Kathir News
Begin typing your search above and press return to search.

கப்பலோடு வருவேன், இல்லையேல் கடலிலே இறப்பேன்! வா.ஊ.சி அவர்களின் வீரவரலாறு

கப்பலோடு வருவேன், இல்லையேல் கடலிலே இறப்பேன்! வா.ஊ.சி அவர்களின் வீரவரலாறு

கப்பலோடு வருவேன், இல்லையேல் கடலிலே இறப்பேன்! வா.ஊ.சி அவர்களின் வீரவரலாறு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 2:25 AM GMT

இவருடைய பெயரை விடவும் இவருடைய பெயரின் முதல் எழுத்தக்கள் தான் அதிக பிரபலம். இவரை சுருக்கமாக "பிள்ளை" என்றும் அழைப்பதுண்டு ஆங்கிலேயர் காலத்திலேயே துணிச்சலாக சட்டம் பயின்றவர். இவர் பிறந்தது ஒட்டபிடாரத்தில். இவருடைய ஆறாம் வயதில் வீரப்பெருமாள் என்பவரிடம் தமிழ் பயின்றார். தன் பாட்டியிடம் பல "சிவன்" கதைகளை கேட்டும், தாத்தாவிடம் "ராமாயணம்" கேட்டும் வளர்ந்த குழந்தை இவர். இவருக்கு குழந்தை பருவம் முதலே விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் உண்டு கபடி, குதிரை சவாரி, நீச்சல், சிலம்பம் என அனைத்து விளையாட்டுகளிலும் அதீத ஆர்வம் காட்டுவாராம்.

அவருடைய வீட்டின் அருகாமையில் தாலுக்கா அதிகாரியாக இருந்த கிருஷ்ணன் என்பவரிடம் தினசரி மாலை ஆங்கிலம் பயில்வார். அவர் வேறு ஊருக்கு மாற்றலாகி போகவும், பிள்ளை அவர்களின் தந்தை கிராமவாசிகளின் உதவியுடன் ஒரு பள்ளியை கட்டி, அப்பள்ளிக்கு எட்டயபுரத்தை சேர்ந்த "அறம்வளர்த்தானந்தா பிள்ளை" என்பவரை ஆங்கில ஆசிரியராக நியமித்தார். பதினான்கு வயதில் தூத்துகுடியில் தன் உயர்கல்வியை தொடர்ந்தார் பிள்ளை.

சட்டம் படிப்பதற்க்கு முன்பும் சிறிது காலம் தாலுக்கா அலுவலகத்தில் கிளர்க்காகவும் பணியாற்றினார். சில காலங்களுக்கு பின்பு அவர் சென்னையில் "ராமகிருஷ்ணானந்தர்" என்ற துறவியை சந்தித்தார் இவர் சுவாமி விவேகானந்தா அஸ்ரமத்தை சேர்ந்தவர். "நாட்டுக்காக எதாவது ஒரு தியாகத்தை செய்ய வேண்டும்" என்று பொருள்படும் விதமாக "பிள்ளை" அவர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரை பின்னாளில் பெரும் வரலாற்றையே ஏற்படுத்த காரணமாய் அமைந்தது. அந்த சமயத்தில் தான் பிள்ளை அவர்களுக்கு மகாகவி பாரதியின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம் கிடைத்த நாள் முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் ஆங்கிலேயர்களுக்கு வேண்டாதவர்களாகவும் ஆகிப்போனார்கள்.

எந்த வித போட்டியும் இல்லாமல் தனியாக ஆட்சி செலுத்தி வந்தது பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம். அதை எதிர்த்து அக்டோபர் 1906 ஆம் ஆண்டு சுவதேசி கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார் பிள்ளை, அந்நிறுவனத்தின் மொத்த முதலீடு அன்றைய தேதியிலேயே 10 இலட்சம் ரூபாய். அதை மொத்தம் 40000 பங்குகளாக பிரித்தார்கள். ஒரு பங்கின் மதிப்பு ரூ.25. ஆசியாவை சேர்ந்த யார் ஒருவரும் பங்குதாரர் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர் திரு, பாண்டித்தேவர், ஜமீன்தார் மற்றும் "மதுரை தமிழ் சங்கத்தின்" தலைவர். அந்த சமயத்தில் ஜனாப் ஹாஜி முகமத் என்பவர் 8000 பங்குகளை 2 இலட்சம் கொடுத்து வாங்கினார் அது தான் நிறுவனத்தின் முதல் முதலீடு.

நிறுவனம் துவங்கிய புதிதில் எந்த கப்பல்களும் இந்நிறுவனத்திற்க்கு சொந்தமாக இல்லை. பிள்ளை முதலீடை ஈட்டும் பொருட்டு பங்குகளை விற்க இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். "நான் வந்தால் கப்பலோடு வருவேன் இல்லை கடலிலே மூழ்கி இறப்பேன்" என சூழுரைத்து துணிச்சலுடன் இந்த காரியத்தில் ஈடுப்பட்டவர். அவருடைய நம்பிக்கையின் விளைவாக கடலில் நீந்தியது சுதேசி கப்பல் நிறுவனத்தின் முதல் கப்பல். தூத்துகுடிக்கும் கொலம்போக்கும் (இலங்கை) இடையே ஆங்கிலேயர்களை எதிர்த்து பிள்ளையின் மனதிடத்திற்க்கு சாட்சியாய் கடலை கிழித்து விரைந்தது அந்த கப்பல்.

தூத்துகுடி ஆலைகளில் தொழிலாளர்களுக்கு போதிய சம்பளம் இல்லாததை கண்டித்து பிள்ளை அவர்களும் சுப்பிரமணிய சிவா அவர்களும் முன்னின்று நடத்திய போராட்டம் மாபெரும் வெற்றியை கண்டது. அந்த வெற்றியே மற்ற ஆலை தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கை வெளிசத்தை பாய்ச்சியது. தன்னுடைய மனோபலத்தை மற்றவர்களுக்கு கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பிள்ளை. அவருடைய மன உறுதியை எந்த தடைகளாலும் தகர்க்கவே முடியவில்லை. அரசியலை விட்டு வெளியேறுமாறு ஆங்கிலேயர்கள் கூறிய போதும் துணிச்சலுடன் மறுத்து சிறை சென்றவர் பிள்ளை.

அவருக்கு வழங்கப்பட்டது சாதாரண தண்டனை என்ற போதும் அவருக்கு மிகக்கடுமையான வேலைகளை கொடுத்து சோதித்து பார்த்தார்கள். கடும் வெயிலில் அவர் இழுத்த செக்கு இன்றும் வரலாற்று பக்கங்களில் அழுத்தமாக பதிந்துள்ளது.

சுதந்திரத்திற்கு பின்னும் இவருடைய வேட்கை குறையவேயில்லை.. கோவையில் வங்கி மேலாளராக பணியாற்றினார். இவருடைய வழக்கறிஞர் தொழிலின் உரிமத்தை ஆங்கிலேய அரசு ரத்து செய்திருந்ததால் அதை மீண்டும் தொடர உரிமம் கோரினார். அப்போது நீதிபதியாக இருந்த "வாலஸ்" அவர்கள் அதற்கு அனுமதியளிக்கவே அவர் நினைவாகவே "பிள்ளை" அவர்களின் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என பெயரிட்டார். எழுதுவதிலும் புத்தகம் பதிப்பிப்பதிலும் தன்னுடைய இறுதி காலத்தை கழித்து வந்தார் பிள்ளை.

இவருக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி தான் பிறந்தநாள்...!!!

அன்று கதைகள் பல கேட்டு வளர்ந்த "பிள்ளை" இவர், இன்று இந்த "பிள்ளையின்" கதையை வரலாறாய் பல பள்ளி குழந்தைகள் படிக்கின்றன.

அன்று வலியுடன் இவர் இழுத்த செக்கு..இன்று சரித்திரத்தின் சாட்சியாய் வளரும் தலைமுறைக்கு பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறது

அன்று ஆங்கிலேயரோடு போராடியாதால் தனக்கென தனியடையாளத்தை பெற்றவர், இன்று இவருடைய அடையாளம் தபால் தலைகளாய் தபால் துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது

வளமான குடும்பத்தில் பிறந்தாலும் நாட்டிற்க்காக அனைத்தையும் இழக்க தயாராக இருந்த தியாகம்,

பொருள்களை இழந்த பிறகும் அதை மீட்க முடியும் என்ற மன உறுதி,

எதிரிகளால் பல தடைகள் சோதனைகள் என எது சூழ்ந்தாலும் அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிய இவர் தம் நம்பிக்கை, துணிச்சல், திடம்

என அனைத்து நேர்மறை எண்ணங்களையும் கொண்டவர்! 140 ஆம் ஆண்டை நெருங்குகிற இவருடைய பிறந்த நாள் வேளையில் இவருடைய பெயரை நினைவு கூறுவது நமக்கும் புதிய உத்வேகத்தை கூட்டவே செய்கிறது.

இந்த வெற்றியாளர் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வா.ஊ. சிதம்பரனார்

Next Story