பரவச போதை நிலையை தோற்றுவிக்கக்கூடிய காட் இலைகள் - ஆப்பிரிக்காவிலிருந்து சென்னை வந்திறங்கிய மர்ம பார்சல்!
பரவச போதை நிலையை தோற்றுவிக்கக்கூடிய காட் இலைகள் - ஆப்பிரிக்காவிலிருந்து சென்னை வந்திறங்கிய மர்ம பார்சல்!

எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபாபா நகரிலிருந்து சென்னை வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த பார்சல் ஒன்றிலிருந்து மொத்தம் 15.6 கிலோ காட் இலைகள் என சந்தேகிக்கப்படும் ரூ.40 லட்சம் பெறுமான போதைப்பொருளை விமான நிலைய சுங்கத்துறையின் அஞ்சல் வேவுத் தகவல் பிரிவினர் போதைப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்தனர். இந்தப் பார்சல் மீது உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்த குறிப்பு ஏதும் இல்லை என்பதால், இந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்தனர். இதற்குள் வெள்ளை / இளஞ்சிவப்பு உலோக வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்ட எட்டு பொட்டலங்கள் இருந்தன. இவற்றை மேலும் பிரித்து பார்த்ததில், காட் இலைகள் என சந்தேகிக்கப்படும் பச்சை நிற உலர்ந்த இலைகள் பாலித்தீன் பைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிரா என்றும் அழைக்கப்படும் இந்த காட் இலைகள் இந்தப் போதைப்பொருள்கள் மற்றும் மன மயக்கம் ஏற்படுத்தும் பொருள்கள் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட பொருட்களாகும். உறுதி செய்யும் சோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்ட இலைகளின் மாதிரி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் பார்சல் சென்னையில் உள்ள முகவரி ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முகவரியில் தேடுதல் நடத்திய அதிகாரிகள் இந்த முகவரி போலியானது என கண்டறிந்தனர், சென்னை நகரில் அநேக ஆப்பிரிக்க மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் சிலர் காட் போதை இலைகளுக்கு அடிமையாகி இருக்கலாம் என்றும் இவர்களில் சிலர் இதனைத் தருவித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஏமன் பகுதிகளில் காட் பயிர் செய்யப்படுகிறது. இந்த இலைகளில் கேத்தினோன், கேதைன், ஆம்ஃபிதமைன் போன்ற அல்கலாய்டு வேதிப்பொருட்கள் உள்ளன. இவை பரவச போதை நிலையை தோற்றுவிக்கக்கூடியவை. காட் இலைகளை அப்படியேயும், தேனீர் போன்று பானமாக தயாரித்தும் பயன்படுத்துகிறார்கள்.
முன்னதாக. 2018 மே மாதம் சுங்கத்துறையினர் கென்யாவிலிருந்து வந்த 7.9 கிலோ காட் இலைகளை சென்னை வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் பறிமுதல் செய்தனர்.