அடுத்த ஆட்டத்திற்கு தயாரான பா.ஜ.க. ! மூன்று மாநிலங்கள் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் வந்தது, ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்ட ஆபரேஷன் கமல் !
அடுத்த ஆட்டத்திற்கு தயாரான பா.ஜ.க. ! மூன்று மாநிலங்கள் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் வந்தது, ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்ட ஆபரேஷன் கமல் !

மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா & ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். 55 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்த முறை மாநிலங்களவை உறுப்பினர்களை இழக்க பா.ஜ.க. விரும்பவில்லை, மாறாக மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றால் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை தடையின்றி நிறைவேற்றலாம் என்று கருதுகிறது.
இந்த நிலையில்தான், தனது ஆபரேஷன் கமல் திட்டத்தை மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. செயல்படுத்தியுள்ளது, தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சி இன்றுடன் அல்லது இவ்வார இறுதிக்குள் முடிவிற்கு வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தம் 230 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 116 பேர் பெரும்பான்மை இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். தற்போது ஆளும் காங்., கட்சியில் 114 எம்.எல்.ஏ.,க்கள் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சியினர் 2 பேர் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.
பா.ஜ.,வில் 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தற்போது அதிருப்தியில் உள்ள 24 பேர் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்தால் இங்கு பா.ஜ., ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் குழப்பங்கள் முடிவுக்கு வரும்.
ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசில் இருந்து விலகுவதாக தனது கடிதத்தை காங்., சோனியாவுக்கு அனுப்பி உள்ளார். இந்த கடிததத்தில் அவர் கூறியிருப்பதாவது: 18 ஆண்டுகாலம் இருந்த காங்., கட்சியில் இருந்து வெளியேறும் நேரம் வந்து விட்டது. மக்களுக்கு சேவையாற்ற விரும்பினேன். ஆனால் இது காங்., கட்சியில் செய்ய முடியவில்லை. மக்கள், தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக எனது புதிய பயணத்தை துவக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும், அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
சிந்தியா விலகலை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், தங்களது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர்.
மார்ச் 16 ஆம் தேதி மத்திய பிரதேச சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கமல்நாத் அரசுக்கு எதிராக பா.ஜ.க. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 19 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற வைத்து, கமல்நாத் அரசை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ. களை தக்கவைத்து கொள்ள அக்கட்சிகளின் சார்பில் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மேலும் மார்ச் 16 ம் தேதிக்குள் மூன்று மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடக்கும் என மூத்த அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாநிலங்களவை தேர்தலில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கிலே தற்போது களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.