சொகுசு காரில் உலா வந்த தொழிலதிபரின் மகனை பிடித்துத் தோப்புக்கரணம் போட வைத்த பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி.!
சொகுசு காரில் உலா வந்த தொழிலதிபரின் மகனை பிடித்துத் தோப்புக்கரணம் போட வைத்த பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி.!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஊரடங்கு விதியை மீறி விலை உயர்ந்த சொகுசு காரில் உலா வந்த தொழிலதிபரின் மகனை தோப்புக்கரணம் போட வைத்த பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி. மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது வரை 2090 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் இந்தூரில் மட்டும் 1207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் பலியான 103 பேரில் இந்தூரில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க, பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள், துணை ராணுவம், போலீசார் தீவிர வாகன சோதனையில் இந்தூரில் ஈடுபட்டு வருகின்றனர், அப்போது விலை உயர்ந்த சொகுசு காரில் முக கவசம் இல்லாமல் உலா வந்த 20 வயது மதிக்கத்தக்க சான்ஸ்கர் டார்யானி என்பவரை வழிமறித்த பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி கட்டையால் மிரட்டி தோப்புக்கரணம் போட வைத்தார்.
விசாரணையில் பாதுகாப்பு அதிகாரி தோப்புக்கரணம் போட வைத்த இளைஞர் பிரபல தொழிலதிபர் ஆஷா மிட்டாய் கடை உரிமையாளர் தீபக் டார்யானி மகன் என்பது தெரியவந்தது, உரிய ஆவணங்கள் இருந்தும் பாதுகாப்பு அதிகாரிகள் தனது மகனை இழிவுபடுத்தி விட்டதாக தொழிலதிபர் தீபக் டார்யானி குற்றம் சாட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் எனது மகன் தேவையின்றி ஊர் சுற்றவில்லை என்றும் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்க தான் சென்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு உணவு கொடுக்க செல்லும்போது விலை உயர்ந்த சொகுசு காரை தான் எடுத்துச் செல்வார்களா? அப்படி எடுத்துச் சென்று இருந்தாலும் கூட முக கவசம் அணிய வேண்டும் என்று தெரியாதா என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.