Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் தாணு!

மீண்டும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் தாணு!

மீண்டும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் தாணு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 April 2020 1:15 PM GMT

தமிழ் திரையுலகில் விநியோகஸ்தாராக நுழைந்து இன்று முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தாணு. இவரின் அதிரடி விளம்பர யுக்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் மிகவும் பிரபலம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகப் பதவி வகித்து வந்தார். விஷால் அவர் அணி மீது குற்றச்சாட்டுக்களை வைத்துக் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தை அனுமதி பெறாமல் மாற்றியது, சங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுக்கள் விஷால் மீது வைக்கப்பட்டதையடுத்து தற்போது தயாரிப்பாளர் சங்கம் முடக்கப்பட்டு. அரசின் வழிகாட்டுதலின் படி குழு ஒன்று அமைக்கப்பட்டு தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது. தயாரிப்பாளர்கள் பல்வேறு சவால்களைத் தொடர்ந்து சந்திக்க நேர்வதால், தயாரிப்பாளர் சங்கத்துக்கு முறையாகத் தேர்தலை நடத்தி விரைவில் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 21-ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தலைமையில் ஓர் அணியும் தேணாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் அணியின் சார்பில் குஷ்பு அல்லது கமிலா நாசர் களமிறக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாகத் தயாரிப்பாளர் தாணு தலைமையில் ஓர் அணி போட்டியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவரது அணியில் தற்போது படத் தயாரிப்பில் இருக்கும் தயாரிப்பாளர்களும் மேலும் பல முன்னணி தயாரிப்பாளர்களும் அங்கம் வகிப்பார்கள் என்று கூறுகின்றனர். ஏற்கனவே திரையுலகம் பல சவால்களைக் கண்டு வரும் நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையுலகம் தற்போது முடங்கியுள்ளது. ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதும் தமிழ் திரையுலகம் பல சவால்களைச் சந்திக்க நேரிட வேண்டியிருப்பதால், அதனை எதிர்கொள்ளத் தாணு போன்ற அனுபவசாலி தலைவரானால் மட்டுமே அது தமிழ் திரையுலகைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்ற காரணம் முன் வைக்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News