கொரோனாவின் பிடியில் இருந்து மீண்ட பா.ஜ.க மூத்த தலைவரின் மகள்!
கொரோனாவின் பிடியில் இருந்து மீண்ட பா.ஜ.க மூத்த தலைவரின் மகள்!

உறுதியோடு போராடினால் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பிலிருந்து நிச்சயம் குணமடைய முடியும் என்று கர்நாடக மாநில பா.ஜ.க எம்.பி-யும், மாநில மூத்த பா.ஜ.க தலைவருமான சித்தேஷ்வரின் மகள் அஷ்வினி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில், கிருமித் தொற்றிலிருந்து தாம் முழுமையாகக் குணமடைந்தது குறித்து அவர் விவரித்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்பியான சித்தேஷ்வரின் மகள் அஷ்வினி தமது கணவருடன் கயானா நாட்டில் வசித்து வருகிறார்.
மார்ச் மாத இறுதியில் தன் 2 மகளுடன் இந்தியா திரும்பிய அஷ்வினிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
"கொரோனா கிருமித் தொற்றிலிருந்து விடுபடவே முடியாது என அஞ்ச வேண்டாம்.
மருத்துவர்கள் என்னைத் தனிமையில் இருக்குமாறு சொன்னபோது வேடிக்கையாகத்தான் இருந்தது.
ஆனால் அது சவாலான காலம். தனிமையில் இருந்தபோது மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று செயல்பட்டதால் குணமடைந்துள்ளேன்.
தனிமையில் இருந்த போது நேரத்தை வீணடிக்காமல் யோகா பயிற்சியில் ஈடுபட்டேன். நம்பிக்கையுடனும் வலிமையுடனும் இருந்தேன்" என அஷ்வினி தெரிவித்துள்ளார்.
தற்போது முழுமையாகக் குணமடைந்து குடும்பத்தாருடன் பத்திரமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புகிறவர்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம் எனக் கூறியுள்ளார்.
தனிமையில் இருந்த போது குடும்பத்தார் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் தன்னைக் கைபேசி வழி தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது தமக்கு ஆறுதல் கூறி, நகைச்சுவையாகப் பலவற்றைப் பேசி நம்பிக்கை ஊட்டியதாகவும் அஷ்வினி அந்தக் காணொளிப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்தக் காணொளியைப் பலரும் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
Source: Times of India & Singapore Murasu