வருவாய்துறையினரை பாதுகாக்கும் கொரோனா லேகியம்.!
வருவாய்துறையினரை பாதுகாக்கும் கொரோனா லேகியம்.!

வருவாய்துறையினரை பாதுகாக்கும் கொரோனா லேகியம்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்துறையினர் தங்கள் பாதுகாப்புக்கு கொரோனா லேகியத்தை கையோடு வைத்துள்ளனர்.
கொரோனா ஆட்கொல்லி வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கும். அதனால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கும் பல்வேறு அரசுத்துறைகள் களத்தில் தீவிர பணியாற்றிவருகின்றன. இருந்த போதிலும் சிங்கத்தை குகையில் சந்திப்பதை போல கொரோனா வைரஸ் பாதித்தவர்களை நேரில் சந்தித்து அவர் எங்கெங்கு சென்றார். யார் யாரை சந்தித்தார். அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் விவரம் உள்ளிட்டவைகளை சேகரித்து அந்த நபரையும் அவர் சார்ந்தவர்களையும் தனிமை படுத்துவது உள்ளிட்ட முக்கிய பணிகளை வருவாய்துறையினர் மேற்கொள்கின்றனர்.
தனிமை படுத்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல். அந்நபர்களை கண்காணித்தல், அந்தந்த பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்ததுல், அரசின் உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை வருவாய்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.இதனால் கொரோனா வைரஸ் தொற்று அவர்களை பாதிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு வித அச்ச உணர்வுடனேயே அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் வருவாய்துறை அலுவலர்கள் பலர் லேகியம் ஒன்றை கையோடு வைத்திருக்கின்றனர். காலை, பகல், மதியம், மாலை, இரவு என ஐந்து வேலைக்கும் கமர்கட் அளவிற்கு எடுத்து வாயிற்குள் போட்டுக்கொள்கின்றனர். இது இருக்கும் வரை தங்களுக்கு கொரோனா பயம் இல்லை என்கின்றனர்.
இந்த கொரோனா லேகியம் குறித்து கேட்ட போது கடலூர் மாவட்டத்தில் சித்தர் வழிபாட்டில் தீவிரமாக உள்ள வட்டாட்சியர் ஒருவர் சித்தர் ஒருவரை சந்தித்து கொரோனாவிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கேட்டுள்ளார். தியானத்தில் ஆழ்ந்த சித்தர் எழுந்து சென்று நாயுருவி செடியினை கொண்டு வந்து கொடுத்து இதன் தழைகளை நல்லெண்ணையில் வதக்கி இவற்றுடன் தேவையான பொருட்களை சேர்த்து துவையல் போல செய்து வைத்துக்கொண்டு நாளொன்றுக்கு ஐந்து வேளை சிறு உருண்டை வாயில் போட்டுக்கொண்டால் கொரோனா தொற்று அண்டாது என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
அதனை தானும் கடைபிடித்து தன் சக அலுவலர்களும் பரிந்துரைத்து தற்போது கடலூர் மாவட்டத்தில் அந்த நாயுருவி துவையல் எனப்படும் கொரோனா லேகியம் அரசு அதிகாரிகளை பாதுகாக்கும் கேடயமாகியுள்ளது.