Kathir News
Begin typing your search above and press return to search.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை 2020 - எதற்கு இவ்வளவு எதிர்ப்பு? உண்மை நிலை என்ன?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை 2020 - எதற்கு இவ்வளவு எதிர்ப்பு? உண்மை நிலை என்ன?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை 2020 - எதற்கு இவ்வளவு எதிர்ப்பு? உண்மை நிலை என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 3:32 AM GMT

புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களைப்‌ பற்றிய 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020' வரைவு அறிவிப்பை எதிர்த்து ஒரு பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சில அரசு சாரா‌ தொண்டு நிறுவனங்களால்.

2006ல் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மீது கொண்டு வரப்பட்ட திருத்தங்களை ஒன்றிணைத்து பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்த சூழலியல் அனுமதி வழங்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்துவதே இந்த சுற்றுச்சூழல் தாக்க‌ மதிப்பீட்டு வரைவின் நோக்கம். சுற்றுச்சூழலின் மீதோ அல்லது வாழ்வாதாரத்தின் மீதோ ஒரு புதிய திட்டம் அல்லது தொழிற்சாலை, அது பெரியதோ சிறியதோ, ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளைப் பற்றி விளக்குவதால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியமாகிறது.

உதாரணமாக, ஒரு பாலத்தைக் கட்டுவதற்கு பல மரங்களை வெட்ட‌ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அந்த பாலத்தைக் கட்டும் முன் வழங்கப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அந்த மரங்கள் வெட்டப்படுவதற்கு ஈடாக என்ன செய்யப் போகிறார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ் கட்டாயமாக்கப்பட்டது. இது முன்னர் செயல்பட்ட திட்டக் குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை ஆற்றுப் படுகைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை சுற்றுச்சூழல் பார்வையில் ஆய்வு செய்யுமாறு உத்தவிட்டதன் விளைவாக கொண்டு வரப்பட்ட சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1994ல், விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கும் இந்த சுற்றுச்சூழல் தாக்க‌ மதிப்பீட்டு அறிக்கை கட்டாயமாக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ல் 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றங்கள்

2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் திருத்தப்பட்டு சுரங்கம் தோண்டுதல், அனல் மின்சக்தி திட்டங்கள், ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சிப்பணிகள், மின்முலாம் பூசும் தொழிற்சாலைகள் மற்றும் உலோக உருக்காலைகள் ஆகியவற்றுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் அனுமதி வழங்கும் கடமையை மாநில அரசுகளின் மீது சுமத்தியது. அதுவரை இந்தப் பொறுப்பு மத்திய அரசின் கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த சட்டத்திருத்தம் ஒரு தொழிற்சாலை செயல்பாட்டைத் தொடங்க அனுமதி வழங்க அவசியமாக பின்பற்றப்பட வேண்டியவை என்று 1986ம் ஆண்டு சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருந்த செயல்முறைகளை ஏழிலிருந்து நான்காக குறைத்தது. முக்கியமாக தேசிய அளவிலான திட்டங்களை பிரிவு "A" என்றும் மாநில அளவிலான திட்டங்களை பிரிவு "B" என்றும் வரையறுத்தது. பிரிவு 'B' யின் கீழ் மேலும் இரண்டு பிரிவுகளான B1, இதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அவசியம், and 'B2', இதற்கு இத்தகைய அறிக்கை தேவை இல்லை, ஆகியவற்றை வரையறுத்தது.

2020 வரைவு அறிக்கைக்கான தேவை

இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றமும் 2018 ஆம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயமும் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் சட்டதிட்ட மீறல்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளிலிருந்து விலகி சுற்றுச்சூழலியல் அனுமதி முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயமோ சூழலியல் முன்அனுமதி வழங்குவதற்கான நிபந்தனைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக கண்காணிப்பு செயல்பாடுகளை வலுப்படுத்துமாறு கூறியிருந்தது.

தற்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை எதிர்த்து தாம்தூம் என்று குதிக்கும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் அவரது பதவிக் காலத்தின்போது திட்டங்களுக்கு சுற்றுச் சூழலை காரணம் காட்டி தடை விதித்ததற்காக பெயர் போனவர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக அவர் பதவி வகித்த போது அவரது செயல்பாடுகளை 'தன்னிச்சையானது, விஞ்ஞானமற்றது மற்றும் வெளிப்படைத் தன்மை அற்றது' என்று அப்போதைய திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா விமர்சித்திருந்தார்.

உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு சூழலியல் அனுமதி வழங்கும் செயல்பாடுகளில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், இந்த திருத்தம் சட்ட விரோத செயல்களையும் நில அபகரிப்பையுமே ஊக்குவிக்கும் என்றும் வளர்ச்சியை அல்ல என்றும் கூறியுள்ளார்.

வரைவைப் பற்றிய தவறான புரிதல் மற்றும் கபடப் பிரச்சாரம்

இந்த விஷயத்தில் ஜெய்ராம் ரமேஷ் கருத்து கூற முன் வந்ததை வரவேற்ற தற்போதைய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவருடைய கருத்துக்கள் ஆதாரமற்றவை என்றும் தவறான புரிதலின் அடிப்படையிலானவை என்றும் கூறியுள்ளார்.

இந்த தவற்றை செய்தது ஜெயராம் ரமேஷ் மட்டுமல்ல. சில நாட்களாக வாட்ஸ்அப்பில் உலவி வரும் ஒரு வீடியோ ஏதோ மோடி அரசு சுற்றுச்சூழலை உண்டு இல்லை என்று செய்துவிடும் நோக்கத்துடன் கிளம்பி இருப்பதுபோல் இந்த வரைவறிக்கை பற்றி எச்சரிக்கை மணியை ஒலிப்பதாக இருக்கிறது.

மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த வீடியோ உருவாக்கப்பட்டு பரப்பப்படுவதாக தோன்றுகிறது. குறிப்பாக தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவிய பின் அனுமதி வழங்கும் 'post-facto approvals' என்ற விஷயத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் இந்த திருத்தம் குடியிருப்பு பகுதிகளையும் சுற்றுச்சூழலையும் அழித்து வருங்கால சந்ததியை பாதிப்புக்குள்ளாக்கிவிடும் என்று பொதுமக்களை அச்சுறுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர்.

இந்த வீடியோவில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள், அவற்றுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மற்றும் அவற்றின் மீதான கருத்துக்களை ஆராயும்போது கடந்த காலத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம், ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த பெரிய அளவிலான பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களை நினைவுபடுத்துகிறது.

இதற்கு வந்திருக்கும் எதிர்ப்பையும் அது யாரிடம் இருந்து வந்திருக்கிறது என்பதையும் பார்த்தால் பல விஷயங்கள் தெளிவாகின்றன. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பான்மையாக சில வலைதளங்களில் கூறப்பட்டிருக்கும் குறிப்பிட்ட விவரங்களையே copy-paste செய்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மே மாதத்தில் வர இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்னோடியாக கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் பின்பற்றிய வழிமுறைகளையே தற்போதும் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு மனநிலையை தக்கவைத்து தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளவே இந்த வரைவறிக்கையை ஆதாரமின்றி எதிர்மறையாக விமர்சித்து மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை 2020ன் சிறப்பம்சம்

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை செயல்படுத்தி வரும் வல்லுநர் R S‌ குமார் கூறுகையில் எந்த புதிய திட்டத்துக்கும் அனுமதி வழங்கும்‌ முன் அதைப் பற்றிய பொருளாதார மற்றும் சமூக மேலாண்மை வரைவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது இந்த வரைவறிக்கையின் சிறப்பம்சம் என்றார்.

முன்பிருந்த சட்ட திட்டங்களில் இந்த சிறப்பம்சம் இல்லை என்றும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்காக மக்கள் இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும்போது அதனால் உண்டாகும் பொருளாதாரத் தாக்கத்தை சரிசெய்ய இந்த குறிப்பிட்ட விதி உதவும் என்றும் கூறியுள்ளார். மேலும், விரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (rapid environment impact assessment) இல்லாமல் எந்தத் திட்டத்தையும் தொடங்க முடியாது என்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடமிருந்து அனுமதியும் பெறமுடியாது என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் வித்தியாசம் என்னவென்றால் முன்னர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற நீண்ட காலம் ஆன நிலையில் தற்போது மிக விரைவிலேயே அனுமதி கிடைத்துவிடும் என்றும் அவர் கூறினார். அனல் மின்சக்தி திட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் ஏற்படும் காலதாமதம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த வரைவறிக்கையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அனுமதி அளிப்பதற்கான வழி முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. அனுபவம் வாய்ந்த வல்லுனர்களைக் கொண்ட நிலைக்குழு மூலம் புதிய திட்டங்களுக்கு விரைவாக அனுமதி வழங்கப்படும்.

கடலோர மண்டல ஒழுங்குமுறை (CZR)

புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை கடலோர ஒழுங்குமுறை(Coastal Regulatory Zone) மற்றும் தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களை (Island Coastal Regulatory Zone) ஒழுங்குமுறைப்படுத்த முயன்றுள்ளது. இதுவரை இந்த இரு பகுதிகளின் மீதும் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் பல நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் சுதந்திரமாக விதி மீறலில் ஈடுபட்டு வந்தன. இந்த குறிப்பிட்ட திருத்தம் தான் இந்த வரைவறிக்கைக்கு எதிராக இவ்வளவு எதிர்ப்பு கிளம்ப காரணம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த திருத்தம் சட்டவிரோத வர்த்தகம், கடத்தல் மற்றும் தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் கட்டப்பஞ்சாயத்து ஆகிய சட்டவிரோத செயல்களை கட்டுப் படுத்தும் என்று கூறப்படுகிறது. முன்னாலிருந்த விதிகளின்படி கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் தலைகீழ் சவ்வூடுபரவல்(reverse osmosis) முறையில் நீரை சுத்திகரிக்கும் நிறுவனம் அமைக்க வேண்டும் என்றால் அதற்கு அதிகாரிகளிடமிருந்து எந்த அனுமதியும் பெற தேவையில்லை. ஆனால் புதிய வரைவறிக்கையின்படி அப்படி ஒரு நிறுவனத்தை எங்கே நிறுவினாலும் அனுமதி பெறுவது கட்டாயம்.

Post-Facto Approval குறித்த உண்மைகள்

சூழலியல் அனுமதி பெறாமலேயே பணிகளை தொடங்கி விட்டு பின்னர் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்பதுதான் இந்த புதிய வரைவறிக்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் முக்கியமான கருத்தாக இருக்கிறது. சுற்றுச்சூழல் சட்டதிட்டங்களை மீறும் பழக்கம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தி விதி மீறலை ஒரு வழக்கமாகவே ஆக்கி விடுவார்கள் என்றும் அதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறித்தான் இந்த வரைவறிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

துறை வல்லுனர்கள் இந்த விஷயத்தில் எதிர்ப்பாளர்கள் மக்களை தவறான புரிதலுக்கு உள்ளாக்குவதாகத் கூறுன்றனர். இன்னும் இதைப் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. முதல் கருத்து என்னவென்றால் ஏற்கனவே சூழலியல் அனுமதி பெறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் திட்டங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மட்டுமே இது பொருந்தும் என்பது. புதிய திட்டங்களுக்கு இது பொருந்தாது என்கிறார்கள்.

தற்பொழுது இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகளுக்குமே அவற்றால் சுற்றுச்சூழலில் எந்தவகையான தாக்கம் ஏற்படுகிறது என்று நன்றாக ஆய்வு செய்த பின்னரே அது தொடர்ச்சியாக இயங்க வேண்டுமா இல்லையா என்பது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று புதிய வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது கருத்து, இந்த post-facto அதாவது தொழிற்சாலை/உற்பத்தி அலகுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவிய பின் அனுமதி பெறுவது என்பது மண்பானைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், சமூகமாக செய்யப்படும் தூர்வாரும் பணிகள், அணைக்கட்டுகள், நீர்தேக்கப் பகுதிகள் மற்றும் தடுப்பணைகளைத் தூர்வாருதல், குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாய நீர்ப்பாசன பணிகளுக்காக தோண்டுதல் ஆகிய மண் தோண்டும் (sand mining) பணிகளையும், மாநில அரசுகளால் தோண்டுதல் அல்லாத (non-mining) என்று வரையறுக்கப்பட்ட சூரிய-அனல் மின்சக்தி திட்டங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமையும் தொழிற்சாலைகள் அல்லது அறிவிக்கப்பட்ட தொழிற்பேட்டைகள் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும் என்பது.

சிறிய வேதிப்பொருள் அல்லது மருந்து தயாரிப்பு நிறுவனம் கூட செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி பெற என்ன‌ மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்ற‌ வேண்டும் என்று மிகத் தெளிவாக வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சில சமூக செயற்பாட்டாளர்கள் என்ற போர்வையில் திரிபவர்களும் அவர்களுடன் தொடர்புடைய NGOக்களும் மக்களிடம் எடுத்துச் செல்லும் தகவல்களில் இருந்து முற்றிலும்‌ மாறுபட்டதாக இருக்கிறது.

உட்கட்டமைப்பு பணிகளுக்கான அனுமதி

இந்த வரைவறிக்கையை எதிர்ப்பவர்கள் உட்கட்டமைப்பு பணிகளுக்கு சூழலியல் அனுமதி தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் இதனால் சாலைப் பணிகளுக்கு ஏழை விவசாயிகளின் நிலங்களை எளிதாக அபகரித்து திட்டங்களை செயல்படுத்தும்‌ நிலை உருவாகும் என்றும் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் இதுவும் திட்டமிட்டு பரப்பப்படும் மற்றொரு தவறான தகவல். இந்த வரைவறிக்கையில் தேசப் பாதுகாப்பு ரீதியாக மிகுந்ந முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவதன் மூலம் நமது எதிரி-அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர் என்ற பெயரில் உலவுபவர்களும் NGOக்களும் செயல்படுகிறார்களோ என்ற அச்சம் உருவாகிறது. சமீபமாக சீனாவுடன் ஏற்பட்டிருக்கும் எல்லைப் பதற்றத்தில் எல்லைப் பகுதிக்கு படைகளையும் தளவாடங்களையும் நகர்த்த சரியான சமயத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும் உதவியாக இருந்ததை நாமே செய்திகளில் கண்கூடாகப் பார்த்தோமல்லவா?

வரைவறிக்கையில் 'முக்கியத்துவம்' வாய்ந்த சில தொழில்களுக்கு சூழலியல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு தளவாட தேவைகளை பூர்த்தி செய்ய நிர்வாக ரீதியான தடைகளை நீக்கி அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்து தொழில்களை நிறுவ உதவும்.

கருத்துக் கேட்பு கூட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020ஐ எதிர்த்து பிரச்சாரம் செய்து வருபவர்கள் புதிய திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு/எதிர்ப்பு மற்றும் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஆகியவற்றைப் பற்றி இரண்டு கருத்துக்களை முன் வைக்கிறார்கள். முதலாவது, இந்த புதிய வரைவறிக்கையில் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படும் என்பது.

இது முற்றிலும் தவறானது. எல்லா திட்டங்களுக்குமே கருத்து கேட்பு கூட்டம் அவசியம் என்று தான் வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய நீர்ப்பாசன பணிகள், அறிவிக்கப்பட்ட தொழிற்பேட்டைகளுக்குள் நிறுவப்படும் திட்டங்கள், சுற்றுச்சூழல் மீது எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாத திட்டங்கள் மற்றும் தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கேட்பு கூட்டங்களுக்கு வழங்கப்படும் கால அவகாசம் குறைக்கப்படுள்ளதைப் பற்றிக் கூறும் வல்லுநர்கள் இதனால் சமூக விரோத அமைப்புகள் மற்றும் திட்டம் தடைபட்டால் தனிப்பட்ட உபாயம் பெறும் நபர்களால் ஏற்படும் குளறுபடி தவிர்க்கப்படும்‌ என்று கூறுகிறார்கள். மொத்தத்தில் வரைவறிக்கையில் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வழங்கப்பட்டுள்ள மூன்று மாதம் அவகாசம் போதுமானதே என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கூட்டாட்சி முறையை புதிய வரைவறிக்கை சிதைக்கிறதா?

உண்மையில் இந்த வரைவறிக்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கிறது. இதில் எங்கும் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுவதற்கான பிரிவுகளோ விதிகளோ இல்லை. மாறாக வரைவறிக்கை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை அமைக்க மாநில அரசுகளுக்கு முழு உரிமை‌ வழங்குகிறது. யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த உரிமை உண்டு.

இந்த ஆணையத்தின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் என்றும் இதன் தலைவர் மாநில அரசால் நியமிக்கப்படுவார் என்றும் அவ்வாறு 45 நாட்களுக்குள் மாநில அரசு தலைவரை‌ நியமிக்கவில்லை என்றால் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் மதிப்பீடு செய்யப்படும் என்பது இந்த வரைவறிக்கையின் மற்றொரு அம்சம்.

ஆக மொத்தம் அனுமதி அளிக்கும்‌ செயல்முறைகளை விரைவு படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட திட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் புதிய வரைவறிக்கையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு சில மாற்றங்களைத் தான் #AntiEIA2020 ஆதரவாளர்கள் எதிர்த்து வருகின்றனர். ஆனால் அவர்கள் எதிர்க்கும் அளவுக்கு மாற்றங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பதும் வேண்டுமென்றே தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.



மேற்கண்ட பதிவு ஸ்வராஜ்யா இணைய இதழில் வெளியான ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News