தென் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி: கைதான காஜா மொய்தீன் வெளியிட்ட பகீர் தகவல்!
தென் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி: கைதான காஜா மொய்தீன் வெளியிட்ட பகீர் தகவல்!

டெல்லி அருகே வசிராபாதில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகியோரை ஜனவரி மாதம் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இம்ரான்கான், முகமது ஹனீப் கான், முகமது ஜெயித் ஆகியோரை தமிழக க்யூ பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 80 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து இந்த வழக்கு தமிழக க்யூ பிரிவில் இருந்து என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. பிறகு காஜா மொய்தீன் உட்பட 10 பேரை கடந்த 27ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை 6 நாள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தீவிரவாதி காஜா மொய்தீன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைபடி இந்தியாவில் புதிய தீவிரவாத இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். மூளை சலவை செய்து 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை அந்த இயக்கத்தில் சேர்த்துள்ளார்.
அவர்களுக்கு மும்பை தாக்குதல் போல் பெரிய அளவில் தென் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் விதமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சியை காஜா மொய்தீன் அளித்துள்ளார். இதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை பெங்களூரை சேர்ந்த இம்ரான் கான், முகமது சையது, எஜாஸ் பாஷா, உசேன் செரீப் ஆகியோர் சப்ளை செய்துள்ளனர்.
இந்த பயிற்சி முடிந்த பிறகு அனைவரும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்த காஜா மொய்தீன் அனைத்தும் செய்து வந்துள்ளார்.
'டார்க் வெப்' என்ற சட்ட விரோத இணையதளத்தை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளுடன் காஜா மொய்தீன் பேசி வந்ததும் 6 நாள் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து இந்த வழக்கில் தீவிரவாதி காஜா மொய்தீனுக்கு உதவிய மேலும் பலரை என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.