Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க எம்.பி பார்த்திபன்! ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க அதிகாரிக்கு கொலைமிரட்டல்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க எம்.பி பார்த்திபன்! ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க அதிகாரிக்கு கொலைமிரட்டல்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க எம்.பி பார்த்திபன்! ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க அதிகாரிக்கு கொலைமிரட்டல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 July 2019 6:44 AM GMT



சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, சமூக காடுகள் வனச்சரக அலுவலர் திருமுருகன். இவர் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூன் 16 - ஆம் தேதி ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, மேச்சேரி யூனியன், பெரியசாத்தப்பாடி கிராமத்தில் உள்ள, கரடு பகுதியானது வருவாய் துறைக்கு சொந்தமான அரசு தீர்வை ஏற்படாத புறம்போக்கு நிலம். இந்த நிலம் வனத்துறையின் மூலம் மரம் நடுவதற்காக கடந்த 1961 - இல் வனத்துறைக்கு வழங்கப்பட்டது.


காமனேரி முதல் மேச்சேரி சாலையின் தெற்கு புறம் உள்ள இக்கரட்டுப் பகுதியில் 1962 - இல் 40.05 ஹக்டேரில் வனத்துறை மூலம் பல இனச் செடிகள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. செடிகள் நடவு செய்வதற்கு முன்பும், பின்பும் இந்த கரட்டுப் பகுதிகளில் எந்தவித குடியிருப்புகளோ, நிலங்களோ இல்லை.


இப்பகுதியை, வனவர் வடிவேலுடன் கூட்டு களத்தணிக்கை மேற்கொண்ட போது, வேடன் கரட்டின் அடிவாரத்தில் இரும்பு கம்பத்தால் ஆன செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, அதில் தொடர்பு கொள்ள மொபைல் எண்: 83444 02838 குறிப்பிடப்பட்டிருந்தது. நான் ஜூன் மாதம் 18 - ஆம் தேதி காலை 10:00 மணியளவில் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு, “அரசு நிலத்தில் செக்போஸ்ட் ஏன் அமைத்துள்ளீர்கள். நீங்கள் யார்” என கேட்டேன். எதிர் முனையில் பேசியவர், “என்னுடைய பெயர் பழனிசாமி. காவலாளி. சேலம், தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனின் வேலையாள். குறிப்பிட்ட இடம் எம்.பி.க்கு சொந்தமானது, யாரையும் அனுமதிக்க முடியாது. அனுமதியின்றி உள்ளே நுழைந்தால், கை, கால்களை வெட்டிவிடுவோம். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், உள்ளே அனுமதிக்க கூடாது” என்று தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் கூறியதாக சொன்னார்.


அதன் பின் மாற்றுப்பகுதி வழியாக சென்று களத்தணிக்கை மேற் கொள்ளப்பட்டதில், கரட்டின் மேற்பகுதியில் சில விளை நிலம் இருப்பதும், அந்த விளை நிலங்களுக்கு செல்ல, கரட்டின் எல்லைப் பகுதியிலிருந்து, 167 மீட்டர் நீளத்துக்கு, ஒன்பது மீட்டர் அகலத்துக்கு மலையை குடைந்து, பல டன் கல், மண் வெட்டி கடத்தியதும் தெரிய வந்தது.


மேலும், வனத்துறைக்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள, 200 - க்கும் மேற்பட்ட வேம்பு, புளியன், கருங்காலி, கருவேலன், வாகை, உசில், புங்கன், சீமை அகத்தி, சீமை வெல்வேல், தைலமரம் உள்ளிட்ட பலஜாதி மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டும், எவ்வித முன்அனுமதியும் பெறாமலும், அரசு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து, தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.


இப்பாதையானது, 50 சென்ட் அளவுக்கு ஆக்ரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ளது. அதை எஸ்.ஆர்.பார்த்திபன், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, அவரின் சகோதரர் அமோக்குமாருடன் இணைந்து வனத்துறை அலுவலர்கள் சிலரின் துணையோடு ஆக்ரமிப்பு செய்து சாலை அமைத்து, அவ்விடத்தில் அலுவலகமும் நடத்தி வந்துள்ளார்.


சாலையில் இரும்பினாலான செக்போஸ்ட் அமைத்ததன் மூலம், வனத்துறை பணியாளர்கள் அரசுப் பணியை செய்யவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தார்சாலையானது கடந்த 2013 - ஆம் ஆண்டுக்கும், 2016 - ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த கரட்டுப் பகுதியின் மேல் எந்தவிதமான கிராமங்களோ, குடியிருப்புக்களோ இல்லாத நிலையில், கரட்டுப்பகுதியின் மேல் உள்ள ராஜமாணிக்கம் மகன் அசோக்குமார், சுப்பராவ் மகன் அனந்தபத்மநாபன் ஆகியோரின் நிலங்களுக்கும், எஸ்.ஆர்.பார்த்திபனின் அலுவலகத்துக்கு செல்வதற்காகவும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைக்காக, மரங்களை வெட்டி கடத்தி உள்ளதோடு, பல லட்சம் மதிப்புள்ள வனச்செல்வங்களை அழித்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியும், அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்ரமிப்பு செய்துள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபட்ட எஸ்.ஆர்.பார்த்திபன், அசோக்குமார், அனந்தபத்மநாபன், காவலாளி பழனிசாமி, இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது விசாரணை செய்து சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மேச்சேரி போலீஸ் எஸ்.ஐ. மனோன்மணி, காவலாளி பழனிசாமி, சேலம் தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், அவரது சகோதரர் அசோக்குமார், அனந்தபத்மநாபன் ஆகியோர் மீது, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை திருடுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தி.மு.க. ஆட்சி காலத்தில் சேலத்தில், வீரபாண்டி ஆறுமுகம் பெயரை பயன் படுத்தி அவரது ஆதரவாளர்கள் பலரது நிலங்களை ஆக்ரமிப்பு செய்ததால், தொழிலதிபர்கள், பொதுமக்கள் தி.மு.க.வினர் என்றாலே ஒரு வித அச்ச உணர்வுடன் இருந்தனர். முதல்வராக இரந்த ஜெயலலிதா, நில அபகரிப்பு தனிப்பிரிவு துவக்கி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட பலரை கைது செய்தார். அதன் பின்னர் சேலம் மக்கள் நிம்மதியடைந்தனர்.


தற்போது அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமி முதல்வராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சேலம் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த பார்த்திபன் மீது அரசுக்கு சொந்தமான நில ஆக்ரமிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தி.மு.க.வின் மீது மக்களுக்கு இருந்த சிறிது நம்பிக்கையையும் இழக்க செய்துள்ளது. வழக்கு பதிவு பற்றி அறிந்த தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


சேலம் மாவட்டம் மேச்சேரி போலீசாரால் கடந்த ஜூன் 18 - இல், எம்.பி. பார்த்தடபன் மீது பிணையில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போது, அவர் சென்னையில் இருந்தார். எம்.பி. பதவி ஏற்றவர் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை மேற்கொள்ள, வழக்குப்பதிவு குறித்த விபரங்களை, லோக்சபா சபாநாயகரிடம் தெரிவித்து, அனுமதி பெற்ற பின்னர், போலீசார் நடவடிக்கையை துவக்கலாம்.


ஆனால், போலீஸ் சார்பில் சபாநாயகருக்கு தகவல் செல்லும் முன், வழக்குப்பதிவு செய்யப்பட்ட எம்.பி.க்கு முதல் தகவல் அறிக்கையின் நகல், புகார் மனுவின் நகல் உட்பட அனைத்து ஆவணங்களையும், போலீசார் வழங்கி விட்டனர். இதனால், தி.மு.க. எம்.பி. பார்த்திபன், கடந்த ஜூன் 24 - இல், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேச்சேரி போலீசாரால் போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.


கடந்த 2013 - ஆம் ஆண்டு தமிழகத்தில், அ.தி.மு.க. ஆட்சியில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது நில ஆக்ரமிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட அடுத்த நிமிடமே, வழக்கு ஆவணங்களின் நகல்கள் அவருக்கு சென்றதால், அவர் உயர்நீதிமன்றம் சென்று பல வழக்குகளின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். அதே பாணியில் தற்போது, தி.மு.க. ஆதரவு போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக பார்த்திபனும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி விட்டதாக போலீசாரே புலம்புகின்றனர்.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News