்ரேட் அவர் பெயரை கேட்ட போது ஆசாத் என்று கூறினார். அப்படி என்றால் 'சுதந்திரமானவன்' (Free) என்று பொருள். அவர் மைனர் என்பதால் அவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்படவில்லை. ஆனால் 15 கசையடிகள் கொடுக்கப்பட்டது. தான் உயிருடன் இருக்கும் வரை பிரிட்டிஷ் போலீசிடம் கைதாக மாட்டேன் என உறுதியெடுத்த அவர் அதன்பிறகு சந்திரசேகர் ஆசாத் என அறியப்பட்டார்.

இளம் புரட்சியாளர்களான ஆசாத், பகத்சிங், சுக்தேவ் போன்றவர்கள் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். ஆனால் 1922-இல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை, காங்கிரஸ் கூட்டத்தில் எந்த ஆலோசனையோ, விவாதங்களோ இல்லாமல் திடீரென்று நிறுத்தியது காங்கிரசுக்குள் பிளவை ஏற்படுத்தியது. அங்கே ராம்பிரசாத் பிஸ்மில் தலைமையில் புரட்சிப் பிரிவு உருவானது. ஹிந்துஸ்தான் ரிபப்லிக்கன் அஸோஸியேஷன் (HRA) பிறந்தது. காந்தியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த ஆசாத் காங்கிரஸின் தேசிய தலைமையில் நம்பிக்கை இழந்தார். இந்திய விடுதலையைப் பெற அகிம்சை வழியை கைவிட்டு புரட்சியைக் கையிலெடுத்தார்.

ஆசாத் சில காலம் ஜான்சியில் தங்கியிருந்தார். ஜான்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர்ச்சா காட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். தன் குழுவை சேர்ந்த மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்தார். பண்டிட் ஹரிஷங்கர் பிரம்மச்சாரி என்ற பெயரில் அவர் வாழ்ந்த திமர்புரா கிராமம் தற்போது ஆசாத்புரா என மத்தியப் பிரதேச அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1924 வாக்கில் பகத் சிங், சுக்தேவ் தாப்பர் ஆகியோருடன் HRA-வில் இணைந்தார் ஆசாத். HRAவின் மிக முக்கியமான, காக்கோரி ரயில் கொள்ளை 1925-ல் நடந்தது. ஆகஸ்ட் 9, 1925ல் ஷாஜகான்பூரில் இருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் துப்பாக்கி முனையில் பிரிட்டிஷ் கருவூலத்திற்கு சென்று கொண்டிருந்த பணத்தை மட்டுமே கொள்ளையடித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக, ஒரு இந்தியர் துப்பாக்கி குண்டுக்கு பலியானதால் இது கொலை வழக்கானது. மொத்தம் 40 பேர் இந்தியா முழுவதிலுமிருந்து கைது செய்யப்பட்டனர்.

இதில் ராம்பிரசாத் பிஸ்மில், தாக்கூர் ரோஷன் சிங், ராஜேந்திர நாத், அஷுபாகுல்லாஹ் கான் ஆகிய நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 1929 டிசம்பரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இருவர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 15 பேர் ஆதாரமின்மையால் விடுவிக்கப்பட்டனர். 3 பேர் தப்பித்து சென்றனர். மற்றவர்கள் 4 வருடம் முதல் 14 வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். முக்கியக் குற்றவாளிகளில் ஆசாத் மட்டுமே பிடிபடாமல், தலைமறைவாக இருந்தார்.

1928ல் HRAவை மறுசீரமைத்த ஆசாத், அதன் பெயரை, ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்லிக்கன் அஸோஸியேஷன் (HRSA) என மாற்றி அமைத்தார். இதற்கு பெரும்பாலும் சோஷலிசத்தின் மீது பகத்சிங்கிற்கு இருந்த ஈர்ப்பு காரணம் என நாம் கொள்ளலாம். 1928ல் சைமன் கமிஷன் இந்தியாவின் அரசியல் சூழ்நிலை பற்றி ஆராய்ந்து இங்கிலாந்திற்கு குறிப்பு அனுப்ப இந்தியாவிற்கு வந்தது. இதில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லை. இதை வன்மையாக எதிர்த்த HRSA சைமன் கமிஷனர் உறுப்பினர்களின் மீது குண்டு வீச முடிவு செய்தது.

சைமன் கமிஷனுக்கு எதிராக பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் தலைமையில் லாகூரில் அமைதியான போராட்டம் நடந்தது. ஆனால் போலீஸ் இதற்கு வன்முறையால் பதிலடி கொடுத்தது. அப்போது நடந்த தடியடியில் காயமுற்ற லாலா லஜபதிராய் சில நாட்களில் இறந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பழிவாங்க முடிவு செய்த சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தாப்பர், சந்திரசேகர ஆசாத், பகத்சிங் ஆகியோர் கூட்டாளிகளாக திட்டமிட்டனர். உதவிக் கண்காணிப்பு ஆணையர் ஜான் சாண்டர்ஸ், பகத்சிங் மற்றும் ராஜ்குருவால் சுடப்பட்டு இறந்தார். தப்பித்துப் போகும் போது தங்களை துரத்திய கான்ஸ்டபிளை ஆசாத் சுட்டார். நான்கு பேரும் தலைமறைவாகினர்.

1929இல் டெல்லியில் இருந்த மத்திய சட்டமன்றத்தில் கூட்டம் நடைபெற்ற போது, காலி இருக்கைகளில் குண்டுகளை வீசிய பகத்சிங் மற்றும் படுகேஸ்வர் தத் தாங்களாகவே முன்வந்து அங்கேயே கைதாகினர். அங்கே நிறைவேற்றப்பட இருந்த சர்ச்சைக்குரிய பொது பாதுகாப்பு மசோதா, வர்த்தக தகராறு மசோதா ஆகிவற்றைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாக பிறகு விளக்கம் கொடுக்கப்பட்டது. கைது செய்யப்படும்போது இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற கோஷங்களை எழுப்பினர். விசாரணைக்கு பிறகு பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

1931 பிப்ரவரியில், தன் கூட்டாளிகள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஆசாத் ஜவாஹர்லால் நேருவை சந்தித்தார். காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திட இருந்த நிலையில் அது நிறைவேற்றப்பட்டால், புரட்சியாளர்களுக்கு நிலைமை இன்னும் மோசமாகும். எனவே நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த அலகாபாத்தில் உள்ள நேருவின் வீட்டிற்கு நேருவை சந்திக்க சென்றார். இந்த சந்திப்பு குறித்து, நேரு தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். ஆசாத் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்பது போலவே வருணிக்கிறார். (உண்மையில் அந்த சமயத்தில் ஆசாத் பெரிய ஆள் தான்). 10 வரிகளில் 10 முறை ஆசாத்தைத் தீவிரவாதி எனக் குறிப்பிடும் நேரு, அவர் இயக்கத்திற்கு பாசிச சிந்தனைகள் இருந்ததாகவும் குற்றம் சுமத்துகிறார். பகத்சிங் பற்றிய உரையாடலே நேருவின் சுயசரிதையில் இல்லை.

"அந்த நேரத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது, இது இந்தியாவில் பயங்கரவாதக் குழுவின் மனதைப் பற்றிய ஒரு பார்வையை எனக்குக் கொடுத்தது"

"அவர்களில் பலர், நிச்சயமாக பாசிச மனநிலையைக் கொண்டுள்ளனர் என்று எனக்குத் தோன்றுகிறது"

கோபமடைந்த ஆசாத், நேருவின் வீடான ஆனந்த பவனை விட்டு வெளியேறினார். ஆசாத், நேருவின் வீட்டிற்கு சென்ற தேதி சரிவரத் தெரியவில்லை. (பிப்ரவரி கடைசி என்பதைத் தவிர). பிப்ரவரி 27ல் ஆல்பிரட் பூங்காவிற்குச் சென்றார் ஆசாத். அவருடன் மற்றொரு புரட்சியாளர் சுக்வீர் ராஜ் இருந்தார். திடீரென துணை காவல்துறை கண்காணிப்பாளர் பிஷேஷ்வர் சிங்குடன் ஜான் நாட்-போவர் அங்கு ஆசாத்தை பிடிக்க வந்தார். ஒரு போலீஸ்காரர் தன்னை நோக்கி விரலை சுட்டிக்காட்டியதைக் கண்ட ஆசாத் உடனடியாக தனது கைத்துப்பாக்கியை பாக்கெட்டிலிருந்து வெளியே இழுத்து நோட்-போவரின் மணிக்கட்டில் சுட்டார். பிஷேஷ்வர் சிங் ஆசாத்தை கடுமையாகத் திட்டினார். ஆசாத் உடனடியாக பிஷேஸ்வர் சிங்கை வாயில் சுட்டு, அவரது தாடையை உடைத்தார். சில நிமிடங்களில், போலீசார் ஆல்பிரட் பூங்காவை சுற்றி வளைத்தனர்.​​ஆசாத்தின் வலது தொடையில் புல்லட் துளைத்தது. இதனால் அவர் தப்பிப்பது கடினமானது. ஆனால் அப்போதும் கூட சுக்தேவ் ராஜை தப்பிக்க வைத்தார்.

இறுதியாக, ஒரு துப்பாக்கி குண்டு மட்டுமே தனது துப்பாக்கியில் இருந்த நிலையில், தன் 24-வது வயதில் போலீசாரிடம் கைதாவதற்கு பதிலாக சந்திர சேகர் ஆசாத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து விஷயம் தெரிந்து பூங்காவில் கூடிய மக்கள் ஆசாத்தைப் புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர்.

அவர் இறந்த ஒரு மாதத்திற்குள்ளாக, அவரது கூட்டாளிகளான பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தாப்பர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். HRSA கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போனது. இந்த இளம் போராளிகளுடைய மரணம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வேகப்படுத்தியது. சுயராஜ்யத்தின் அனலை மக்கள் மனதில் ஊட்டியது.

2016-ல் சந்திர சேகர் ஆசாத்தின் மருமகன் (Nephew) சுர்ஜித் ஆசாத், நேரு தான் ஆசாத் இருக்கும் இடத்தை போலீசிற்குத் தெரியப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தினார்.

அவர் இறந்த ஆல்பிரெட் பூங்கா, சந்திரசேகர் ஆசாத் பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கே அவருக்கு ஒரு சிலை உள்ளது. பல திரைப்படங்களும், நாடகங்களும் அவர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடி "ஆசாத் தனது உயிரைத் தியாகம் செய்தார், ஆனால் வெளிநாட்டு ஆட்சிக்கு தலைவணங்கவில்லை" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

15 வயதில் தான் உயிருள்ள வரை சுதந்திரமாக மட்டுமே இருப்பேன் என உறுதி எடுத்த ஆசாத், அதைக் கடைசி வரை காப்பாற்றினார்.

Next Story