தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கேட்டு கொண்ட அஜீத்.!
தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கேட்டு கொண்ட அஜீத்.!

'மங்காத்தா' திரைப்படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் தனது அனைத்து ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜீத், ரசிகர்களை அவர்கள் கடமை மற்றும் வேலையில் கவனம் செலுத்தச் சொல்லியிருந்தார்.
ஆனாலும் அஜீத் மேல் கொண்ட அன்பால் பொதுத் தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அஜீத்தைக் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
மே 1ம் தேதி அஜீத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அருண் விஜய், ஹன்சிகா உள்ளிட்ட 14 பிரபலங்களை அஜீத்தின் பிறந்த நாள் DPயை வெளியிட கோரிக்கை வைத்திருந்தனர் அஜீத் ரசிகர்கள். அவர்களும் ரசிகர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து அதனை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பிரபலங்களின் பட்டியலிலிருந்த நடிகர் ஆதவ் கண்ணதாசன், தனக்கு அஜீத்தின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும் கரோனா அச்சுறுத்தலால் மக்கள் பாதிப்பிலிருக்கும் இந்த சமயத்தில் தனது பிறந்த நாளை அஜீத் கொண்டாட விரும்பவில்லை எனவும் அவர் பிறந்த நாள் சார்ந்த எந்த கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளவோ ஊக்குவிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.