மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு படையெடுக்கும் முஸ்லிம் விஐபிக்கள்
மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு படையெடுக்கும் முஸ்லிம் விஐபிக்கள்

ரஜினிகாந்த் 2021 தேர்தலில் தான் அரசியலுக்கு வர இருப்பதை ஏற்கனவே உறுதி செய்ததுடன் புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், அவர் தெரிவித்து வந்த சில கருத்துகள் மத்திய அரசுக்கும், பாஜக.வுக்கும் சாதகமாக அமைந்து வந்ததால் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பாளர்களின் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், டெல்லி வன்முறைக்கு உளவுத் துறையின் தோல்வியே காரணம் என்றும் இதற்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் என்றார். மேலும் கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும். முடியாவிட்டால் அரசு ராஜினாமா செய்யவேண்டும்' என கடுமையான கருத்துகளைக் கூறினார்.
ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கள் ஆச்சரியத்தை உருவாக்கின. அவருடைய கருத்துக்களுக்கு பாஜக தரப்பில் விமர்சனங்கள் செய்யப்பட்டன. என்றாலும் பாஜக ஆதரவு நிலையில் இருந்து அவர் வெளிவந்திருப்பதாகவும், அவரது அரசியல் நிலைப்பாட்டில் இது ஒரு முக்கிய திருப்பம் என்றும் பாஜக எதிர்பார்ப்பாளர்களால் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தமிழக முஸ்லிம் சிறுபான்மையினர் திமுக மற்றும் இதர கட்சிகளுக்கு ஆதரவளித்தாலும் வேறு வழியின்றியே விருப்பமில்லாமல் அவர்கள் அதை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் காங்கிரசை ஓரம் கட்டிவிட்டு, கெஜ்ரிவாலுக்கு கடைசி நேரத்தில் ஒட்டுமொத்த ஆதரவு தந்ததை போல ரஜினி உண்மையில் மனம் மாறியிருந்தால் நல்லவரான அவருக்கு ஒட்டுமொத்தமாக எதிர்காலத்தில் ஆதரவளிக்கலாம் எனவும் அவர் மூலம் மோடி அரசுடனான கண் மூடித்தனமான எதிர்ப்பையும் கைவிட்டு வளர்ச்சி பாதையில் மற்றவர்களை போல நாமும் செல்லலாம் எனவும் தமிழக இஸ்லாமியர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினி மத்திய அரசுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த அடுத்த சில மணி நேரத்தில் இருந்தே ரஜினியுடன் ஏராளமான இஸ்லாமிய அமைப்பு விஐபிக்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர் என்றும் பலர் நேரில் போயஸ் கார்டன் சென்று ரஜினியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்தன.
இந்த நிலையில், ரஜினியும் பல இஸ்லாமிய வி ஐ பிக்களிடம் தொலைபேசி மூலம் பேசி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முதல் நபராக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் முகம்மது அபுபக்கர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முகம்மது அபுபக்கர், 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம். சி.ஏ.ஏ. குறித்து ரஜினிகாந்துக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக வரவேண்டும் என்பதுதான் ரஜினியின் எண்ணம்' என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மேலும் பல முஸ்லிம் விஐபிக்கள் ரஜினியை சந்தித்து பேச விருப்பமுள்ளதாகவும், அவர்கள் அடுத்தடுத்து சந்திப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.