கேரள அரசு பொறுப்பில்லாமல் நெருப்புடன் விளையாடுகிறது: மருத்துவ நிபுணர்கள் கண்டனம்
கேரள அரசு பொறுப்பில்லாமல் நெருப்புடன் விளையாடுகிறது: மருத்துவ நிபுணர்கள் கண்டனம்

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், உலக அளவில் பல கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. டோக்யோவில் நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக் நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் கூட ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடியும் வலியுறுத்தியுள்ளார். ஹோலி கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் ஆற்றுக்கால் தேவி கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கல் வைக்கும் விழா திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் அந்த விழாவை காண வருகிறார்கள். இது தொற்று அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் விழாவை தடை செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்களும், பொது ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் கேரள அரசு இதற்கு செவி சாய்க்காமல் "ஆற்றுக்கால் பொங்கல் விழாவால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளது. கேரள நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜாவும் இந்த விழா நடப்பது உறுதி எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறும் என கூறியுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், குறிப்பிட்ட சில மதத்தினரின் நம்பிக்கையைக் காப்பாற்ற கேரள அரசு பொறுப்பில்லாமல் நெருப்புடன் விளையாடுகிறது என்று மருத்துவத் துறை நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விழாவை நடத்துவதால் ஏற்படும் ஆபத்தின் விளைவுகளை மாநில அரசு உணரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.